இலக்கியம்

விடுபூக்கள்: மலையாளத் திரையில் கமலாதாஸ்

செய்திப்பிரிவு

இந்திய ஆங்கில இலக்கியத்தில் இருபதாம் நூற்றாண்டின் புதுக் குரலாக உருவானவர் கமலா சுரையா. கேரளத்தில் பிறந்த இவர் மலைளாயத்தின் படைப்பிலக்கியத்துக்கும் செறிவான பங்களிப்பை நல்கியுள்ளார். மாதவிக்குட்டி என்றபெயரில் மலையாளத்தில் எழுதியுள்ளார். இவரது ‘My Story' என்னும் தன் வரலாற்று நூல் இந்தியாவில் அதிகம் விற்பனையான நூல்களில் ஒன்று.

இந்த நூலில் தனது வாழ்க்கையை ஒளிவுமறைவின்றி அப்பட்டமாக எழுதினார். இதனால் இந்த நூல் வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருசேரப் பெற்றது. தன்னுடைய 65 வயதில் இஸ்லாமியராக மதம் மாறினார். வாழும் வரை ‘வாழ்க்கைப் புனித’ங்களை பேச்சிலும் எழுத்திலும் கேள்விக்கு உள்ளாக்கிவந்த கலகப் பெண்மணியாக கமலாதாஸ் இருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு மரணமடைந்த இவரது கதையை மலையாள இயக்குநர் கமல் படமாக எடுக்கவுள்ளார். பிரபல இந்தி சினிமா நாயகி வித்யா பாலன், கமலா சுரையாவாக நடிக்கவுள்ளார்.

வெளி ரங்கராஜனுக்கு விருது

தமிழின் குறிப்பிடத்தகுந்த நாடக ஆளுமை வெளி ரங்கராஜன். நாடகத் துறை மட்டுமல்லாது இலக்கிய விமர்சனத் துறையிலும் செறிவான பங்களிப்பை வழங்கி வருகிறார். பாரதப் பிரசங்கி, புகைப்படக் கலைஞர், ஆர்மோனியக் கலைஞர், ஒளியமைப்பு - ஒப்பனைக் கலைக் கலைஞர், துடும்பு இசைக் கலைஞர் போன்ற பல அபூர்வமான கலைஞர்களை ‘வெளிச்சம் படாத நிகழ்காலப் படைப்பாளிகள்’ என்னும் தனது கட்டுரை நூலில் கவனப்படுத்தியிருந்தார்.

அந்த நூலுக்கு எம்.வி.பீமராஜா-ஜானகியம்மாள் அறக்கட்டளை சார்பாக அளிக்கப்படும் சிறந்த கட்டுரைத் தொகுதிக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆ. தமிழ்மணியின் ‘உறங்கும் மனசாட்சி’ நூலும் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு கட்டுரை நூல். இந்த விருதும் பரிசுத் தொகையும் உள்ளடக்கியது.

காஷ்மீர் கிராபிக்ஸ் நாவல்

காஷ்மீரின் வன்முறைக் களத்தைப் பின்னணியாகக் கொண்டு ‘முன்னு’ என்னும் கிராபிக் நாவல் வெளிவந்துள்ளது. இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் வாழும் முன்னு என்னும் 7 வயதுப் பையன்தான் கதையின் நாயகன். அங்கு அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகளுடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறான். முன்னுக்குப் பிடித்த இரண்டு விஷயங்கள்; சர்க்கரை, படம் வரைவது.

இப்படிச் சந்தோஷமாகப் போய்க்கொண்டிருக்கும்போது முன்னு அண்ணனின் பள்ளிக்கூட நண்பன் பாகிஸ்தான் பகுதிக்குச் சென்று தீவிரவாதப் பயிற்சி எடுக்கிறான். இதனால் முன்னுவின் அப்பாவையும் அண்ணனையும் ராணுவம் அடிக்கடி பிடித்துக் கொண்டுபோய் தீவிரவாதிகளை அடையாளம் காட்டச் சொல்கிறது. இப்படியாக முன்னுவின் வாழ்க்கையின் சிறிய கண்கள் வழியாக காஷ்மீரின் அரசியல் வாழ்க்கையை இந்த நாவல் சொல்கிறது. இந்த நாவலின் ஆசிரியரான மாலிக் சாஜ்ஜத் தனது சிறுவயது அனுபவத்தின் அடிப்படையில் இந்த நாவலை எழுதியிருக்கிறார்.

SCROLL FOR NEXT