துருக்கியைச் சேர்ந்த எலிஃப் ஷஃபாக்கின் ‘தி ஃபார்ட்டி ரூல்ஸ் ஆஃப் லவ்’ நாவல் வெளியாகிப் பத்து வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், சமீபத்தில் வெளியான நாவல்போல அது திடீரென்று பரவலான வாசிப்புக்கு வந்திருக்கிறது. தமிழில் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை என்றாலும், தமிழ் இலக்கிய வெளியிலும் அது பரவலாக வாசிக்கப்படுகிறது. காதல் அந்நாவலின் சிறப்பம்சமாக இருப்பதே காரணம். காதல் என்றால் ஆண்- பெண் காதல் அல்ல; வாழ்வு மீதான காதல், பிரபஞ்சத்துடனான காதல்.
நாவல் இருவேறு காலகட்டங்களில் பயணிக்கிறது. ஒன்று, 2008 அமெரிக்காவில். மற்றொன்று 13-ம் நூற்றாண்டு துருக்கியில். அமெரிக்காவில் வாழும், 40 வயது யூதப் பெண்ணான எலா, மூன்று பிள்ளைகளுக்குத் தாய். கணவன் தனக்கு உண்மையாக இல்லை என்பதாக அவள் உணர்கிறாள். குடும்ப வாழ்க்கை அவளுக்கு வெறுமையைத் தருகிறது. அப்படியான சமயத்தில், புத்தகங்களுக்கு மதிப்புரை வழங்கும் வேலை கிடைக்கிறது. அவ்வாறாக அவளது கைக்கு வருகிறது ‘ஸ்வீட் ப்லாஸ்பெமி’ நாவல். அந்தப் புத்தகம் அவளது வாழ்வையே மாற்றியமைக்கிறது.
‘ஸ்வீட் ப்லாஸ்பெமி’ நாவல், 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபியான ஷம்ஸ் தப்ரிஸுக்கும் ஜலாலுதீன் ரூமிக்கும் இடையிலான உறவைப் பற்றியது. ரூமி தெரிந்த அளவுக்கு நமக்கு சம்ஸைத் தெரியாது. சம்ஸின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதென்றால், ஷம்ஸ் இல்லையென்றால் ரூமி கவிஞராக, சூஃபியாக மாறியிருக்கவே மாட்டார் எனலாம்.
ஷம்ஸ் ஒரு நாடோடி. ஷம்ஸ் தன்னுடைய 60-வது வயதில், சாமர்கண்டிலிருந்து பாக்தாத்துக்குப் பயணப்படுகிறார். துருக்கியில் உள்ள கோன்யாவில் மதிப்புமிக்க மார்க்க அறிஞராக இருக்கிறார் ரூமி. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜும்மா அன்று ரூமி நிகழ்த்தும் சொற்பொழிவைக் காண அந்த நகரமே கூடும். அவ்வாறான ஒரு தினத்தில், சொற்பொழிவு முடித்துவிட்டு வீடு திரும்பும் சமயத்தில், சம்ஸுடனான அவருடைய சந்திப்பு நிகழ்கிறது (1244). அதன் பிறகு, ரூமியின் வாழ்க்கையே மாறிவிடுகிறது.
ரூமி – ஷம்ஸ் இருவரும் எதிரெதிர் துருவத்தில் இருப்பவர்கள். ஷம்ஸ் மீது ரூமி காட்டும் அக்கறையானது ரூமியின் குடும்பத்தார்களுக்கு மட்டுமல்ல, அந்நகர மக்களுக்குமே பிடிக்கவில்லை. காரணம், அவர்கள் பார்வையில் ஷம்ஸ் இஸ்லாத்துக்கு மாற்றானவராக இருக்கிறார், மது அருந்துகிறார், பாலியல் விடுதிக்குச் செல்கிறார், இறைவன் மீது பற்றுக்கொண்டவராக இல்லை. ஆனால், அவரின்பால் ஈர்க்கப்பட்டு ரூமியின் இயல்பு மாறிக்கொண்டிருக்கிறது. ஒருகட்டத்தில், ரூமி தனது வளர்ப்பு மகளான கிமியாவை சம்ஸுக்குத் திருமணம் முடித்துவைக்கிறார். அந்தத் திருமணம் நிலைக்கவில்லை. ஷம்ஸ் மாயமாக மறைந்துவிடுகிறார். அதனால் ரூமி பெரும் துயருக்கு உள்ளாகிறார். அந்தப் பிரிவு வேதனையால் கவிதைகள் எழுதிக் குவிக்கிறார்.
இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட ‘ஸ்வீட் ப்லாஸ்பெமி’ நாவலை வாசிக்கையில், எலா மாறுதலுக்கு உள்ளாகிறார். அதன் ஆசிரியர் அஷிஸ் சஹாராவை மின்னஞ்சலில் தொடர்புகொள்கிறார். அஷிஸின் வாழ்க்கை பற்றி எலா அறிகிறாள். சம்ஸின் தன்மையை அஷிஸிடம் உணர்கிறாள். அஷிஸின்பால் எலா ஈர்க்கப்படுகிறாள். தன் பிள்ளைகள், கணவனைப் பிரிந்து அஷிஸுடன் சென்று வாழ முடிவெடுக்கிறாள்.
ஷம்ஸின் பயணம், அவர் தங்குமிடங்கள், அவர் வழியில் எதிர்ப்படும் மனிதர்கள், அவர்களுடனான அவரது உரையாடல், ரூமியுடனான சந்திப்பு, ரூமிக்குக் கற்பித்தல், ரூமியின் குடும்பத்தினருடனான உறவு என சம்ஸின் அத்தியாயங்கள் பெரும் வசீகரத்தைக் கொண்டிருக்கின்றன. ஷம்ஸ் தன் பயணங்களில் உரைக்கும் நாற்பது விதிகளே காதலின் நாற்பது விதிகளாக ஆகின்றன. இஸ்லாமியக் கலாச்சாரம் ஒற்றை வண்ணத்திலானது அல்ல, அதற்குப் பல்வேறு வண்ணங்கள் இருக்கின்றன என்பதையும், கவிதை இஸ்லாமியக் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது என்பதையும் இந்நாவல் உணர்த்திச் செல்கிறது.
‘தி ஃபார்ட்டி ரூல்ஸ் ஆஃப் லவ்’ நாவல் வழியே எலிஃப் ஷஃபாக் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். அவருடைய படைப்புகள் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தற்போது ஓரான் பாமுக்கு அடுத்தபடியாக துருக்கியின் இலக்கிய முகமாக அறியப்படுபவராக மாறியிருக்கிறார் எலிஃப் ஷஃபாக்!
- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in
------------------------------------
தி ஃபார்ட்டி ரூல்ஸ் ஆஃப் லவ்
எலிஃப் ஷஃபாக்
பென்குயின் பதிப்பகம்
விலை: ரூ.499