ஜூலை 19 -எழுத்தாளர் ஆதவன் நினைவு நாள்;
தமிழ் நவீன இலக்கியவாதிகளின் வரிசையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெறுபவரான எழுத்தாளர் ஆதவன் நினைவு நாள் இன்று. ஆதவனின் இயற்பெயர் கே.எஸ்.சுந்தரம். இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் 1942இல் பிறந்தார். இந்திய ரயில்வேயில் சிறிது காலம் பணியாற்றினார். டெல்லியில் உள்ள நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியாவில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பணியிட மாற்றத்தால் பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்தார். 1987இல் சிருங்கேரியில் துங்கா நதியில் குளித்துக் கொண்டிருந்தபோது சுழலில் சிக்கி அகால மரணமடைந்தார். ஆதவனின் மனைவி ஹேமலதா, இவ்விணையரின் மகள்கள் சாருமதி, நீரஜா தற்போது பெங்களூருவில் வசிக்கின்றனர்.
45 ஆண்டுகளே வாழ்ந்தாலும் நூற்றாண்டுகளைக் கடந்தும் பேசப்படப்போகும் படைப்புகள் பலவற்றை எழுதிச் சென்றிருக்கிறார் ஆதவன். 1960களில் எழுதத் தொடங்கிய ஆதவன் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளில் நிறைய எழுதினார். சிறுகதைகள். நாவல்கள், குறுநாவல்கள், நாடகங்கள் என அனைத்துத் தளங்களிலும் இயங்கினார். ’சிங்கராஜ குமாரி’ என்னும் சிறுகதைத் தொகுப்பு, ’கானகத்தின் நடுவே’ என்னும் நாவல் ஆகியவற்றின் மூலம் அந்தக் காலகட்டத்தில் அவ்வளவாக கவனம் பெற்றிராத சிறார் இலக்கியத்துக்கும் பங்களித்துள்ளார். அவருடைய சிறுகதைகள் ஐந்துக்கும் மேற்பட்ட தொகுப்புகளாகப் பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில்கூட ‘கருப்பு அம்பா கதை’ என்னும் தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் ஆதவனின் 16 சிறுகதைகளை கிளாசிக் வரிசையில் பதிப்பித்துள்ளது.
அவருடைய முதல் நாவலான ‘காகித மலர்கள்’ 1977இல் முதல் பதிப்பு கண்டது. தமிழில் சூழலியல் சார்ந்த விவகாரங்களைப் பேசிய, சூழலியல் சீரழிவு குறித்த அக்கறையை மெலிதாக வெளிப்படுத்திய ஆரம்பக் கால நூல்களில் அதுவும் ஒன்று. அவருடைய இன்னொரு புகழ்பெற்ற நாவல் ‘என் பெயர் ராமசேஷன்’. பதின்பருவத்தைக் கடந்து இளமைப் பருவத்தில் அடியெடுத்து வைக்கிறவர்களின் மன அலைக்கழிப்புகளை பதிவுசெய்த முக்கியமான நாவல் இது. இவ்விரு நாவல்களுமே இன்றளவும் மிகப் பெரும் வாசகர் பரப்பைக் கொண்டிருக்கின்றன.
ஆதவன் மறைந்த ஆண்டில் அவருடைய ’முதலில் இரவு வரும்’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி எனத் தன்னைவிட வயதில் மூத்த பெரும் இலக்கியப் படைப்பாளிகளின் நன்மதிப்பைப் பெற்றவராக இருந்தார் ஆதவன். டெல்லியில் அவருடன் வசித்தவரான இ.பா.ஆதவனுக்கு ஒரு வகையில் ஆசிரியர் ஸ்தானத்தில் இருந்தவர். ஆதவனின் குறுநாவல் தொகுப்புக்கு இ.பா. எழுதிய முன்னுரையில் ஆதவனின் எழுத்துத் திறனை சிலாகித்திருப்பார்.
தனக்கு நன்கு பழக்கமான சுந்தரம்தான் ஆதவன் என்னும் பெயரில் கதைகளை எழுதுகிறார் என்று இ.பா., வேறோருவரின் மூலம் தெரிந்துகொள்கிறார். அடுத்த சந்திப்பில் ஆதவனிடம் இந்த ஆச்சர்யத்தை வெளிப்படுத்திப் பேசுகிறார். அதை ஆதவன் ஒரு புன்னகையுடன் கடந்துவிட்டு அடுத்த விஷயத்தை இயல்பாகப் பேசத் தொடங்குகிறார். தன்னுடைய முன்னுரையில் இ.பா. குறிப்பிட்டிருக்கும் இந்த நிகழ்வு, ஆதவனின் எழுத்துகளைப் படிக்கும்போது வாசகர்கள் மனங்களில் அவர் குறித்த சித்திரத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
ஆதவன் மறைந்தபின் அவரைப் பற்றி எழுதிய கட்டுரையில் அசோகமித்திரனின் வாசகங்கள் இவை: “முதல் சந்திப்புக்குப் பிறகு இந்த இருபது ஆண்டுகளில் அவர் மனிதனாகவும், எழுத்தாளனாகவும் ஒருமுறைகூட என் வியப்பையும் மதிப்பையும் பெறாமலிருந்ததில்லை.
இந்த இருபது ஆண்டுகள் எங்கள் இருவருக்கும் பலவிதத்தில் ஒரே மாதிரியாக இருந்துவிட்டது. பாத்திரங்கள் என்று எடுத்துக்கொண்டால் எங்கள் இருவர் படைப்புகளிலும் நிறைய ஆள் மாறாட்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகப் பலர் அபிப்பிராயப்பட்டிருக்கிறார்கள். ஆனால் 1960, 70களில் இந்திய நகரங்களில் இளமையைக் கழித்த, படித்த மத்தியதர வர்க்கத்தினரின் பிரத்தியேக ஆசை, அபிலாஷைகளையும், சோகங்களையும் நிராசைகளையும் ஆதவன் போல யாரும் தமிழில் பிரதிபலிக்க முடிந்ததில்லை”
அசோகமித்திரன் உட்பட பலர் குறிப்பிட்டிருப்பதுபோல் நடுத்தர வர்க்கத்து மனிதர்களே, ஆதவனின் பெரும்பாலான கதைகளின் முதன்மைக் கதாபாத்திரங்கள். அவர்களது ஆசைகள், நிராசைகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், மேன்மைகள், கீழ்மைகள் ஆகியவற்றோடு அவர்களில் போலித்தனங்களையும் தங்களின் இயலாமைகளை நியாயப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் கற்பித்துக்கொள்ளும் சால்ஜாப்புகளையும் அவர்களுக்கேயுரிய முன்தீர்மானங்களின் பொருளின்மையையும் எந்தவிதப் புரட்சி பிரகடனமும் இன்றி அதே நேரத்தில் ஒளிவு மறைவும் இன்றி இயல்பான புன்னகையுடன் போட்டுடைக்கின்றன ஆதவனின் பெரும்பாலான கதைகள். இவற்றோடு ஒரு நடுத்தரக் குடும்ப மனிதனின் அறம் சார்ந்த விழுமியங்கள் இலக்கியங்களிலும் சினிமாவிலும் கிளிஷேக்களாகக் கிண்டலடிக்கப்பட்டாலும் அவை மேன்மையானவையே என்று நிறுவுவதாகவும் அவருடைய கதைகள் அமைந்திருந்தன.
ஆதவன் என்னும் பெயரைக் கேட்டாலே முதலில் நினைவுக்கு வரும் சிறுகதையான ‘புதுமைப்பித்தனின் துரோகம்’ சிறுகதையில் பொருளியல் வாழ்வில் முன்னேற முடியாத நாயகனுக்கு தன்னுடைய இலக்கிய மேதமையினால் கிடைக்கும் பெருமிதம் அளிக்கும் நிம்மதி அவனுடைய பணக்கார நண்பனின் இலக்கியப் பரிச்சயத்தால் உடைபடுகிறது. அதோடு தனக்கு மேதமை இருக்கும் துறையில் தன்னுடைய நண்பனும் சிறந்து விளங்குவதை அறியும்போது நட்பைத் தாண்டிய பொறாமை தலைதூக்குகிறது.
இன்னொரு சிறந்த கதை ’ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்’. அறிவிலும் சிந்தனையிலும் நாகரிகத்திலும் பழக்கவழக்கத்திலும் சிறந்த முதிர்ச்சியடைந்த கனவான்களாகத் திகழ்பவர்களால்கூட அனைத்துவிதமான மனிதர்களுடனும் சகஜமாகப் பழக முடிவதில்லை, நெருக்கமான வட்டத்துக்குள் சிலரை அனுமதிக்க முடிவதில்லை. எல்லோருக்கும் நட்புக்கரம் நீட்ட முடிவதில்லை. காரணமே இல்லாமல் சிலரை வெறுக்கத்தான் வேண்டியிருக்கிறது இவை எல்லாமும்கூட இயல்பான மனித உணர்வுகள்தாம் என்பதைப் பேசும் கதை.
’தில்லி அண்ணா’ சிறுகதையில் பொருளியல் வாழ்வில் முன்னேற முடியாத சிலர், தங்களின் அந்தத் தோல்வியை மறைப்பதற்காக மட்டுமே பொருளியல் முன்னேற்றத்தைவிடப் பொருளியல் முன்னேற்றத்துக்கான வேட்கையை எள்ளி நகையாடுவதை அம்பலப்படுத்தியிருப்பார்.
இப்படி அவருடைய பெரும்பாலான சிறுகதைகள் மனிதர்களின் பெருமிதங்களுக்கும் கற்பிதங்களுக்கும் அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும் இயல்பான எதிர்மறை உணர்வுகளை காலில் ஏறிவிட்ட கண்ணாடிச் சில்லைத் தோண்டி எடுக்கும் மருத்துவரின் நாசூக்குடன் எடுத்து வைக்கின்றன. அவை மோசமானவை என்றோ அவற்றைக் கடந்து வாழ்வதே மேலான சிறந்த வாழ்க்கை என்றோ ஆதவனின் கதைகள் என்றுமே கூறுவதில்லை. அவை வெறும் மனித இயல்புகள் என்று உணர்த்துவதோடு நிறுத்திக்கொள்கின்றன.
ஆதவனின் குறுநாவல்களும் அவருடைய சிறுகதைகள், நாவல்களுக்கு இணையான சிறப்புகளைக் கொண்டவை. குறிப்பாக ‘பெண் தோழி தலைவி’ என்னும் குறுநாவலின் கதாநாயகி லல்லி என்னும் லலிதாவை சராசரி நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அந்தச் சூழலுக்கேயுரிய விழுமியங்களுடன் இயங்கியபடியே சுயமரியாதையும் சுயசிந்தனையும் தற்சார்பு வேட்கையும் உடைய பெண்ணாகச் சித்தரித்திருப்பார். அதுவே லல்லியைத் தமிழ்ப் புனைவுலகில் படைக்கப்பட்ட, மறக்க முடியாத பெண் கதாபாத்திரங்களில் ஒன்றாக ஆக்குகிறது.
ஆதவன் விபத்தில் இறக்காமல் இயல்பான மனித ஆயுளை நிறைவுசெய்திருந்தால் இன்னும் பல சிறந்த கதைகள் கிடைத்திருக்கும். அவருடைய எழுத்துகளைப் படிக்கும்போது மனத்தில் தோன்றும் அவருடைய அறிவார்ந்த புன்னகை தவழும் முகம் அந்த இழப்பின் வலியைச் சற்றேனும் ஆற்றுப்படுத்தக் கூடும்.