உயிர் வளர்க்கும் நீர், உயிரைக் குடிக்குமா? ஆம் என்கிறார் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன். ‘தூய்மையானது, அதைத் தவிர வேறெதுவும் இல்லை’, ‘உலகின் அற்புத குடிநீர்’, ‘இது குடிநீர் மட்டுமல்ல, சத்துநீர்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரும் புட்டி நீர், மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்து அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதைச் சொல்கிறார் நக்கீரன். குழாய் நீரைவிடப் புட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் செய்யும் தண்ணீர் தூய்மையானது என்று மக்களை நம்பவைப்பதற்காக நடக்கும் ஏமாற்று வேலைகளை எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
தரக்கட்டுப் பாட்டுக்கு உட்படாமல் அரைகுறையாகச் சுத்திகரிக்கப் பட்டு விற்பனைக்கு வரும் குடிநீரால் ஏற்படும் ஆபத்துகளும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ஒரு லிட்டர் புட்டி நீரை உற்பத்தி செய்வதில் ஆறு லிட்டர் நீர் செலவிடப்படுகிறது என்பது அதிர்ச்சி தருகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் புட்டிநீரின் அளவில் கால் பங்கு நீரை சென்னைவாசிகள் பயன்படுத்துகிறார்கள் என்பது இன்னுமோர் அதிர்ச்சி. புட்டிநீரால் உருவாகும் அபாயங்களைச் சொல்வதுடன் நின்றுவிடாமல் மாற்று வழிகளையும் பரிந்துரைத்திருப்பது பாராட்டத்தக்கது.
உயிரைக் குடிக்கும் புட்டிநீர்
நக்கீரன்
விலை: ரூ. 30
வெளியீடு: பூவுலகின் நண்பர்கள், சென்னை-600026.
தொலைபேசி: 044-43809132/9841624006.