கர்னாடக இசை உலகின் மூத்த மிருதங்க வாத்தியக் கலைஞர் உமையாள்புரம் சிவராமன். புகழ்பெற்ற இசைக் கலைஞரான அவருடைய வாழ்க்கையின் அகமும் புறமும் அடங்கிய 30 நிமிட ஆவணப்படம் ‘ஓவர்டோன்’. திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் பிரக்ருதி அறக்கட்டளையோடு இணைந்து இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார். இதன் திரையிடல் சமீபத்தில் நடந்தது.
அசுர வாத்தியம் என்று அழைக்கப்படும் மிருதங்கத்தையும் பாடும் பாடலுக்கேற்ப பாடகரின் குரலுக்கேற்ப எப்படி அனுசரித்து வாசிக்க வேண்டும்? சில இடங்களில் பாடலின் நுட்பமான சங்கதிகளைத் தொந்தரவு செய்யாமல், மிருதங்கத்தை வாசிக்காமல் இருந்த தருணங்கள்… 70 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத் துறையில் இருந்தாலும் பெண் கலைஞர் ஒருவருக்குக்கூடப் பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசிக்காதது ஏன்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையும், பல நுட்பமான தருணங்களையும் இந்த ஆவணப் படத்தில் பதிவு செய்திருக்கிறார் ராஜீவ் மேனன்.
ஆவணப் படத்தில், கர்னாடக இசை சாதியின் பிடியில்தானே இன்னமும் இருக்கிறது என்னும் கேள்விக்கு, சிவராமனின் பதில் இது: “நான் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன். எனக்கு மிருதங்கம் செய்துதரும் ஜான்சனின் மகன் அருண் குமரேஷுக்கு நான் மிருதங்கம் கற்றுத் தருகிறேன். சீக்கிரமே அவனுடைய அரங்கேற்றத்தை நடத்த இருக்கிறேன்”.
உமையாள்புரம் சிவராமனுக்கு மிருதங்கம் தயாரித்துத் தரும் ஜான்சனும் ஆவணப்படத் திரையிடலுக்கு வந்திருந்தார். அவருடைய மகனுக்கு மிருதங்கம் வாசிக்கக் கற்றுத் தர உமையாள்புரம் சிவராமன் எப்படி ஒப்புக்கொண்டார் என்று கேட்டோம். “ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த எங்களின் குடும்பம் 100 ஆண்டுக ளுக்கும் மேலாக மிருதங்கம் தயாரிக்கும் தொழில் இருக்கிறது. நான் ஐந்தாவது தலைமுறை. ஆனால் எங்கள் தலைமுறையைச் சேர்ந்த யாரும் இந்த வாத்தியத்தை வாசிக்கக் கற்றுக்கொள்ளவில்லை என்று சிவராமன் ஐயாவிடம் சொன்னேன். உடனே உன் மகனை அனுப்பு என்று சொல்லிவிட்டார். ஆறு ஆண்டுகளாக அவரிடம் மிருதங்கம் கற்றுக்கொண்டிருக்கிறான் என்னுடைய மகன் அருண் குமரேஷ்” என்றார் முகத்தில் பெருமிதம் பொங்க!
வாத்தியத்தின் நுட்பங்களையும் இசையுலக அனுபவங்களையும் ஒருசேரப் பேசும் இந்த ஆவணப்படம் கர்னாடக இசை வரலாற்றின் முக்கியமான பதிவுகளில் ஒன்று.