தீர்ப்பு வழங்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பார்த்து நீதிபதி இப்படிச் சொல்கிறார்: “குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தீர்கள் என்றால் தண்டனைக் காலமே முடிந்திருக்கும்”.
சந்திரகுமார் எழுதியுள்ள ‘லாக்கப்’ என்னும் நாவலில் வெளிப்படும் யதார்த்தம் எத்தனை குரூரமானது என்பதை உணர்த்த இந்த வரிகள் போதும். தாங்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததற்காகச் சொல்லொணாத கொடுமைகளை அனுபவித்த அப்பாவிகள் நீதிதேவனின் சந்நிதியில் நியாயம் வேண்டி நிற்கிறார்கள். நீதி வழங்க வேண்டியவர் அவர்களைப் பார்த்து அனுதாபத்துடன் இந்த வார்த்தைகளைச் சொல்கிறார் என்றால் நமது குற்றம், விசாரணை, நீதி ஆகியவை சார்ந்த அமைப்பு எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
உரிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் சந்தேகத்தின் பேரில் அல்லது அந்தச் சாக்கை முன்னிட்டு யாரையாவது பிடித்துக்கொண்டு போவது. அவர்களைக் கொடூரமாக அடித்துக் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பது. இந்தியக் காவல் துறையின் ஈடிணையற்ற இந்தப் புலனாய்வுத் திறமை பற்றிப் பல பதிவுகள் வந்திருக்கின்றன. அப்படி பாதிக்கப் பட்ட ஒருவரின் சுய அனுபவப் பதிவே இந்த நாவல்.
குமாரும் அவரது நண்பர்கள் மூவரும் செய்யாத குற்றத்துக் காக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். குற்றத்தை யாராவது ஒப்புக்கொண்டால்தான் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து வழக்கை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். ஆக, பிடிபட்டவர் குற்றவாளியோ, இல்லையோ வாக்குமூலமே பிரதானமானதாகிறது. ஒப்புக்கொள்ளவைக்க ஒரே வழி அடி, அடி, அடி.
சட்ட நடைமுறைகள், மேலிடத்து நிர்ப்பந்தம் முதலான காரணங்களால் காவல் துறையினருக்கு ஏற்படும் நெருக்கடியும் அவர்களிடம் இருக்கும் அதிகாரமும் அவர்களை இப்படி நடந்துகொள்ளவைக்கின்றன. அவர்களது ஆற்றாமையும் கையாலாகாத்தனமும் சேர்ந்து கைதிகளின் உடல்களை லத்திகளின் வேட்டைக் களமாக்குகின்றன. குமாரும் அவரது நண்பர்களும் என்ன ஆனாலும் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் அவர்கள்மீதான கொடுமைகள் பன்மடங்காகின்றன.
பல முறை விமர்சிக்கப்பட்டு, விவாதப் பொருளான இந்த அத்துமீறலை சந்திரகுமார் விவரிப்பதைப் படிக்கும்போது நமது அமைப்பின் மீதான கோபமும் அவநம்பிக்கையும் மேலும் பல மடங்கு அதிகரிக்கின்றன. லாக்கப் சூழல், கைதிகளுக்குக் கொடுக்கப்படும் மோசமான உணவு, குளிக்கவும் மலஜலம் கழிக்கவும் உள்ள கேவலமான ஏற்பாடுகள் ஆகியவை குறித்த விவரிப்புகள் வயிற்றைக் கலக்கும் அளவுக்குத் துல்லியமாகத் தரப்பட்டுள்ளன. அடிகளில்தான் எத்தனை விதம்!
ஆங்காங்கே தரப்படும் வர்ணனைகளும் சிந்தனைப் போக்குகளும் இந்த நூலுக்குப் புனைவின் சாயலைத் தருகின்றன. மற்றபடி இதை அசலான அனுபவப் பதிவு என்றே சொல்ல வேண்டும். குற்றங்களைக் கையாள்வதற்கான நமது அமைப்பு எந்த அளவுக்கு நுண்ணுணர்வுகளும் மனித முகமும் அற்றதாக இருக்கிறது என்பதைப் பிரச்சார தொனி இல்லாமல் யதார்த்தக் கதையாடலின் மூலமாகவே உணர்த்துகிறார் சந்திரகுமார்.
கற்பனைக்கும் அப்பாற்பட்ட சித்திரவதைகளை விவரிக்கும்போதும் கழிவிரக்கத்தின் சாயல் துளியும் இல்லாத பக்குவமான எழுத்து அவருடையது. இந்தக் கதையின் களத்தைத் தன் படைப்பாளுமையின் துணையுடன் விரிவுபடுத்தி வேறொரு தளத்துக்குக் கொண்டுசென்றிருக்கும் இயக்குநர் வெற்றி மாறனின் ‘விசாரணை’ திரைப்படம் தணியே விவாதிக்கப்பட வேண்டியது!
லாக்கப்
மு. சந்திரகுமார்
பக்கம்: 144, விலை: ரூ. 120
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு
சென்னை 600 078
தொடர்புக்கு: 044 6515 7525