மாணவப் பருவத்திலேயே படிப்பதில் எனக்கு ஆர்வத்தைத் தூண்டியவர் எனது ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஆ.திராவிடமணி. மாணவர்களை உட்காரவைத்து, திராவிட நாடு, குடியரசு, விடுதலை ஆகிய நாளிதழ்களைச் சத்தமாக வாசிக்கச் சொல்வார். என் குரல் ‘கணீ’ரென்று இருப்பதால், அந்த வாய்ப்பு எனக்கு அதிகம் கிடைத்தது. எனது புத்தக வாசிப்பு முதலில் நாளிதழ் வாயிலாகத்தான் தொடங்கியது.
அப்படியான சூழலில்தான் எனக்கு, பெரியாரின் நூல்கள் வாசிக்கக் கிடைத்தன. திராவிடர் மாணவர் கழகத்தைச் சேர்ந்த நண்பர் ஏ.டி.ஜனார்த்தனன் எனக்கு நூல்கள் தந்து வாசிக்கச் சொல்வார். கல்லூரிக் காலங்களில் ஆங்கில நூல்கள் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்த நூலகம் எனது வாசிப்புத் தேடலுக்கு மிகப் பெரிய களமமைத்துத் தந்தது. அந்த நூலகத்தில் நான் படித்த பொருளாதாரம் சார்ந்த நூல்களே, என்னைக் கல்வியிலும் தங்கப் பதக்கம் பெறுகிறவனாக மாற்றின.
ஒரு நாளைக்கு நாளிதழ்கள் படிக்கக் குறைந்தது மூன்று மணிநேரமாவது ஆகிவிடும். மற்ற நேரங்களில் நூல்கள் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அனைத்துவகை நூல்களையும் படிப்பவன் நான். அரசியல், சமூகம், கல்வி, அறிவியல், மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் மதம் சார்ந்த நூல்கள் என அனைத்தையும் படிப்பேன். புதினங்களை அதிகம் படித்ததில்லை. ஆனால், வி.ச.காண்டேகரின் புதினங்கள் என்னை வெகுவாகப் படிக்கத் தூண்டியவை.
நூல்களோ நாளிதழ்களோ படிக்கையில் அவை எனக்கானவை என்றால், உடனே படிக்கப் படிக்க, கையிலுள்ள சிவப்புப் பேனாவால் அடிக்கோடிட்டுவிடுவது எனது பழக்கம். பிறர் படிக்கக் கொடுத்த நூல்கள் என்றால், தனியே ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொள்வேன். இந்தப் பழக்கம் இன்றளவும் தொடர்கிறது. கூட்டங்களுக்குச் சென்றுவிட்டு இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வந்தாலும், அரை மணி நேரமாவது நூல்கள் படித்துவிட்டுத்தான் தூங்கப் போவேன்.
படித்த கருத்து மறக்காமல் இருக்க இரண்டு வேலைகள் செய்வேன். ஒன்று, படித்ததை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதுவது.மற்றொன்று, யாராவது ஒருவரிடம் அது குறித்து பகிர்ந்துகொள்வது. இப்படி இரண்டையும் செய்துவிட்டால், அந்தக் கருத்து நிரந்தரமாக நம் மனதில் தங்கிவிடும். அதை நமக்குத் தேவையான நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்த முடியும்.
‘தந்தை பெரியாரின் தத்துவ விளக்கம்,' ‘இனிவரும் உலகம்', ‘பெண் ஏன் அடிமையானாள்?' உள்ளிட்ட பல நூல்களை இப்போது வாசித்தாலும் புதுப்புதுப் பார்வையைத் தருகின்றன.
- தொகுப்பு: மு.முருகேஷ்