இலக்கியம்

கடலில் அல்லி பூக்கும் அதிசயம்

மானா பாஸ்கரன்

பூரண பொற்குடம்
பழநிபாரதி
கொன்றை வெளியீடு
போரூர், சென்னை-16.
தொடர்புக்கு: 90940 05600
விலை: ரூ.140

இதுவரை வெளிவந்திருக்கும் பழநிபாரதியின் நூல்களிலிருந்து ‘பூரண பொற்குடம்’ மாறுபட்ட உருவில் வந்துள்ளது. காலம் காலமாகச் சொல்லப்பட்ட காதல்தான். அதே காதலை பழநிபாரதியின் மொழி கடலில் அல்லியைப் பூக்க வைத்திருக்கிறது.
நிபந்தனையற்ற அன்பின் பெருவெளிப் பயணமான இந்நூலில் எங்கு கண் வைத்தாலும் காதல் பாசியில் பார்வை வழுக்கியோடுகிறது. ‘அன்பிலான எதையும்/ அகழ்வாயாதே/ பறித்த வெற்றிடத்திலும்/ மீளப் பரந்து மணக்கும்/ அரூப மலர் அது/ அதன் வேர்கள்/ வானத்தில் படர்பவை./ அன்பின்/ சிறு இறகைப் புறக்கணித்தாலும்/ உன் நினைவெளியெங்கும்/ குறுக்கும் நெடுக்கும்/ நிறையும் பறவைகள்./ ஒரு பூ மலர/ ஒரு தும்பி அமர/ அதுவதுவே அதனதன் சாட்சி’. மனம் சில கணம் கற்பனையில் ஓடிச் சென்று ஒரு மரத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பிவந்து முன்பு அமர்ந்திருந்த அதே நிழல் மரத்தடியில் அமர்ந்துகொள்வது மாதிரி, வானத்தில் வேர்விடும் அரூப மலரின் வாசனையை இந்தக் கவிதையில் உள் நுழைத்திருக்கிறார் பழநிபாரதி.

‘புல் அசைய/ பூ மலர/ தாழ்வாரக் காற்றில்/ அகங்குழைந்து/ அங்கேயே நிற்கிறது/ தினைக்குருவி./ உன் நிலத்தின் சித்திரத்தில்/ அதன் கீச்சிடல்/ அழைத்துவருகிறது/ இன்னொரு குருவியை.’ ஜாய்ஸ் கில்மர் தனது மரங்கள் பற்றிய கவிதையில் ‘தன் பசிகொண்ட வேரால் பூமியின் மார்பில் பால் குடிக்கிறது’ என்று எழுதிய வரியைப் படித்து மறக்காத தமிழ் வாசகர்கள் மேற்சொன்ன பழநிபாரதியின் கவிதையையும் பத்திரப்படுத்துவார்கள்.

‘உன் அளவளாவலில்/ பூத்த மலர்கள்/ காற்றில் கை நீட்டி/ உன்னைத் தேடித் தேடி/ உதிர்கிறது ஒவ்வொன்றாக./ ஒவ்வொரு பூவையும்/ முதற் பூவாய் பார்த்தாய்/ இப்போது கடைசிப் பூ/ எதுவெனத் தெரியவில்லை.’ அனுபவித்துத் தீராத அன்பின் நீட்சியை, சொடக்கு எடுத்துவிடும் நொடியில் சொல்லிவிடும் அன்பின் குமிழாகப் படர்கிறது இந்தக் கவிதை.

‘இப்போது இங்கே வேண்டுவது/ ஒரு குறுமழை/ மழையில் நனையும்/ உன் தோட்டத்தின் சிறுமலர்./ காற்றில் தலை சாயும் மலரை/ தன்னிரக்கத்துடன் முத்தமிடும் உன் கண்கள்/ இன்னும் கொஞ்சம் காற்று/ இன்னும் கொஞ்சம் மழை/ இன்னும் கொஞ்சம் கண்கள்.’ பிரார்த்தனைகள் இறைந்து கிடக்கும் பிரகாரங்களில் காதலின் மென்பொருளை வேண்டுகிற இந்தக் கவிதை புறாக்களுக்குத் தூவும் தானியங்களாகின்றன.

நல்ல கவிஞர்கள் திரைப்படப் பாடல் எழுதப்போனால் அவர்களை வெகுஜன நீள்வரிசைப் பட்டியலில் தள்ளிவிடும் விபத்து இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து நிகழ்கிறது. அந்தப் பிம்பத்தை, உடைந்த கண்ணாடிச் சிதறல் கொண்டு கீறிவிட்டுவிடுகிறது பழநிபாரதியின் இந்தத் தொகுப்பு. தன் ஒரு கண்ணால் இன்னொரு கண்ணைப் பார்ப்பது போன்றதொரு மொழியழகு இந்தக் கவிதைப் புத்தகத்துக்கும் நல்லடையாளம் தந்திருக்கிறது.

- மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@hindutamil.co.in

SCROLL FOR NEXT