ஆகமமும் வேதங்களும், ஆகமமும் சித்தர்களும், ஆலய நுழைவும், ஆகமமும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு - ஒரு சட்டப் பார்வை முதலான தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்த நூல். தமிழக அரசின் தனிச் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை இல்லாத நிலையில், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்படாமல் இன்னுமேன் இருக்கிறார்கள் எனும் கேள்வி இந்த நூலைப் படிக்கும்போது இயல்பாய் நமக்குள் எழுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் நூலாசிரியர் இருப்பதால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து விரிவாக விவரித்து எழுதியுள்ளார். ஆகமம் குறித்தும், அனைவரும் அர்ச்சகர் ஆக விடாமல் எது தடுக்கிறது என்பது குறித்தும் நமக்குள் ஒரு புரிதலையும் தெளிவையும் தருகிறது இந்நூல்.
- மு.முருகேஷ்