இலக்கியம்

காமிக்ஸ் கார்னர்: பதவிக்கு அலையும் பாக்தாத் மந்திரி!

வெ.சந்திரமோகன்

கனவெல்லாம் கலீஃபா
பிரகாஷ் பப்ளிஷர்ஸ்
அம்மன்கோவில்பட்டி, சிவகாசி-626189.
தொடர்புக்கு: 9842319755
விலை: ரூ.75

ஆதி மனிதன் படிப்படியாக நாகரிகமடைந்து ஆட்சி நிர்வாகத்துக்கு வந்த காலத்திலிருந்தே அரண்மனை சதி எனும் வழக்கம் தொடங்கியிருக்க வேண்டும். இன்றைய ஜனநாயக அமைப்பின் அரசியல் தளத்தில் இது வேறொரு வடிவை அடைந்திருந்தாலும், இது தொடர்பான பழங்கதைகளுக்கும், பிற கலை வடிவங்களுக்கும் எப்போதும் வரவேற்பு உண்டு. ‘மதியில்லா மந்திரி’ எனும் பொதுத் தலைப்பில் வெளியாகும் காமிக்ஸ் கதைகளும் இந்தப் பட்டியலில் சேரும்.

பாக்தாத் நகரின் கலீஃபாவாக இருக்கும் ஹரூன் அல் குட்பாய் ஒரு சொகுசுப் பேர்வழி. நாள் முழுவதும் பஞ்சு மெத்தையில் கிடப்பதைத் தாண்டி வேறொன்றும் அறியாத வெள்ளந்தி. கதையின் எதிர்நாயகனாக வரும் மதியில்லா மந்திரியாம் நா மோடி மஸ்தானுக்கு நினைப்பெல்லாம் கலீஃபாவின் அரியணை மீதுதான். ‘கலீஃபாவுக்குப் பதிலாக நான் கலீஃபாவாகியே தீரணும்’ என்று வெறிகொண்டு அலைபவர். அதற்காக எந்தச் சதியையும் செய்யத் தயங்காதவர். உடந்தையாக ஒரு ஜால்ரா பாயும் உண்டு!

இந்த மூவருடன், அவ்வப்போது புதியவர்களும் கதைக் களத்துக்கு ஏற்றவாறு இடம்பெறுவார்கள். கலீஃபாவைக் கவிழ்க்க நா மோடி மஸ்தான் போடும் திட்டங்களுக்கு உதவுவார்கள். நகைச்சுவைக் கதைகளுக்கே உரிய வகையில் எல்லாத் திட்டங்களும் இறுதியில் சொதப்பிவிடும். ‘கனவெல்லாம் கலீஃபா’ எனும் தலைப்பில் வெளியாகியிருக்கும் இந்த காமிக்ஸில் ஐந்து கதைகள். குறிப்பாக, ‘மந்திரியாரின் மாணாக்கன்’ கதை அட்டகாசமானது. கோபக்கார சுல்தான் ஒருவரின் மகன், மோடி மஸ்தானின் மாணவனாக வந்துசேர, அவனைப் பாடாய்ப்படுத்தி சுல்தானை பாக்தாத் மீது படையெடுக்கவைக்க மஸ்தான் திட்டமிடுவார். வகுப்பறையிலோ அந்தச் சுட்டிப் பையன் மஸ்தானை அரண்டு மிரளச் செய்துவிடுவான். காமிக்ஸின் ஒவ்வொரு பக்கத்திலும்... இல்லை… ஒவ்வொரு கட்டத்திலும் நகைச்சுவை தெறிக்கிறது. தரமான நகைச்சுவையை விரும்புபவர்களுக்குத் தாராளமாகப் பரிந்துரைக்கலாம்.

SCROLL FOR NEXT