போராட்டம் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த பிச்சமூர்த்தி அகம் சார்ந்தும் இயற்கை சார்ந்தும் இயங்கியது ஒரு முரண்தான். இந்த முரண்தான் புதிய கவிதைகளுக்கு வழித்தடம். மொழிக்குப் பன்முகம் தேவை. அவரது கவிதை மனம் வேர் விட்டிருந்த இடம் மனித வாழ்வுக்கானாது.
விடுதலைப் ‘காட்டு வாத்து’ கவிதையின் ஆரம்ப வரிகள்.... “பூட்டியிருந்தால் பேர்த் தெறிய முயலாதே குடைக் கம்பி தேடாதே...” என்று நெருங்கி அன்போடு பேசுகின்றன. வார்த்தைகளை நம்பாமல் பொய்யான மனிதர்களைப் புறம் தள்ளி, ‘உன்னை நீயே மேய்க்க வழி தேடி’ அலைகிறது கவிதை. பிச்சமூர்த்தியின் மன ஈரமே வார்த்தைகள்.
மனுக்கால வெள்ளம் போச்சு/மார்க்ஸ் கால வெள்ளம் போகும்/பூமித்தாய் கருணை வெள்ளம்/எக்காலும் வடியாதோடும்.
தத்துவங்கள், மத போதனைகள், விஞ்ஞானம், அரசியல் பார்வைகள் எதுவும் தனக்கு உதவாதபோது திகைத்து நிற்கும் மனிதனிடம் பேசுவதே ‘காட்டு வாத்து’. எல்லாம் பழங்கதையாய் ஆயிற்று. அற நெருக்கடிகளுக்குத் தீர்வு இல்லை. வஞ்சகத்துக்கு எதிராக மாற்று இல்லை. விழுமியங்களுக்கு மதிப்பில்லை. இந்தச் சூழலில் என்னை எப்படி நான் கூட்டிப்போவது? இருள் மட்டுமே வெளியாக இருக்கும் இடத்தில் நான் எப்படிப் பயணிப்பது? உள்ளொளி ஒன்றை அறியக் கவிதைக்குள் பயணிக்கிறார். இவரது அகவெளிப் பயணமே கவிதையாகிறது.
உள்ளுக்குள் இருந்து/கணத்திற்குக் கணம்/உசுப்பாமல் வழிகாட்டும்/உணர்வாய் உணர்ந்துவிட்டால்/முன்னும் இல்லை/பின்னும் இல்லை/தொடர் சங்கலி./ முழுதும் இன்பம்.
தன்னிலிருந்து தான் உணரும் சக்தியை விஞ்ஞானிகள் வியக்கும் சக்தி என்கிறார். இந்தச் சக்தியின் இடத்தைக் காட்டுவதே ‘காட்டு வாத்து’. ‘சைபீரியாவிலிருந்து வேடந்தாங்கல் வந்து ஏரி நடு மரத்தில் முட்டை இட்டு குஞ்சு கண்டு மீண்டும் சைபீரியா திரும்பும் காட்டு வாத்து, உள் இருக்கும் சக்தியை உனக்கு உணர்த்தவில்லையா?’ என்கிறார். காட்டு வாத்துகளுக்குப் பறந்து வரப் பாதை உண்டா, பார்த்துத் தெளிவு பெறப் படங்களுண்டா, தவறைத் திருத்தப் பகுத்தறிவு உண்டா? என்று கேட்கும் கேள்வியில் உள்ளிருக்கும் ஒளியைக் காட்டுகிறார்.
‘பாடம் கேட்காமல்/பாதை காட்டாமல்/குஞ்சுகளும் தாமாய்/சைபீரியா செல்லும்
இயல்புணர்வை கண்டபின்னும்/ஒளியைக் காணாயோ?’
மனிதத் துயரங்களுக்கு இயற்கையிலிருந்து மருந்து தருகிறது கவிதை. சமூக வீழ்ச்சிக்கு மாற்று இயற்கையை நாடுவதே. உனைக் கொணர்ந்த உயிரின் பெருமியக்கில் ஒளிந்தசையும் உள்விசையைப் போற்று என்கிறது கவிதை. நவீன வாழ்தலை எதிர்கொள்வதற்கான மன வலிமையைக் ‘காட்டு வாத்து’ வழங்குகிறது.
கட்டுரையாளர், கவிஞர், நாவலாசிரியர்
தொடர்புக்கு: kavai.palanisamy@gmail.com