எழுத்தாளர் இமையத்தின் ‘வீடியோ மாரியம்மன்’ சிறுகதைத் தொகுப்பை சமீபத்தில்தான் படித்தேன். விவசாயிகளின் ஆதாரமான நிலத்தை, இன்றைய நவீன வாழ்வின் நெருக்கடி காரணமாக விற்க நேரிடும்போது ஒவ்வொரு விவசாயியின் ஆன்மாவும் படும் துயரத்தை இக்கதைகள் பேசுகின்றன. விவசாய நிலத்தை மனையாக்கி விற்பது என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் உயிராதாரத்தை இழப்பது என்பதை இமையத்தின் கதைகள் வலியுடன் சொல்கின்றன.
முன்பே, சோழர்-பாண்டியர் காலச் செப்பேடுகளைத் தொகுத்து நூல்களாக எழுதியிருக்கின்றேன். கடந்த இரண்டாண்டு காலமாக சேரர் காலச் செப்பேடுகள், பல்லவர் காலச் செப்பேடுகளையும் தொகுத்து எழுத ஆரம்பித்து இப்போது முடிக்கும் தறுவாயில் இருக்கிறேன். எளிய மொழியில் அனைவரும் படிக்கும்படி செப்பேடுகளின் குறிப்புகளைத் தொகுத்தெழுதும் பணி மிகுந்த சவாலானதாகவே இருந்தது. இரு நூல்களும் விரைவில் வெளிவர இருக்கின்றன.