இலக்கியம்

தமிழகத்தில் சாதியம்: ஒரு குறுக்குவெட்டுப் பார்வை!

அபிஷேக்

பத்திரிகைகளில் வெளியான செய்திகளைத் தொகுத்து, பின்னாளில் பார்ப்பதே வரலாற்றின் ஒரு பகுதியைப் பார்ப்பதுதான். நம் சமூகத்தில் சாதி மற்றும் வகுப்புவாத மோதல்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்துத் திரும்பப் பார்ப்பது என்பது கூடுதல் முக்கியத்துவம் உடையது. சமூக மாறுதலின் இயக்க விதிகளைப் புரிந்து கொள்ள இது உதவும்.

மூத்த பத்திரிகையாளர் எஸ்.விஸ்வநாதன் ‘ப்ரன்ட் லைன்’ இதழில் சிறப்புச் செய்தியாளராகப் பணியாற்றிய சுமார் 20 ஆண்டு காலகட்டத்தில் (1994-2005) இந்த விஷயம் தொடர்பாகப் பல முக்கியமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவை இப்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கிறது, ‘தலித் மக்கள் மீதான வன்முறை’ என்ற பெயரில். “இப்போலாம் யாருப்பா சாதி பார்க்குறாங்க?” என்று கேட்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. ஒவ்வொரு வன்முறைக்கும் பின்னணியில் எப்படியான காரணங்கள் புதைந்திருக் கின்றன என்பதை விஸ்வநாதன் விவரிக்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. ஒரு சின்ன உதாரணம், அம்பேத் கரின் நூற்றாண்டு விழாவும் பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமலாக்கமும் தமிழகத்தில் தலித் மக்களிடம் ஏற்படுத்திய உற்சாகம் சாதியத்தால் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்பதை உணர்த்தும் கட்டுரைகள்.

அரசியல் மற்றும் சமூக பொருளாதாரக் காரணி களின் பின்னணியில், தலித் மக்களின் பிரச்சினைகளைப் பார்க்கவும் அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் அவர்களுடையவை மட்டுமே அல்ல என்பதை நாம் உணரவும் இந்நூல் நமக்கு உதவும்.

தலித் மக்கள் மீதான வன்முறை
எஸ். விஸ்வநாதன்
ரூ. 200
வெளியீடு: சவுத் விஷன் புக்ஸ், சென்னை-86.
தொடர்புக்கு: 94451 23164
southvisionbooks@gmail.com

SCROLL FOR NEXT