இலக்கியம்

நான் எப்படிப் படிக்கிறேன்? - க. பாலபாரதி

மு.முருகேஷ்

புத்தக வாசிப்பை எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள் என் ஆசிரியர்களே. ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது பழனிச்சாமி ஆசிரியரும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது சுப்பிரமணி ஆசிரியரும் புத்தகங்கள் தந்து, என்னுள் வாசிப்பைத் தூண்டியதில் முதன்மையானவர்கள்.

திண்டுக்கல் அருகேயுள்ள கதிரணம்பட்டி நான் பிறந்த கிராமம். தினமும் பள்ளி பிரேயரில் செய்திகள் படிக்க வேண்டும். நான்தான் செய்தி படிப்பேன். எங்கள் ஊரிலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வரும் தமிழக அரசின் ‘சீரணி’ செய்தி இதழையும், செய்தித்தாள்களையும் தொடர்ந்து படிப்பேன். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய ‘மலரும் மாலையும்’ பாடல் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

பிறகு, கவிஞர் தணிகைச்செல்வன் எழுதிய ‘சமூக சேவகி சேரிக்கு வந்தாள்’ கவிதைத் தொகுப்பும், பி.ஆர்.ராமேஸ்வரன் மலையாளத்தில் எழுதி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘பிணந்தின்னிகள்’ நாவலும் என்னை ஈர்த்த புத்தகங்கள். ‘இவர்தான் லெனின்’ எனும் லெனின் வாழ்க்கை குறித்த புத்தகமொன்று இன்னமும் என் நினைவில் இருக்கிறது. லெனினின் குழந்தைப் பருவம் தொடங்கி அவரது படங்களும், அதனருகில் லெனின் பற்றிய இருவரிச் செய்திகளுடன் இருந்த அந்தப் புத்தகம் என் மனதில் ஆழமாகப் பதிந்துபோனது.

நிரஞ்சனா எழுதிய ‘நினைவுகள் அழிவதில்லை’ என்னை வெகுவாய் கவர்ந்த புத்தகம். இதுவரை மூன்றுமுறைக்கு மேல் படித்திருக்கின்றேன். ஒவ்வொரு வாசிப்பிலும் எனக்கு இந்தப் புத்தகம் புதிய உத்வேகத்தை தருகிறது. இயக்கம் கட்டுவது பற்றியும், கொள்கை வழி உறுதியாய் நிற்பவர்களைத் தூக்கில் போடுவதைப் படிக்கும்போதும் என் மனம் கனத்துப் போகும். இடதுசாரி இயக்கத்தோடு என்னை இணைத்துக்கொள்ளத் தூண்டுதலாக இருந்ததும் இந்தப் புத்தகம்தான்.

பிறகு, மக்சிம் கார்க்கியின் ‘தாய்’, எங்கெல்ஸின் ‘குடும்பம் அரசு தனிச்சொத்து’, ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘வால்கா முதல் கங்கை வரை’, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு எழுதிய ‘ஒரு கம்யூனிஸ்ட்டின் நினைவலைகள்’ போன்ற நூல்கள் நான் விரும்பிப் படித்தவை. கொள்கை சார்ந்த நூல்களைப் படிப்பதோடு, இலக்கிய நூல்களையும் படிப்பது பிடிக்கும்.

புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், கு.சின்னப்ப பாரதி ஆகியோரின் சிறுகதைத் தொகுப்புகளைப் படித்திருக்கிறேன். பெண்ணியம் சார்ந்த நூல்களையும், பெண் கவிஞர்கள் எழுதிய நூல்களையும் தொடர்ந்து வாசித்துவருகிறேன்.

சமீபத்தில், பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய ‘சி.வி.இராமன் 125 விடுதலை வேள்வியில் விளைந்த இந்திய அறிவியல்’ எனும் புத்தகத்தைப் படித்தேன். தனது ‘இராமன் விளைவு’க்காக நோபல் பரிசு பெற்ற சி.வி. இராமனின் கண்டுபிடிப்பு பற்றியும், அவரது முயற்சியினால் கொல்கத்தாவில் அறிவியல் வளர்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது பற்றியும் எண்ணற்ற செய்திகள் இந்த நூலில் உள்ளன.

இப்படியொரு அறிவியல் அறிஞர் நம் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறார் என்பதை இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ள படிக்க வேண்டிய புத்தகமிது. புத்தகம் படிப்பதென்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிக்கத் தொடங்கிவிடுவேன். பயணப் பொழுதுகளிலும் புத்தகம் படிப்பேன். எங்காவது பேசச் சென்றால், அதற்கான தரவுகளைத் தேடிப் புத்தகங்கள் படிப்பேன். நாம் இதுவரை பார்த்தறியா உலகின் புதிய சாளரங்களாக இருந்து நமக்குப் பலவற்றையும் அறியத் தருபவை புத்தகங்களே.

க. பாலபாரதி,திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர்

SCROLL FOR NEXT