இலக்கியம்

பல நூறு பக்கங்களான இரண்டு பக்கக் கதை

செய்திப்பிரிவு

பாரதியின் கவிதைகளுக்கு பஞ்சாங்கத்தின் உரை

பாரதியின் நினைவு நூற்றாண்டையொட்டி அவரது ‘கண்ணன் பாட்டு’க்கும் ‘கனவு’க்கும் உரையெழுதியிருக்கிறார் எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான க.பஞ்சாங்கம். ‘கண்ணன் பாட்டு’, பாரதியின் முப்பெரும் கவிதைகளில் ஒன்று. கண்ணனைத் தாயாய், தந்தையாய், சேவகனாய்த் துதிப்பது. ‘கனவு’ பிரிட்டிஷ் ஆட்சியின் மீது பற்றின்மையை வெளிப்படுத்துவதாய்த் தடைசெய்யப்பட்டது. பாரதியின் கவிதைகளுக்கு உரை அவசியமா என்ற கேள்வி எழுந்தாலும், அப்படியொரு காலத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் விளக்கத்தை மறுப்பதற்கில்லை. ‘கண்ணன் பாட்டு’க்கான உரையோடு அதை அபத்தவியல் கோட்பாடுகளின் நோக்கிலிருந்து ஆராயும் கட்டுரையையும் இணைத்திருக்கிறார் பஞ்சாங்கம். கண்ணன் என்ற இடத்திலெல்லாம் வாழ்வு எனும் சொல்லை மாற்றாக இட்டுப் பார்த்தால் இன்னும் துலக்கமாகும் என்று புதுப் பார்வை தருகிறார். ‘கண்ணன் பாட்டு’ உரையை காவ்யா பதிப்பகமும், ‘கனவு’ உரையை அன்னம் பதிப்பகமும் வெளியிட்டுள்ளன.

பல நூறு பக்கங்களான இரண்டு பக்கக் கதை

எம்.வி.வெங்கட்ராம் என்றாலே ‘காதுகள்’, ‘வேள்வித்தீ’, ‘நித்யகன்னி’ ஆகிய நாவல்கள்தான் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. ராமாயணப் பின்னணியில் அவர் எழுதிய ‘ஒரு பெண் போராடுகிறாள்’ நாவல், எம்.வி.வி. வாசகர்கள் தவறவிடக் கூடாதது. பழைய இந்திப் புத்தகம் ஒன்றில் அவர் படித்த இரண்டு பக்கக் கதைதான் எம்.வி.வி.யின் கற்பனையில் விறுவிறுப்பான கதைத் திருப்பங்களுடன் 580 பக்க நாவலாக விரிந்தது. கதையின் நாயகி ஜஸ்மா மட்டுமில்லை; எல்லாப் பெண்களுமே எல்லாக் காலத்திலுமே ஆண்களின் கண்களுக்கும் இச்சைகளுக்கும் எதிராகப் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. நீண்ட காலமாகப் பதிப்பில் இல்லாத இந்த நாவலை, எம்.வி.வி. நூற்றாண்டையொட்டி வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் நாடகக் கலைஞரும் ‘போதிவனம்’ பதிப்பாளருமான கருணாபிரசாத். அக்டோபர் 1 அன்று வெளிவரவிருக்கும் இந்நூலுக்கு முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் 30 வரையில் முன்பதிவு செய்யலாம். தொடர்புக்கு: 94440 50437

மொழிபெயர்ப்பாளருக்கான நல்கை

இந்திய மொழிகளிலான அல்புனைவு எழுத்துகளை ஆங்கிலத்துக்குக் கொண்டுசேர்க்கும் விதமாக மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்கை தர ஏற்பாடு செய்திருக்கிறது ‘தி நியூ இந்தியா’ அறக்கட்டளை. முதல் கட்டமாக மூன்று பேரைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறார்கள். தமிழ், இந்தி, உருது, வங்காளி, அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒடியா, மலையாளம், கன்னடம் எனப் பத்து மொழிகளிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளருக்கும் ரூ.6 லட்சம் உதவித்தொகையுடன், ஆறு மாத காலத்துக்கு மொழிபெயர்ப்புக்கான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி டிசம்பர் 31, 2021. தொடர்புக்கு: 9999003025, info@newindiafoundation.org

சென்னை, விருதுநகரில் புத்தகக்காட்சி

சென்னை: மேற்கு மாம்பலம் ஆரியகௌடா சாலையிலுள்ள பாணி க்ரஹா மண்டபத்தில் ஆகஸ்ட் 18 வரை புத்தகக்காட்சி நடக்கிறது. 10% தள்ளுபடி உண்டு. தொடர்புக்கு: 98843 55516

விருதுநகர்: ராமமூர்த்தி தெருவிலுள்ள ஏபிஆர் மஹாலில் செப்டம்பர் 12 வரை புத்தகக்காட்சி நடக்கிறது. 10% தள்ளுபடி உண்டு.
தொடர்புக்கு: 88257 55682

SCROLL FOR NEXT