நாடக மேதை எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் நாடகப் பள்ளியில் பட்டை தீட்டப்பட்டவர் கோமல் சுவாமிநாதன். 10 ஆண்டுகளுக்கு மேலாக சகஸ்ரநாமத்தின் ‘சேவா ஸ்டேஜ்’ மூலம் அரங்கேறிய பல நாடகங்களில் தன்னுடைய தனிப்பட்ட நடிப்புத் திறனால்முத்திரை பதித்தார் கோமல் சுவாமிநாதன். அவரின் கலைப்பணி 1971-ல் அவர் தொடங்கிய ‘ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ்’ நாடகக் குழுவின் மூலம் மேலும் மெருகேறியது.
அவர் எழுதி, இயக்கிய 33 நாடகங்களும் நாடகத் துறையில் முத்துக்களாக இருந்தன. அதில் 27 நாடகங்களை தன்னுடைய ‘ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ்’ நாடகக் குழுசார்பில் அரங்கேற்றினார். அவரின் நாடகங்கள் நகைச்சுவை, நடுத்தரக்குடும்பத்தின் அன்றாடப் போராட்டங்கள் போன்றவற்றை மையங்களாகக் கொண்டிருந்தன. அதைத்தொடர்ந்து சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட நாடகங்களையும் கோமல் எழுதி, நாடகமாக்கி அரங்கேற்றினார். அப்படிஅவரால் நாடகமாக்கம் பெற்ற ‘தண்ணீர் தண்ணீர்’, நாடகத் துறையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
நாடகத்திலிருந்து திரைத் துறையில் புகழ் பெற்ற நட்சத்திரமான மனோரமா, “தான் மடிசார் கட்டிக்கொண்டு ஒரு பிராமணக் குடும்பத்தின் தலைவியாக நடிக்க வேண்டும்.அதற்கு ஒரு நாடகத்தை எழுதிக் கொடுங்கள்’’ என்று கோமல் சுவாமிநாதனிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். அவருக்காக பிரத்யேகமாக கோமல் எழுதிய நாடகம்தான் ‘என் வீடு என் கணவன் என் குழந்தை’. இந்த நாடகத்தில் மனோரமா பிரதான பாத்திரத்தில் நடித்தார். இந்தியா முழுவதும் இந்தநாடகம் 300 முறை மேடையேற்றப்பட்டிருக்கிறது.
கோமல் சுவாமிநாதனின் மகளான தாரிணி கோமல், தி.ஜானகிராமன், சுஜாதா உள்ளிட்ட எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை நாடகமாக்கம் செய்து ‘கோமல் தியேட்டர்ஸ்’ சார்பாக மேடையேற்றியுள்ளார். இந்நிலையில் கோமல் சுவாமிநாதனால் தொடங்கப்பட்ட ‘ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ்’ நாடகக் குழுவின் பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், கோமல் சுவாமிநாதன் எழுதிய பிரபலமான ‘என் வீடு என் கணவன் என் குழந்தை’ நாடகத்தை மீண்டும் அரங்கேற்ற இருக்கிறார் தாரிணி கோமல்.
இதுகுறித்து அவர் கூறிய தாவது:
“2013-ம் ஆண்டு முதல் என்னுடைய தந்தை கோமல் சுவாமிநாதனின் வழியில் நாடகத் துறையில் நானும் ஈடுபட்டுவருகிறேன். நாடகத் துறையில் பெரும் சாதனையாக போற்றப்படும் ‘தண்ணீர் தண்ணீர்’உட்பட பல நாடகங்களை இன்றையதலைமுறை நடிகர்களைக் கொண்டு நடிக்கவைத்து இன்றையதலைமுறை ரசிகர்களும் விரும்பும்வகையில் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
அந்த வரிசையில் மிகவும் பிரபலமான ‘என் வீடு என் கணவன் என்குழந்தை’ நாடகம் மனோரமா ஆச்சி நடித்தது. அந்த நாடகத்தை ‘ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸின்’ பொன்விழாவையொட்டி கோமல் தியேட்டர்ஸ் சார்பில் மேடையேற்றுகிறோம். நாடகத்தை நான் தயாரித்து இயக்குகிறேன். மனோரமா ஏற்று நடித்த பாத்திரத்துக்கு நியாயம் செய்யும் வகையில் லாவண்யா வேணுகோபால் நடிப்புப் பயிற்சியில் கடந்த 3 மாதங்களாக ஈடுபட்டுவருகிறார்.
வரும் அக்டோபர் 1, 2, 3 ஆகிய நாட்களில் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவின் உதவியோடு நாரத கான சபாவில் ‘என் வீடு என் கணவன் என் குழந்தை’ நாடகம் அரங்கேறவிருக்கிறது.
கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி முதலில் வரும் 50 சதவீதம்ரசிகர்கள் அரங்கில் அமர்ந்து நாடகத்தை காணலாம். மூத்த நாடகக் கலைஞர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்வை அக்.2 அன்று நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.