தி இந்து ஆங்கில நாளிதழ் சார்பாக ஆண்டுதோறும் இசை விழா நடத்தப் பட்டுவருகிறது. 11-வது ஆண்டு இசை விழா நவம்பர் 19 அன்று தொடங்கி சென்னையில் நவம்பர் 22வரை சிறப்பாக நடை பெற உள்ளது. இசைப் பிரியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பலவகையான இசை நிகழ்ச்சிகள் இவ்விழாவில் இடம்பெற உள்ளன. கிளாஸிக்கல் மியூசிக்கில் பிரபலத் தன்மையும் விமர்சகர்களின் பாராட்டும் பெற்ற இசைக் கலைஞர்கள் பலர் இவ்விழாவில் பங்குபெற்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.
தொடக்க நிகழ்வில் பாகிஸ்தானிய இசைக் கலைஞரான சவுகத் அலி கான் பங்கேற்று சூஃபி, பாப், பாலிவுட் எனப் பலவகையான பாடல்களைப் பாடுகிறார். இதைத் தொடர்ந்து கர்னாடக இசை தவழ்ந்துவர உள்ளது. உலக அரங்கில் இந்திய கிளாஸிக் இசையின் திருவுருவாக அறியப்பட்டிருக்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமியை நினைவுகூரும் வகையில் எஸ்.சௌம்யா, நித்யஸ்ரீ, பிரியா சகோதரிகள் ஆகிய நால்வரும் இனிய கானங்களை வழங்க உள்ளனர். இதையடுத்து இந்திய வயலின் மேதை எல்.சுப்ரமணியம், அவருடைய மனைவி கவிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் குடும்பத்தினர் பங்குபெறும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இறுதியாக பிரபல பின்னணிப் பாடகர்கள் கார்த்திக், ஸ்வேதா மோகன், சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோர் அறுபதுகளிலும் எழுபதுகளில் வெளியான திரையிசைப் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்விக்கப்போகிறார்கள்.
இந்த விழா சென்னை மியூசிக் அகாடெமியில் தினந்தோறும் மாலை 7:30-க்கு நடைபெறும். நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் தி இந்து இணையதளத்தில் கிடைக்கின்றன.