இலக்கியம்

வயலில் நம் வாழ்க்கை!

வி.தேவதாசன்

விவசாயம் தொடர்பான நடைமுறை பிரச்சினைகளை எழுதும் எழுத்தாளர்கள் நம்மூரில் குறைவு. அவர்களில் முக்கியமான ஒருவர் ஆர்.எஸ்.நாராயணன். நீடித்த மற்றும் நிலையான விவசாயத்தை முன்னிறுத்தி தொடர்ச்சியாக எழுதிவரும் நாராயணன் பல்வேறு காலகட்டங்களில் ‘தினமணி’, ‘ஜனசக்தி’ உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய 20 கட்டுரைகள் இரு நூல்களாக வெளிவந்திருக்கின்றன. 1. இன்றைய விவசாயம், 2. வறட்சியிலும் வளமை.

‘உழவுத்தொழிலில் உயிர்ப்பலி ஏன்?’, ‘வீரியம் இழந்த விதைப் புரட்சி’, ‘பி.ட்டி பருத்தியின் ஆதிக்கம்’, ‘மரபணு மாற்றம் இந்தியாவை மலடாக்கும் சதி’, ‘உணவு ஏற்றுமதியும் உலக நிலவரமும்’, ‘மாற்றப்பட வேண்டிய உணவுக் கொள்கை’, ‘நீரில் வரைந்த நீர்க் கொள்கை’ இப்படிக் கட்டுரைகளின் தலைப்புகளே இந்தப் புத்தகங்களில் உள்ள கட்டுரைகள் அணுகியிருக்கும் பிரச்சினைகளை வீரியமாகச் சொல்லக் கூடியவை.

ஒரு கட்டுரையில் நாராயணன் எழுதுகிறார், “1957-ல் வெள்ள நிர்வாகத்துக்கு ஒரு மேல்நிலைக் குழு நிறுவப்பட்டது. 1964-ல் வெள்ளத் தடுப்பு அமைச்சரவைக் குழு நிறுவப்பட்டது. 1972-ல் வெள்ளத்தடுப்புடன் நிவாரணக் குழு அமைக்கப்பட்டது. 1978-ல் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கான வெள்ள நிவாரண நடவடிக்கைக் குழு நிறுவப்பட்டது. 1980-ல் ராஷ்ட்ரீய பாஹ் ஆயோக் 1980-ல் உருவானது. 1996-ல் ஒருங்கிணைந்த நீராதார வளர்ச்சித் திட்ட தேசிய ஆணையம் அறிவிக்கப்பட்டது. இவ்வளவுத் திட்டங்கள் நீர்வள அமைப்புகள் இருந்தும் மழை வெள்ள நீரைத் தடுத்து, தேக்கிவைக்க முடியவில்லை. அதிக அளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதுதான் கண்ட பலன். விவசாயிகளுக்கும், பாமர மக்களுக்கும் எஞ்சியுள்ள தண்ணீர் என்பது அவர்கள் விடும் கண்ணீர் மட்டுமே!”’

கூடவே இந்திய உழவர்களின் கண்ணீருக்குப் பின்னணியிலுள்ள அரசியலையும் அலட்சியத்தையும் அம்பலப்படுத்துகிறார் நாராயணன்.

முதல் புத்தகம் அரசுசார் பிரச்சினைகளையும் தீர்வுகளையும் பேசுகிறது என்றால், விவசாயிகள் தம் அளவில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், புதிய முயற்சிகளைப் பற்றிப் பேசுகிறது. ‘இயற்கை வேளாண்மை’, ‘நஞ்சை புஞ்சை நல்லுறவு வேளாண்மை’, ‘பருவமறிந்து பயிர் செய்தல்’, ‘சிறுதானியங்களின் சாகுபடி குறிப்புகள்’, ‘புஞ்சை உணவுகளின் பொருளாதாரம்’, ‘பழந்தமிழர் வாழ்வில் சீர்மிகு உணவுகள்’ என்று அவை கொண்டுசெல்லும் தளம் சிறப்பானது.

“ஒரு காலத்தில் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட சிறுதானியங்கள், இன்றைக்கு பெருநகரங்களில் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகின்றன. அதே நேரத்தில் சிறுதானியங்களின் தேவையும் அதிகரித்திருக்கிறது. ஆகவே, குறைந்த நீர்ப்பாசனத்தில் சிறுதானியங்களும், பருப்பு வகைகளும் பயிர் செய்தால் நல்ல லாபம் பெறலாம்” என்று சொல்லும் நாராயணன் அதற்கான வழிகளையும் காட்டுகிறார்.

வேளாண்மை/உணவு அரசியலில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய இரு நூல்கள்!

SCROLL FOR NEXT