அப்பாவைப் பொறுத்த வரையில் அவர் அயராத உழைப்பாளி. தான் தேடும் நயம் கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் எழுதியதையே பலமுறை எழுத அவர் தயங்கியதே இல்லை. அலுத்துக்கொள்வதுமில்லை. லா.ச.ராவின் சிறுகதைகள் நினைவின் அடிவாரத்தில் வருடக்கணக்கில் ஊறிக்கிடப்பவை. எந்தச் சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த ஸ்ருதி கலையாமல் மீண்டும் தொட்டுக் கொள்ள தன்நினைவைப் பழக்கிக்கொண்டிருக்கிறார். இவர் கதை எழுத உட்காருவதில்லை. கதை இவர் மனதில் உட்கார ஆரம்பிக்கும்போது இவரும் எழுத ஆரம்பிப்பார். கதை தன்னை நடத்திக்கொள்ளும்போது அதன் உருவத்தை எழுத்தாக்குகிறார்.
பெண் குழந்தை தானாகத் தன் பருவம் அடைந்து கன்னியாவதைப் போல அப்பாவின் கதை எவருடைய வற்புறுத்தலுமின்றித் தன் பக்குவம் அடைந்து கன்னிமை அடைகிறது. இவரும் தன் கதையின் வேளைக்கு, தருணத்திற்குக் காத்திருந்தார். வற்புறுத்தப்படாத செழுமையில் இவர் கதைகள் இருப்பதால்தான் அது சிரஞ்சீவத்துவம் பெற்று விளங்குகிறது.
எழுத்தில் தான் பேசுவதாக அப்பா நினைத்ததே இல்லை. தன் மூலமாக, தன் எழுத்தின் மூலமாகத் தன் மூதாதையர்கள் பேசுவதாகவே நம்பினார். இவருடைய எழுத்திற்கு கேமரா கண்கள் உண்டு. அதி அற்புதமான கவிதைகளை உருவாக்கக்கூடிய திறன் பெற்றவை அவரது எழுத்துகள். காட்சித் தன்மையுடன் கூடிய அவரது விவரிப்பு மொழி வாசகனின் மனத்திரையில் சித்திரங்களை உருவாக்கிவிடக்கூடிய ஆற்றல் பெற்றது.
கவிதையும் உரைநடையும் அவரது கை வண்ணத்தில் கதைக் கவிதையாக, கவிதைக் கதையாக மாறிவிடுவது லா.ச.ரா. எனும் மந்திரவாதியின் உச்சபட்ச வித்தை. அப்பாவின் உரைநடை, உயிர் நடை. அப்பாவின் எழுத்துக்கள் பற்றி அவர் பாஷையிலேயே கூற வேண்டுமானால், “மனதில் தோன்றியவற்றைத் தோன்றியபடி தோன்றிய கதியிலேயே” நமக்கு மாற்றிவிடும் சக்தி படைத்தவர்.
இந்தக் கதை எப்போது முடியும் என்று கேட்டால் எனக்கென்ன தெரியும்? அது தன்னை முடித்துக்கொள்கிற போதுதான் முடியும் என்கிற பதில்தான் அவரிடமிருந்து வரும். எது எது, எவை எவையோ, அவை அவை அது அதுதான் என்று படிப்பவர்களே புரிந்துகொள்ளும்படி எழுதுவதில் வல்லவர்.
சொல்லாத சொல்லின் அர்த்தத்தைக்கூடச் சொல்லப்பட்ட சொல்லின் அர்த்தத்துக்கு மேலாகப் புரியவைத்துவிடும் ஆற்றல் அப்பாவிற்கு உண்டு.
இவருக்கென எழுத்துலகில் தனி கோஷ்டி கிடையாது. எந்தக் கோஷ்டியிலும் லா.ச.ரா. கிடையாது. அவர் மறைந்த ஆறு மாதங்களுக்குள் அவருடைய படைப்புகள் அரசுடமையாக்கப்பட்டன. அப்பா, 1989-ம் ஆண்டு தனது ‘சிந்தா நதி கட்டுரைத் தொகுப்புக்காக ‘சாஹித்ய அகாடமி விருது பெற்றார். தனது தொண்ணூற்றி இரண்டாவது வயதில், தனது பிறந்த நாளான 30.10.2007 அன்று எழுத்துலகில் நிரந்தமாகி, இருப்புலகை விட்டுக் கிளம்பினார்.
இவருக்கென எழுத்துலகில் தனி கோஷ்டி கிடையாது. எந்தக் கோஷ்டியிலும் லா.ச.ரா. கிடையாது. அவர் மறைந்த ஆறு மாதங்களுக்குள் அவருடைய படைப்புகள் அரசுடமையாக்கப்பட்டன. அப்பா, 1989-ம் ஆண்டு தனது ‘சிந்தா நதி கட்டுரைத் தொகுப்புக்காக ‘சாஹித்ய அகாடமி விருது பெற்றார். தனது தொண்ணூற்றி இரண்டாவது வயதில், தனது பிறந்த நாளான 30.10.2007 அன்று எழுத்துலகில் நிரந்தமாகி, இருப்புலகை விட்டுக் கிளம்பினார்.
மகன் என்பதையும் தாண்டி, அப்பாவுடன், வாசகனாகவும் தோழனாகவும் நான் அதிகம் நெருக்கமானவன். அதனால் இத்தொகுப்பிலுள்ள கதைகளை நான் அப்பாவுக்குப் பிடித்த இசைமொழியைப் போல வரிசைப்படுத்தியுள்ளேன். முதல் கதையான ஜனனி முதல் கடைசிக் கதையான பச்சைக்கனவு வரையான முழுத் தொகுப்பையும் படித்துமுடிக்கும்போது வாசகனின் மனதில் ஒரு வித தாள லயத்தோடு அமைதியான மெல்லிய இசையை உணர முடியும் என்று நம்புகிறேன். வேறு உலகம் போனபின்னும் லா.ச.ரா. எழுத்துலகில் நிரந்தரமாகவிட்டதற்கு இப்புத்தகமும் சாட்சி.
அப்பா நூற்றாண்டு காணும் இத்தருணத்தில் இத்தொகுப்பினை மிகுந்த ஆர்வமுடனும் கவனத்துடனும் வெளிக்கொண்டுவரும் டிஸ்கவரி புத்தக நிலையத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
கட்டுரையாளர், எழுத்தாளர் லா.ச.ராவின் மகன்
(லா.ச.ராவின் நூற்றாண்டை ஒட்டி சப்தரிஷி தொகுத்த லா.ச.ரா. சிறுகதைகள் தொகுப்பிற்கு அவர் எழுதிய உரை இது. இத்தொகுப்பை டிஸ்வரி புக் பேலஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.)
லா.ச.ரா. என அறியப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் 1916-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி பிறந்தார். இது அவரது நூற்றாண்டு. தமிழின் முன்னோடி எழுத்தாளரான அவர் மணிக்கொடி எழுத்தாளுமைகளுளின் இறுதிச் சுடராகவும் ஒளி வீசியவர். கதை சொல்லலில் புதிய நுட்பங்களைப் புகுத்தியவர். மனத்தின் அசாதாரணங் களைக் கவிதை மொழியில் புனைவாக ஆக்கியவர். ‘அபிதா, ‘புத்ர’. ‘செளந்தர்ய’ ஆகிய அவரது நாவல்கள் தமிழின் செவ்வியல் நாவல்களாகப் போற்றப்படுகின்றன. லா.ச.ரா.வின் எழுத்துகள் குறித்து ‘‘The Incomparable Writer Ramamirtham’ என்னும் பெயரில் ஆங்கிலத்தில் கட்டுரை நூல் வெளிவந்துள்ளது. பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் பெற்ற லா.ச.ரா.வின் முதல் சிறுகதை ஆங்கிலத்தில்தான் வெளிவந்தது. ‘Babuji' என்னும் அந்தச் சிறுகதை 1934-ம் ஆண்டு ‘Short story' என்னும் பத்திரிகையில் வெளிவந்தது. தனது பதினேழு வயதிலேயே எழுதத் தொடங்கிய லா.ச.ரா. எழுபத்தைந்து வருடங்கள் தொடர்ந்து எழுதிவந்தார். சிறுகதைத் தொகுப்புகள் பதினெட்டு, நாவல்கள் ஆறு , இளமை நினைவுகள் தொகுப்பு ஏழு எனத் தமிழ்ப் படைப்புலகக்கு வளம் சேர்த்துள்ளார். ‘சிந்தாநதி’ கட்டுரை தொகுப்புக்காக லா.ச.ரா.வுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கிக் கவுரவித்துள்ளது.