கொஞ்சம் பிசகினாலும் நாளிதழ்களின் மூன்றாம் பக்கத்தில் கட்டம்கட்டப்பட்டுச் செய்தியாகிவிடக்கூடிய அத்தனை சாத்தியங்களும் கொண்டது கமலியின் காதல். சமூகம் வகுத்து வைத்திருக்கும் குடும்ப அமைப்பின் அபத்த நியதிகளை, சி.மோகனின் இந்தப் புதிய நாவல் ‘கமலி’ குலைத்துப்போடுகிறதா அல்லது சரியத் தொடங்குகிற குடும்ப அமைப்பின் சிக்கல்களைச் சொல்கிறதா என்றால் இரண்டையும்தான் செய்கிறது.
பாளையங்கோட்டை கமலிக்கும், மதுரை கண்ணனுக்கும் காதல். கமலியைவிட கண்ணன் 15 வயது மூத்தவர்; கமலிக்குத் திருமணமாகி ஆறு வயதில் மகள் இருக்கிறாள் என்பதெல்லாம் அமரத்துவம் வாய்ந்ததாக அவர்கள் நம்புகிற காதலுக்குப் பொருட்டல்ல. தூய்மைவாதத்துக்கும் காதலுக்கும் எந்தக் காலத்திலும் தொடர்பு இல்லை; தொடர்பு இருக்க வேண்டிய தேவையும் இல்லை. இவர்களது உறவும் அப்படியானதுதானா என்கிற கேள்விக்குப் பதிலளிக்க கமலி, கண்ணன் இருவருமே பாவம் சிரமப்படுகிறார்கள்.
ஆண்கள் பலரது கதைகளில் வருகிற பெரும்பாலான பெண்களைப் போலத்தான் கமலியும் இருக்கிறாள். யாராலும் இட்டு நிரப்ப முடியாத வெறுமையும், போதிய அங்கீகாரம் கிடைக்காத ஆற்றாமையும், தன்னைப் புரிந்துகொள்ள சரியான நபர் கிடைக்காத ஏக்கமும் பெண்களுக்குள் இருப்பதாக ஆண்கள் நம்புவதன் வெளிப்பாடாகத்தான் கமலிகள் படைக்கப்படுகிறார்கள். உண்மையில், ‘லவ் யூ டியர்’ என்கிற ஒற்றைச் சொல்லுக்கெல்லாம் எந்தப் பெண்ணின் மனமும் சாய்ந்துவிடாது. ஆனால், கமலி சாய்ந்துவிடுகிறாள்.
ரகுவுடனான 14 வருட இல்லறத்தில் பெரும் வருத்தமென்று ஏதுமில்லாமல் சந்தோஷமாகத்தான் இருந்தாள் கமலி. அவள் உடம்பில் காம அரும்புகள் மொக்கவிழ, அவனுடனான உறவுகளில் அதன் சிறு துளிகூட அவளுக்குப் பருகக் கிடைத்ததில்லை. இந்த இடத்தில்தான் கண்ணனின் வருகை அவளுக்குப் புதிய வாசல்களைத் திறந்துவிடுகிறது. தன் அப்பாவின் கனவையும் தன் லட்சியத்தையும் கைக்கொள்வதற்கான வழிகளை கண்ணன்தான் அவளுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. கமலிக்கு ஒவ்வொன்றையும் கண்ணன்தான் பழக்குகிறார். தன்னை மீட்க யாராவது வர மாட்டார்களா என்ற பெண்ணின் ஏக்கத்தை ஆண்கள் தங்களுக்குச் சாதகமாகக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கண்ணனும் விதிவிலக்கல்ல.
செல்பேசியும் இணையமும் மனிதர்களை எப்படி வேறொரு தளத்துக்கு எடுத்துச்செல்கின்றன என்பதையும் இவர்களின் காதல் உணர்த்துகிறது. உறவுப் பிணைப்பையும், உறவில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச நேர்மையையும் இவை கேலிக்கூத்தாக்குகின்றன. எல்லைமீறலை நியாயப்படுத்தவும் எல்லைமீறுவதற்கான வழிகளையும் இவை ஏற்படுத்தித்தருகின்றன. கண்ணனுடன் செல்பேசி வழியாக நெருக்கமாக இருக்கும்போது கமலிக்கு அது பரவசமாகவே இருக்கிறது. காரணம், கண்ணன் அவளுடைய உடலைக் கொண்டாடுகிறார். நம் குடும்பங்களில் பெண்களின் நிறைவு குறித்துப் பெரிதாக யாரும் பேசுவதில்லை என்பதற்காக கமலியின் தேவையைப் புறக்கணித்துவிட முடியாது. ஆனால், அது புனிதமானது என்று சொல்லப்படுகிறபோதுதான் தன் இயல்பைத் தொலைக்கிறது.
கமலியின் செயலை நியாயப்படுத்த பாவம் ரகுவை ஏன் வில்லனாக்க வேண்டும்? மனைவிக்கு வேண்டியதையெல்லாம் செய்துகொடுக்கும் அவன், அவள் கதை எழுதக் காகிதம் வாங்கித்தர மாட்டானா? அல்லது அதை வாங்கத்தான் கமலியிடம் பணம் இல்லையா? இதற்குமா கண்ணன் வர வேண்டும்? பஸ்ஸில் கண்ணனும் கமலியும் நெருக்கமாக இருக்கிறபோது, “எல்லாத்தையும்விட எனக்கு உன்னோட கௌரவம் ரொம்ப முக்கியம்” என்று கண்ணன் சொல்கிறார். கமலியும் நெகிழ்கிறாள். உண்மையில் இவர்களது இந்த நெருக்கம் வீட்டினருக்குத் தெரியவந்தால் அப்போது கமலியின் கௌரவம் காப்பாற்றப்பட்டுவிடுமா?
ரகு மீது மாறாத நித்தியத்துவமான அன்பையும் கண்ணன் மீது அமரத்துவமான காதலையும் வெளிப்படுத்துகிற கமலி, கண்ணனின் குழந்தையைச் சுமப்பதன் மூலம் இந்த ஜென்மத்துப் பலன் கிடைத்துவிட்டதாகச் சொல்கிறாள். கடைசியில் எல்லாம் இதற்குத்தானா? இதற்கு ஏன் அவள் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் எம்ஏ முடித்திருக்க வேண்டும்?
கமலி நம் சமூகத்துக்குப் புதியவள் அல்ல. ஆணின் இச்சைக்குப் பலியாகிற மற்றுமொரு பரிதாப ஜீவன் அவள். இருவரும் எப்போது மாட்டிக்கொள்வார்கள் என்கிற பதற்றமே கமலியைச் சிறுமைப்படுத்துகிறது. பெண்கள் மீதான வன்முறை வெவ்வேறு வடிவங்கள் எடுத்துவரும் இந்நாளில் கமலியைப் போன்ற படைப்புகள், பெண்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.
கமலி
சி.மோகன்
புலம் வெளியீடு
திருவல்லிக்கேணி, சென்னை-5.
விலை: ரூ.150
தொடர்புக்கு:
98406 03499