தமிழ் எழுத்துருக்களின் பெருந்தொகுப்பு
தமிழில் 808 ஒருங்குறி எழுத்துருக்களையும், சாதாரண எழுத்து, தடித்த எழுத்து, சாய்வெழுத்து, தடித்த சாய்வெழுத்து உள்ளிட்ட 2102 எழுத்து வடிவங்களையும் கொண்ட ‘பாரதி அழகுத் தமிழ்’ என்ற தலைப்பிலான பெருந்தொகுப்பு ஒன்றை சாக்பீஸ் பவுண்டேஷனுடன் இணைந்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. அலுவலகப் பயன்பாடு, அச்சுப் பயன்பாடு, மின்புத்தக வடிவமைப்பு, இணையதள வடிவமைப்பு என்று கணினி சார்ந்த பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் இந்த எழுத்துருக்கள் அமைந்துள்ளன. தமிழ் எழுத்துருக்களுக்கு நிகரான ஆங்கில எழுத்துருக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதும், தமிழ் எழுத்துகளுக்கும் ஆங்கில எழுத்துகளுக்கும் இடையிலான அளவு வேறுபாடுகள், எழுத்துகளுக்கும் எண்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் முறைப்படுத்தப்பட்டுள்ளதும் இந்த எழுத்துருக்களின் சிறப்பம்சம். அனைவரும் கணினியில் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எழுத்துருக்களை https://freetamilfonts.com/ என்ற தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம்.
நூறாவது வயதிலும் தொடரும் எழுத்தியக்கம்
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான ‘ஜனசக்தி’ வி.இராதாகிருஷ்ணன் கடந்த ஜூன் 13 அன்று 100-வது வயதில் அடியெடுத்துவைத்திருக்கிறார். அவரது மொழிபெயர்ப்பில் வெளியான ‘உலக வரலாற்றில் பெண்கள்’ பரவலான கவனத்தைப் பெற்ற புத்தகம். 1942-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘ஜனசக்தி’யில் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் தொடர்ந்து அங்கு பணியாற்றியவர். பின்பு, ‘சோவியத் நாடு’ இதழில் 1967 முதல் 1990 வரைக்கும் பணி. தனது 90-வது வயது வரையிலும் தினசரி இரண்டு பஸ் மாறி ‘ஜனசக்தி’ அலுவலகம் சென்று பணியாற்றிவந்தவர், தற்போது வீட்டில் இருந்தபடியே எழுத்துப் பணியைத் தொடர்கிறார். வாசிப்பும் எழுத்துப் பணிகளும் தொய்வின்றித் தொடர்கின்றன. ‘தி இந்து’, ‘இந்து தமிழ்’ உள்ளிட்ட நான்கைந்து நாளேடுகளின் வாசிப்போடுதான் அவரது காலைப் பொழுதுகள் தொடங்குகின்றன. பத்திரிகைகளில் வெளிவரக்கூடிய முக்கியச் செய்திகளைக் கத்தரித்து, கோப்புகளில் பத்திரப்படுத்தும் வழக்கத்தை இன்னமும் பின்பற்றுகிறார். வி.இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையொட்டி அவரது மகளும் மருத்துவருமான சாந்தி எடுத்த காணொளிப் பேட்டி, https://www.youtube.com/watch?v=Nkpe2AwmbxQ என்ற சுட்டியில் பார்க்கக் கிடைக்கிறது. நூறாவது வயதில் அடியெடுத்துவைத்திருக்கும் வி.இராதாகிருஷ்ணன் இன்றைய தலைமுறைக்குச் சொல்லும் செய்தி இதுதான்: ‘இளைஞர்கள் அதிக அளவில் புத்தகங்களைப் படிக்க வேண்டும்; நன்றாக உழைக்க வேண்டும்.’