இலக்கியம்

அதிகாரத்துக்கு இரையாகும் அன்றாட வாழ்க்கை

செய்திப்பிரிவு

சின்னக்குடை
அழகிய பெரியவன்
நற்றிணை வெளியீடு
திருவல்லிக்கேணி,
சென்னை-5.
தொடர்புக்கு:
044 – 2848 1725
விலை: ரூ.160

அழகிய பெரியவனின் புதிய குறுநாவலான ‘சின்னக்குடை’யில், மீண்டும் ஒரு சமகாலப் பிரச்சினையைப் பேசுபொருளாக்கியிருக்கிறார். இசைக் கலைஞன் ஒருவன், இசை நிகழ்ச்சிக்காக வேறொரு ஊருக்குச் சென்றபோது, ஒரே நாளில் ஒரு பெண்ணைக் காதலித்து அழைத்துவந்து திருமணம் செய்துகொண்ட செய்திதான், தன்னை வியப்பிலாழ்த்தி, இந்நாவலை எழுதத் தூண்டியது என்கிறார் அழகிய பெரியவன். இந்தக் குறிப்பைப் பார்த்துவிட்டு, இது ஒரு காதல் கதை என்று நினைத்தீர்கள் என்றால் ஏமாந்துபோவீர்கள். இப்படித் திருமணம் செய்துகொண்ட தம்பதியின் வீட்டை, சாலை விரிவாக்கத் திட்டத்துக்காக அரசு பறித்துக்கொள்ளும்போது, அவர்களுடைய குடும்பம் என்ன நிலைக்கு ஆளாகிறது என்பதைச் சொல்வதே நாவலின் அடிநாதம். வீடும் நிலமும் போன பிறகாக அரசு இயந்திரத்துடன் இவர்கள் மல்லுக்கட்டுவது ஒரு புறம் என்றால், இந்த நிகழ்வுக்குப் பிறகாக, பாதிக்கப்பட்டவர்களின் மனமும் நடவடிக்கையும் எவ்வளவு மோசமான நிலைக்குச் செல்கிறது என்பதை விவரிப்பது இன்னொரு முக்கியமான புள்ளி. அந்தக் குடும்பத்தினுடைய அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன மகிழ்ச்சிகள்கூடக் காணாமல்போய், பெரும் இறுக்கத்துக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். இதோடு, அடித்தட்டு இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, கிறிஸ்தவம் மீதான விசாரணை, உடல் வலுவுக்கும் மன வலுவுக்குமான தொடர்பு, குடும்ப உறவுக்கும் காமத்துக்குமான பந்தம் என வேறு சில விஷயங்களையும் இந்தச் சின்ன நாவலுக்குள் அடைத்து வைத்திருக்கிறார். அடிப்படையில், இந்த நாவல் எழுப்பும் கேள்வி இதுதான்: சீறும் புயலும் மழையும் சேர்ந்தால் சின்னக்குடை தாங்குமா?

SCROLL FOR NEXT