தமிழ் வாசகர்களுக்கு அயல் மொழி எழுத்துகள் மீதும் எழுத்தாளர்கள் மீதும் எப்போதுமே தொடர்ச்சியான அவதானிப்பு உண்டு. டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’, தஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ இல்லாத தமிழ் இலக்கிய ஆர்வலரின் புத்தக அலமாரிகள் அநேகமாக இருக்காது என்றே சொல்லலாம்.
மொழிபெயர்ப்பு இலக்கியங்கள், தமிழ் இலக்கியப் பரப்பில் அத்தனை தாக்கம் செலுத்திவருகின்றன. அத்தகைய தீவிரத் தன்மையுடன் தமிழ் இலக்கியங்கள் அயல் மொழிகளில் ஏன் மொழிபெயர்க்கப்படுவதில்லை என்ற கேள்வியும் அவ்வப்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகிறது. அதன் அவசியத்தை உணர்ந்து தமிழின் ஆகச் சிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் முன்னெடுத்திருக்கிறது.
5 ஆண்டுகள் 100 புத்தகங்கள்!
ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ், ஹார்ப்பர்காலின்ஸ் இந்தியா, நியோகி புக்ஸ், பென்குயின் ராண்டம் ஹவுஸ், ரத்னா புக்ஸ், விடஸ்டா பப்ளிஷிங் உள்ளிட்ட நாட்டின் முன்னணி ஆங்கிலப் பதிப்பகங்களுடன் இணைந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் செயல்படத் தொடங்கியிருக்கிறது. அதன் முதல் கட்டமாக திருக்குறள், சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ உள்ளிட்ட ஆறு புத்தகங்கள் தற்போது ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 தமிழ்ப் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவது என்கிற பிரம்மாண்டமான திட்டமும் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மொழிபெயர்ப்புப் பிரிவின் இணை இயக்குநர் சரவணனிடம் பேசினேன். “தமிழில் வெளிவந்திருக்கும் ஆகச் சிறந்த புனைவு மற்றும் அபுனைவுகளை அயல் மொழிகளில் மொழிபெயர்த்துக் கொண்டுவரும் பணியை அரசாங்கமே முன்னெடுக்கும் திட்டத்துக்கான அரசாணையானது தமிழக அரசால் 2017-லேயே வெளியிடப்பட்டது. அதை நடைமுறைப்படுத்தும் விதமாக அப்போதைய தமிழகப் பள்ளிக்கல்வித் துறைச் செயலர் த.உதயசந்திரன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் மொழிபெயர்ப்புக்கென பிரத்தியேகப் பிரிவைத் தொடங்கிவைத்தார்.
2019-லிருந்து இந்தப் பணி முழுவீச்சில் நடைபெறத் தொடங்கியது. கைகோத்திருக்கும் ஒவ்வொரு பதிப்பகத்திடமிருந்தும் 500 புத்தகப் பிரதிகளை வாங்குவதாக உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. அவற்றில் பதிப்பாளரின் இலச்சினையோடு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் இலச்சினையும் இடம்பெறும். பண்டைய மற்றும் நவீன இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்து வெளியிடுதல், ஏற்கெனவே மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளை மறுபதிப்பு செய்தல், புதிதாக மொழிபெயர்த்துச் சிறந்த படைப்புகளை வெளிக்கொணர்தல் என்பதாகத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று திட்டங்களை விளக்கினார் சரவணன்.
முதல் கட்டமாக, பென்குயின் பதிப்பகம் 1980-களில் வெளியிட்ட உலகப் பொதுமறை திருக்குறளின் மொழிபெயர்ப்பான ‘Kural’ புத்தகத்தையும், ஜல்லிக்கட்டின் பெருமையை உலகுக்கு உரக்கச் சொன்ன சி.சு.செல்லப்பாவின், ‘வாடிவாசல்’-ஐ ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ் 2012-ல் மொழிபெயர்த்து வெளியிட்ட ‘Arena’ புத்தகத்தையும் மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளனர். இதனுடன், தற்போது மேலும் புதிதாக நான்கு புதிய மொழிபெயர்ப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. உணர்ச்சிப் பிழம்பான கதைக்களத்தை அதிநுட்பமாக எழுத்தில் வடித்த தி.ஜானகிராமனின், ‘செம்பருத்தி’யை ‘The Crimson Hibiscus’ என்ற தலைப்பில் பெரியசாமி பாலசாமி மொழிபெயர்ப்பில் ரத்னா புக்ஸுடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது.
கரிசல் மண்ணின் மைந்தன் கி.ராஜநாராயணனின், ‘கரிசல் கதைகள்’ புத்தகத்தை, ‘Along with the Sun’ ஆக பத்ம நாராயணன் மொழிபெயர்க்க ஹார்பர்காலின்ஸ் பதிப்பகத்துடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையைப் புனைவில் உரக்கப் பேசிய ராஜம் கிருஷ்ணனின், ‘சுழலில் மிதக்கும் தீபங்கள்’-ஐ ‘Lamps in the Whirlpool’ என்பதாக விடஸ்டா பப்ளிஷிங்குடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் சிறந்த 10 புதினங்களின் பட்டியலில் இடம்பிடித்த நீல பத்மநாபனின், ‘தலைமுறைகள்’ நாவலை ‘Generation’ என்ற தலைப்பில் நியோகி புக்ஸ் பதிப்பகத்துடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக, ‘சிலப்பதிகாரம்’, ‘The Unknown Tamilnadu’ என்ற தலைப்பில் தொ.பரமசிவனின் ‘அறியப்படாத தமிழகம்’, 26 தலித் எழுத்தாளர்களுடைய படைப்புகளின் முதல் தொகுப்பாக 'Selection of Dalit Stories' உள்ளிட்ட பத்து புத்தகங்களுக்கு மொழிபெயர்ப்புப் பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கென அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது என்றார் சரவணன். இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு ஆசிரியரும், ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ் பதிப்பகத்தைச் சேர்ந்தவருமான மினி கிருஷ்ணன் கூறுகையில், “மொழிபெயர்ப்பு நூல்களைப் பதிப்பகங்கள் சுயமாக வெளிக்கொணர்ந்து அவற்றை விற்பது சவாலான காரியம்.
அதுவே அரசின் ஆதரவுடன் செய்யும்போது கல்விக்கூடங்கள், நூலகங்களைப் புத்தகங்கள் சென்றடைய முடிகிறது. அதிலும் கரோனா காலத்தில் இந்தத் திட்டம் முழுமை பெற்றிருப்பது பதிப்பகங்களுக்கு மறுவாழ்வு போன்றது. இதில் புனைவு, அபுனைவு இரண்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது கூடுதல் சிறப்பு. அனைத்துக் கல்லூரி நூலகங்களிலும் இந்தப் புத்தகங்கள் இடம்பெற வேண்டும் என்பதே எங்களுடைய முதன்மையான குறிக்கோள்” என்றார்.
தமிழறியாத யாவருக்கும்
இந்த மொழிபெயர்ப்புத் திட்டத்துக்கான புத்தகங்களைத் தேர்வுசெய்யும் குழுவில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுடன் பேசுகையில், “அநேக நாடுகள் தங்களுடைய இலக்கியத்தை மொழிபெயர்த்து உலகம் முழுவதும் கொண்டுசெல்கின்றன. இந்தியாவிலும் கேரளா, கர்நாடக மாநில அரசுகள் மொழிபெயர்ப்புப் பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன. தமிழக அரசு ஆரம்பக் கட்ட முயற்சியாக திருக்குறள் தொடங்கி ‘கரிசல் கதைகள்’ வரை வெவ்வேறு தரப்பு தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியைத் தற்போது தொடங்கியிருக்கிறது.
இதன் வழியாக, இன்றைய தலைமுறையினரிடம் தமிழ் எழுத்தை ஆங்கிலத்தின் மூலம் கொண்டுசேர்க்க முடியும். மறுபுறம், தமிழ்ப் படைப்புகளைக் குறைந்தபட்சம் நாட்டின் பிற மாநில மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பாக அமையும். எங்களிடம் சிபாரிசு செய்யப்படும் பலவிதமான புத்தகங்களின் முக்கியத்துவத்தை அலசி, அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கான தேவையை ஆராய்ந்து முடிவுசெய்யும் பொறுப்பு நான் இடம்பெற்றிருக்கும் குழுவுக்கு உள்ளது” என்றார்.
‘திருக்குறள்’ போன்றதொரு செம்மொழி இலக்கியங்களைப் பொறுத்தவரை, அவற்றில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களிடமும் அதன் மொழிபெயர்ப்பில் கைதேர்ந்தவர்களிடமும் அனுப்பப்பட்ட பிறகே யாருடைய மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது தீர்மானிக்கப்படுவதாகத் தெரிகிறது. இது தவிர, இந்தத் திட்டத்துக்கெனவே புத்தகங்களைப் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்து புதிதாக மொழிபெயர்க்கும் பணிகளும் நடந்துகொண்டிருப்பது நம்பிக்கை அளிக்கிறது.
- ம.சுசித்ரா, தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in