மு.க.ஸ்டாலின்: இரண்டு புத்தகங்கள்
முதல்வர் மு.க.ஸ்டானைப் பற்றி இரண்டு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்: சொல் அல்ல… செயல்’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் கோவி.லெனின் எழுதியுள்ள புத்தகம், தலைப்புக்கேற்றவாறு மு.க.ஸ்டாலினின் அரை நூற்றாண்டு கால இடைவிடாத செயல்பாடுகளையும் அசாத்திய பொறுமையையும் பற்றி பேசுகிறது. தந்தையும் தலைவருமான மு.கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலும் கட்சியின் செயல் தலைவராக ஸ்டாலின் ஆற்றிய அரசியல் பணிகளிலிருந்து பின்னோக்கிய காலப் பயணமாக இப்புத்தகம் அமைந்திருக்கிறது. ‘ஜனநாயகன்’ என்ற தலைப்பில் ‘பேசும் புதிய சக்தி’ ஜெ.ஜெயகாந்தன் எழுதியுள்ள புத்தகம் கட்சிக்குள்ளும் வெளியிலும் ஸ்டாலின் சந்தித்து வெற்றிகொண்ட சவால்களை நினைவுகூர்கிறது. ‘கருணாநிதி நீந்தி வந்தது நெருப்பாறு எனில், ஸ்டாலின் கடந்துவந்தது கந்தக நதி’ என்று புகழ்மாலை சூட்டுகிறது. விமர்சனங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் தனது செயல்பாடுகளையே பதில்களாக்கிய ஸ்டாலின் அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மேம்பாட்டை உறுதிசெய்வார் என்று நம்பிக்கை கொள்கிறது. கோவி.லெனின், ஜெ.ஜெயகாந்தன் இருவருமே திருவாரூர்க்காரர்கள். சொந்த ஊர்ப் பாசமும் எழுத்துகளில் தெரிகிறது.
ஓசூரில் புத்தகக்காட்சி
தமிழ்நாடு முற்போக்கு சங்கத்தின் ஓசூர் கிளையும், ஓசூர் அனைத்துக் குடியிருப்போர் நலச்சங்கமும் இணைந்து நடத்தும் ஓசூர் புத்தகக்காட்சி நேற்று தொடங்கியது. தளி சாலையில் உள்ள சிஷ்யா பள்ளியில் 3 நாட்கள் நடைபெறுகிறது. நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு ஓசூர் நிலம் வழங்கிய படைப்பாளிகளால் உருவான ‘வாசல்’ என்ற நூலும் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நூலில் பா.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா, ந.பெரியசாமி, ஓசூர் மணிமேகலை, பத்மபாரதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஓசூர் படைப்பாளிகளின் படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.
புத்தகக் காட்சிகள்:
வளசரவாக்கம் புத்தகக்காட்சி: சென்னை வளசரவாக்கத்தில் 21.08.21-ல் தொடங்கிய புத்தகக்காட்சி 05.09.2021 வரை நடக்கிறது. இடம் - ஸ்ரீசாய் மஹால், கேசவர்த்தினி பேருந்து நிறுத்தம் அருகில், வளசரவாக்கம். நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. தொடர்புக்கு: 9884355516
ராஜபாளையம் புத்தகக்காட்சி: மதுரை மீனாட்சி புக் ஷாப் நடத்தும் மாபெரும் புத்தகக்காட்சி ராஜபாளையத்தில் இன்று தொடங்கி 13.09.2021 வரை நடக்கிறது. இடம் - காந்தி கலை மன்றம், ராஜபாளையம். நேரம்: காலை 10 மணி முதல்
இரவு 9 மணி வரை.
விருதுநகர் புத்தகக்காட்சி: மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்தும் புத்தகக்காட்சி விருதுநகரில் 13.08.21 அன்று தொடங்கி 13.09.2021 வரை நடக்கிறது. இடம் - ஏபிஆர் மஹால், ராமமூர்த்தி தெரு, விருதுநகர். தொடர்புக்கு: 8825755682
மேற்கண்ட மூன்று புத்தகக்காட்சிகளிலும் ‘இந்து தமிழ் திசை’யின் வெளியீடுகள் உட்பட அனைத்துப் புத்தகங்களும்
10% தள்ளுபடியில் கிடைக்கும்.
பாரதியையும் வ.உ.சி.யையும் கொண்டாடும் சென்னை வானொலி
பாரதியின் நினைவு நூற்றாண்டு செப்டம்பர் 11 அன்று கடைப்பிடிக்கப்படுவதால் அதையொட்டி சென்னை வானொலி நிலையம் சில முன்னெடுப்புகளைச் செய்கிறது. பாரதியின் பாடல்களிலிருந்து தங்களுக்குப் பிடித்த ஒரு சொற்றொடர், வரி குறித்து தற்கால ஆளுமைகள் பலரின் கருத்துகளை ஒலிபரப்புகிறது. இந்தத் தொடரில், பாரதிபுத்திரன், தியடோர் பாஸ்கரன், மாலன், மனுஷ்ய புத்திரன், ஆ.இரா. வேங்கடாசலபதி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இன்று தொடங்கி 11-09-21 வரை தினமும் காலை சென்னை வானொலியில் 7.35 மணிக்கும், எஃப்எம் ரெயின்போவில் 7.55 மணிக்கும், எஃப்எம் கோல்டில் 7.10 மணிக்கும் ஒலிபரப்பாகிறது.
இந்த ஆண்டு வ.உ.சி.யின் பிறந்த 150-வது ஆண்டு தொடங்குவதால் அதற்கான கொண்டாட்டத்தையும் சென்னை வானொலி முன்னெடுத்திருக்கிறது. 04-09-21 அன்று 10 மணிக்கு தமிழ் இலக்கியத்துக்கு வ.உ.சி.யின் பங்களிப்பு பற்றி ரெங்கையா முருகன் பேசுகிறார். 05-09-21 அன்று 8.15 மணிக்கு விடுதலைப் போராட்டத்தில் வ.உ.சி.யின் பங்கு பற்றி முகிலை ராஜபாண்டியன் பேசுகிறார்.