நெதர்லாந்து நாட்டில் நடந்த 50-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் டைகர் விருதைப் பெற்றிருக்கிறது ‘கூழாங்கல்’ திரைப்படம். அவ்விருதைப் பெறும் தமிழின் முதல் திரைப்படம், இரண்டாவது இந்தியத் திரைப்படம், இந்த ஆண்டு திரையிடலுக்குத் தேர்வான ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமைகளையும் பெற்றுள்ளது.
அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கியுள்ள இந்தப் படம், நயன்தாரா - விக்னேஷ் சிவனின் முதல் தயாரிப்பும்கூட. தந்தைக்கும் மகனுக்குமான சிக்கலான உறவைப் பேசும் இத்திரைப்படத்தில், கவிஞர் கறுத்தடையான் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பொட்டல்வெளியில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு முதுகு காட்டி அவர் விடுவிடுவென நடந்துசெல்லும் படத்தின் முன்னோட்டக் காட்சிதான் தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான பேசுபொருள்.
‘ஊட்டு’, ‘பொழிச்சல்’ கவிதைத் தொகுப்புகளாலும் ‘ஆகாசமாடன்’, ‘ஆதாளி’ சிறுகதைத் தொகுப்புகளாலும் தமிழ் இலக்கிய உலகத்தின் கவனத்தை ஈர்த்த கறுத்தடையான், தனது முதலாவது நாவலான ‘கோட்டி’யை ஜனவரி 10 அன்று வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான விக்னேஷ் குமுளையும் நவீன இலக்கியத்துடன் தொடர்புடையவர்தான்; ச.முருகபூபதியின் ‘மணல்மகுடி’ நாடக நிலத்தின் முக்கியமான கலைஞர்களில் அவரும் ஒருவர்.