தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்ட இலக்கண ஆய்வுகள், சங்க கால இலக்கியச் செய்திகளை அடிப்படையாகக் கொண்ட சமூகவியல் ஆய்வுகள், இலங்கைத் தமிழர்களைப் பற்றிய பண்பாட்டு ஆய்வுகள், பிற்காலத் தமிழும் பிற திராவிட மொழிகளும் சம்ஸ்கிருதமும் பற்றிய ஜார்ஜ் எல்.ஹார்ட் கட்டுரையின் தமிழாக்கம் என்று 20 கட்டுரைகளுடன் அடர்த்தியான உள்ளடக்கத்தோடு வெளிவந்திருக்கிறது ‘மணற்கேணி’யின் 50-வது இதழ்.
செ.வை.சண்முகம், சிலம்பு நா.செல்வராசு, இ.அண்ணாமலை, பக்தவத்சல பாரதி, எம்.ஏ.நுஃமான் என்று தமிழின் முக்கியமான ஆய்வறிஞர்கள் இவ்விதழில் பங்களித்துள்ளனர். சமூகவியல், ஓவியம், மொழிபெயர்ப்பியல், மருத்துவம், இனக்குழு வரைவியல், அரசியல், மொழியியல் என்று துறைகளுக்கிடையிலான ஆய்வுகளாகப் பெரும்பாலான கட்டுரைகள் அமைந்துள்ளன. தனிநாயகம் அடிகளார் தனது ‘தமிழ் கல்ச்சர்’ இதழுக்கு எழுதிய தலையங்கத்தை நினைவுகூர்ந்திருக்கும் ‘மணற்கேணி’, காய்தல் உவத்தலையும் முன்முடிபுகளையும் தவிர்த்த தமிழ் ஆய்வுகளைத் தமது இலக்காகக் கொண்டிருப்பதைத் தெரிவிக்கிறது. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளும் அத்தகைய ஆய்வு முறைமையை அடியொற்றியே அமைந்துள்ளன. இது பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள் ஆகியவை வெளியிடும் ஆய்விதழ்களிலும் என்று சாத்தியமாகும் என்ற எதிர்பார்ப்பையும் நம்மிடம் தூண்டுகிறது. தமிழ் மொழியின் வரலாறு பரிதிமாற்கலைஞர், மு.வரதராசனார், டேவிட் ஷுல்மன் ஆகியோரின் அறிமுக நூல்களைத் தாண்டி இன்னும் ஏன் விரிவாக எழுதப்படவில்லை என்று ‘மணற்கேணி’ முன்வைக்கும் கேள்வியை மொழியியல் அறிஞர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
மணற்கேணி
இதழ் எண்: 50 (சிறப்பிதழ்)
ஆசிரியர்: ரவிக்குமார்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 94425 73305