ஓலம்
சரண்குமார் லிம்பாலே
ம.மதிவண்ணன்
கருப்புப்பிரதிகள் வெளியீடு
திருவல்லிக்கேணி,
சென்னை-5.
தொடர்புக்கு: 94442 72500
விலை: ரூ.240
மராத்திய எழுத்தாளரும், கவிஞரும், இலக்கிய விமர்சகருமான சரண்குமார் லிம்பாலே, ‘தலித் பார்ப்பனன்’ நூல் மொழிபெயர்ப்பு வழியாக ஏற்கெனவே தமிழ் வாசகர்களிடம் பரிச்சயமானவர். அவரது ‘ஓலம்’ நாவலை இப்போது தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் ம.மதிவண்ணன். ஒடுக்கப்பட்டவர்கள் சாதிரீதியாகத் தாங்கள் எதிர்கொண்டுவரும் தீண்டாமையையும் வன்முறையையும் இழிவுகளையும் விவரிப்பது தலித் இலக்கிய வகைமையில் முக்கியமான அணுகுமுறையாக இருந்துவருகிறது. இந்த நாவலோ வேறொரு முக்கியமான புள்ளியைத் தொடுகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கும், அவர்களுடைய அதிகாரத்துக்காகத் துணைநிற்கும் இயக்கங்களைக் கண்டு, ஆதிக்கச் சாதிகளுக்கு எழுந்திருக்கும் அச்சத்தை விவரிப்பதே ‘ஓலம்’ நாவலின் மையப்புள்ளி. ஒடுக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறையோடு இப்போது இந்தப் பிரச்சினையும் சேர்ந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை நான்கு இளைஞர்கள் சேர்ந்து, பாலியல் வன்கொடுமை செய்து, அவளைக் கொன்றுவிடும் சம்பவத்திலிருந்து தொடங்குகிறது நாவல். இளைஞர்களைக் காப்பாற்றுவதற்காக அரசியல் அதிகாரம் செல்லும் எல்லைகள், தலித் இயக்கங்களைக் கண்டு எழும் அச்சம், எரிச்சல், வெறுப்பு ஆகியவற்றோடு இப்படியான துர்சம்பவம் ஒரு பெரும் மக்கள் திரளை எப்படிப் பின்னோக்கி இழுக்கிறது என்பதும் பேசுபொருளாகியிருக்கிறது. கதாபாத்திரங்களின் இயல்புகளையும் மனவோட்டங்களையும் உரையாடல்களையும் கறுப்பு வெள்ளையில் அல்லாமல் அணுகியிருந்தால் இன்னும் பல நுட்பமான இடங்களுக்கு நாவலாசிரியரால் பயணித்திருக்க முடியும். எடுத்துக்கொண்ட களத்துக்கும் நல்லெண்ணத்துக்கும் எதிரான திசைக்கு இட்டுச்செல்லவும் இடம் தருகிறது என்பது துரதிர்ஷ்டவசமானது.