வண்ணநிலவனின் புதிய நாவல்
தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரும் நாவலாசிரியருமான வண்ணநிலவன் நக்சல் இயக்கத்தை மையமாகக் கொண்ட புதிய நாவல் ஒன்றை எழுதிவருகிறார். 1969 காலகட்டத்தில் மதுரையிலிருந்து சோமு என்னும் நடுத்தர வர்க்க இளைஞன், சாரு மஜூம்தாரால் ஈர்க்கப்பட்டு ஆயுதப் புரட்சியை நோக்கிச் செல்கிறான். அவன் குடும்பத்திலிருந்த மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் சோமுவின் ஆயுதப் புரட்சிப் பாதை இந்திய யதார்த்தத்தில் வெற்றிபெறாது என்று சொல்கிறார்கள். ஆனால் அதை மீறிச் சென்ற சோமு ஒரு கட்டத்தில் மார்க்சிய லெனினிய இயக்கத்திலிருந்து வெளியேறுவதாக நாவல் முடியும் என்கிறார் வண்ணநிலவன்.
கபாலத்துக்குள் அரிசி மூளை
நேபாளத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு பெருந்துயரங்களாலான வருடம். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 8 ஆயிரம் பேர் இறந்துபோயினர். அடுத்த சில மாதங்களில் மாதேஷிகளும் ஜனஜாதிகளும், புதிய அரசியலமைப்பு சாசனத்தில் தங்களைப் பாகுபாடு செய்யும் அம்சம் இருப்பதாகக் கருதிப் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரிடரும், அரசியல் நெருக்கடிகளும் ஓவியக் கலைஞர்கள் மனிஷ் ஹரிஜன், ஹிட்மேன் குருங் ஆகியோரின் படைப்புகளில் தாக்கம் செலுத்தியுள்ளன. கடந்த வாரத்தில் நடந்து முடிந்த இந்தியா ஆர்ட் ஃபேர் கண்காட்சியில், மனிஷ் ஹரிஜன் ஒரு நிர்மாணப் படைப்பை வைத்திருந்தார். அதன் பெயர் ஆஸ்பிசியஸ் சஸ்பிசியஸ் (மங்கலம் மர்மம்). மரத்துண்டுகள் மேல் தங்கத்தட்டுகளில் ‘பளபள’வென்று பொன்னில் மின்னும் மண்டை ஓடுகள்தான் அவை. அவற்றுக்குள் மூளையும் உள்ளன. மூளை, அரிசி, முளைப்பயிர் மற்றும் சோளத்தால் செய்யப்பட்டது. இந்தக் கபாலங்கள், வாழ்க்கையின் தொடரும் எதிர்மறைகளைப் பேசுபவையாக உள்ளன. நன்மை - தீமை, நேர்மறை - எதிர்மறை என இரண்டு அம்சங்களுமே வாழ்க்கைக்கு உதவியாக உள்ளன. “தானியங்களையும் மரத்தையும் உயிர்ப்பின் அடையாளமாகப் பயன்படுத்துகிறேன்” என்கிறார் மனிஷ் ஹரிஜன்.