யதார்த்தா ராஜன்: சில நினைவுகள்
தொகுப்பாளர் ஸ்ரீஷங்கர்
கடற்காகம் வெளியீடு
தொடர்புக்கு: 78716 78748
விலை: ரூ.200
அன்று மதுரைக் கல்லூரி மாணவியாகக் கல்லூரிக்குள் நான் நுழைந்தபோது, வளாகத்தின் நுழைவாயிலில் இருந்த வேப்பமரத்துக்கு மேல் பெரியவர் ஒருவர் ஏறிக்கொண்டிருந்தார். நெஞ்சுவரை தொங்கும் வெண்தாடி, அடர்த்தியான வெண்மீசை, கலைந்த நீள்வெண்தலைமுடி, கசங்கிய அரைக்கை சட்டை, பழுப்பேறிய வெள்ளை வேட்டி சகிதமாகக் காட்சியளித்தவர், ‘யதார்த்தா ஃபிலிம் சொசைட்டி, மதுரைக் கல்லூரி தத்துவத் துறை இணைந்து நடத்தும் ஃப்ரிடா காலோ நூற்றாண்டு திரைப்பட விழா’ என்று அச்சடிக்கப்பட்ட துணிப் பதாகையை மரத்தில் கட்டினார்.
தத்துவத் துறையைச் சேர்ந்த மாணவி நான் என்றதும், ஏதோ பேச்சை விட்ட இடத்திலிருந்து தொடர்வதுபோல் ஃப்ளெக்ஸில் அச்சடிக்கப்பட்ட ஃப்ரிடா காலோவின் ஓவியங்களைக் கொடுத்து அரங்கை அலங்கரிக்கச் சொன்னார். சில மணித் துளிகளில் கல்லூரி கருத்தரங்கம் கலைக்கூடமாக உயிர் பெற்றெழுந்தது. அதன் பிறகு படவீழ்த்தியை (ப்ரொஜெக்டர்) கையாளச் சொல்லிக்கொடுத்தார். மைக்கலாஞ்சலோ, லியார்னாதோ டா வின்சி, வான் கா, ஃப்ரிடா என உலகப் புகழ் வாய்ந்த ஓவியர்களின் வாழ்வனுபவங்கள் திரையில் பிரம்மாண்டமாக விரிந்தன.
சினிமா பேசுவோம் வாங்க!
இருட்டில் திரைப்படம் பார்த்துவிட்டு வெளிச்சம் வந்ததும் பழக்க தோஷத்தில் அரங்கத்தை விட்டு வெளியேற எத்தனித்ததும் “எங்கே போறீங்க?” என்று அதே பெரியவர் தடுத்து நிறுத்தினார். திரையிடப்பட்ட படங்கள் எடுக்கப்பட்ட வரலாற்றுப் பின்னணியை, அவை முன்னிறுத்தும் அரசியல் தத்துவங்களை, அவை நுட்பமாகக் காட்சிப்படுத்தப்பட்ட விதத்தை உரையாடலாக முன்னெடுத்தார். பின்னாட்களில் அவர் மூலமாக சத்யஜித் ராய், ரித்விக் கட்டக், மிருணாள் சென், அடூர் கோபாலகிருஷ்ணன், ஐசன்ஸ்டைன், விட்டோரியோ டெசிகா, சார்லி சாப்ளின், இங்க்மார் பெர்க்மன், கிம் கி டுக் வரை அநேக அதியற்புதப் படைப்பாளிகளும் அவர்களது நூற்றுக்கணக்கான திரைக் காவியங்களும் மதுரையில் பலருக்கும் அறிமுகமாயின. அரசியலற்றவர்கள் யாருமில்லை என்பதை அவர் காட்டிய படங்களும் அதையொட்டி அவர் முன்னெடுத்த உரையாடல்களும் உணர்த்தின.
இப்படி மதுரையிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் உள்ள ஆயிரக்கணக்கானோருக்கு 40 ஆண்டுகளாகத் திரைப்பட ரசனையை ஊட்டியவர் யதார்த்தா ராஜன். பணிவாழ்க்கைக்கும் தனிவாழ்க்கைக்கும் இடையில் இடைவெளியின்றி இயங்கியவர். எந்த அளவுக்கு என்றால், புனே ஃபிலிம் அமைப்பில் தனக்கு சினிமா பயிற்றுவித்த பேராசிரியர் சதீஷ் பகதூரின் நினைவாக மகனுக்கு சதீஷ் என்று பெயரிட்டார். சினிமாவோடு தன்னை நிறுத்திக்கொண்டவரில்லை ராஜன். மு.ராமசாமியின் நிஜ நாடக இயக்கத்திலும் தன்னைப் பிணைத்துக்கொண்டார். முருகபூபதியின் நாடகத்தில் அரங்கப் பொருட்களைக்கூட யதார்த்தா ராஜனே சுமந்துவருவார். ஆவணப்பட இயக்குநர் அமுதனின் ஆவணப்பட, குறும்படத் திரை விழாவுக்குப் பார்வையாளர்களைத் திரட்டுவார்.
பணம் வசூலிக்காத ராஜா!
சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே திரைப்பட விழாக்கள் நடைபெறும் நிலை ஒரு காலத்தில் இருந்தது. அப்போது புனே திரைப்பட ஆவணக் காப்பகத்திலிருந்து ரயில் மூலமாக வரும் வட்டத் தகரப் பெட்டிகளில் வைக்கப்பட்ட படச் சுருளை சைக்கிளில் எடுத்துவந்து, மதுரையின் வெவ்வேறு இடங்களில் திரையிட்டார் ராஜன். அந்தக் காலம் மறைந்து டிவிடி, ஹார்ட் டிஸ்க் என்று சினிமா உருமாறியபோது, உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் படங்களை வாங்கி மக்களிடம் கொண்டுசேர்த்தார். படங்களோடு அதன் படைப்பாளிகளையும் அழைத்துவந்து உரையாடல்களை ஊக்குவித்தார். இணையத்தில் உலக சினிமா கொட்டும் காலம் வந்தபோதும் சோர்ந்துபோகாமல் பொது இடங்களில் திரையிட்டு, உயர் சினிமா ரசனை மேட்டுக்குடிக்கானது என்கிற தேய்வழக்கை மாற்றினார். குறிப்பாக, சினிமா என்றாலே முகம் சுளிக்கும் கல்விக்கூடங்களுக்குள் வெற்றிகரமாக நுழைந்து, ‘குழந்தைகள் திரைப்பட விழா’ மூலமாக மாணவர் சமூகத்தினரிடம் நல்ல சினிமாவை அடையாளம் காட்டினார். ‘ரெட் பலூன்’ படத்தைத் திரையிட்டுக் குழந்தைகளுடன் உரையாடும்போது, அவர் குழந்தையாகவே மாறிப்போனதை அன்பர்கள் பலர் நினைவுகூர்ந்துள்ளனர். மதுரை காமராஜர் பல்கலையின் மல்டிமீடியா ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகப் பொறுப்பேற்றபோதும் துறைக்கான பணிகளில் முடங்கிவிடவில்லை. திரைப்பட விழாக்கள் வசூல் குவிக்கும் உத்தியாக மாறியபோதும் அவர் ஒருநாளும் கட்டணம் வசூலித்துத் திரையிட்டதில்லை.
உலக சினிமாவைத் தனது உலகமாக வரித்துக்கொண்ட யதார்த்தா ராஜன், கடந்த ஆண்டு செப்டம்பர் 15 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். சினிமா பெட்டகமாகத் திகழ்ந்தநிலையிலும் தன்னை ஒருபோதும் முன்னிறுத்திக்கொள்ளாத அவருடைய பங்களிப்பை நினைவுகூரும் விதமாக ‘யதார்த்தா ராஜன் - சில நினைவுகள்’ புத்தகம் அண்மையில் வெளியானது. ராஜனுக்கு நெருக்கமான அம்ஷன் குமார், அ.ராமசாமி, சி.மோகன், கோணங்கி, ச.முருகபூபதி, ஆர்.ஆர்.சீனிவாசன், இரா.முரளி, ஸ்ரீரசா உள்ளிட்ட 23 ஆளுமைகளின் நினைவுகூரல்கள், ஒரு நேர்காணல், யதார்த்தா ராஜன் இயக்கிய 297 குறும்பட, ஆவணப் படங்களின் பட்டியல் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன. இந்தப் புத்தகத்தை ஸ்ரீஷங்கர் தொகுத்திருக்கிறார். வைகைக் கரை மைந்தர்களுக்குச் சர்வதேச சினிமா மணத்தை வாரி வழங்கிய யதார்த்தா ராஜன் போற்றுதலுக்குரியவர்.
- ம.சுசித்ரா. தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in