எனது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘நந்தனார் தெரு’ தொடங்கி, பத்தாவது சிறுகதைத் தொகுப்பான ‘புதைந்து எழும் சுவடுகள்’ வரை கடந்த 25 ஆண்டுகளில் 120-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். தலித் மக்களின் வாழ்க்கையைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் இந்தக் கதைகள் பதிவு செய்திருக்கின்றன. தேர்ந்தெடுத்த சிறுகதைகளைத் தொகுத்து ‘விழி.பா. இதயவேந்தன் சிறுகதைகள்’ எனும் நூலொன்றை வெளிக்கொண்டுவரும் முயற்சியிலும் அதற்கான முன்னுரையை எழுதும் வேலையிலும் ஈடுபட்டிருக்கிறேன்.
சமீபத்தில் கா. தமிழ்வேங்கை எழுதிய ‘வென்றாக வேண்டும் தமிழ்த் தேசியம்’ கட்டுரைத் தொகுப்பைப் படித்தேன். அவரது தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழகத்தில் சீரழிந்துவரும் ஏரிகள், நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், கலப்புத் திருமணங்களின் தேவை போன்றவற்றைக் குறித்தும் மிகச் சரியான புரிதலைத் தரும் சமூகப் பயன் மிக்க கட்டுரைகளால் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.