இலக்கியம்

காமிக்ஸ் கார்னர்: நர வேட்டை நாயகன்!

வெ.சந்திரமோகன்

காமிக்ஸ் நாயகர்களின் பட்டியலில் அறமும் தார்மீக உணர்வும் கொண்ட அப்பழுக்கற்ற மனிதர்கள் மட்டுமல்ல; விபரீதமான குணம் கொண்ட கொடூரர்களும் இடம்பெறுவதுண்டு. தங்களுக்கான தார்மீக நெறியை விடாது பின்பற்றுவதால்தான் இதுபோன்றவர்களுக்குக் கதாநாயகர்களின் அந்தஸ்து கிடைக்கிறது. அப்படியான ஒரு காமிக்ஸ் நாயகன்தான் ஜெனரல் ஜாரோப்.

வேட்டை... அதுவும் நர வேட்டை. இதுதான் ஜாரோபின் பொழுதுபோக்கு, வெறி, விளையாட்டு எல்லாம். ரஷ்யாவைச் சேர்ந்த ஜாரோப், ஏதோ ஒரு சூழலில் நேரிட்ட மனப்பிசகு காரணமாக நர வேட்டை எனும் கொடும் குற்றத்தில் ஈடுபடுகிறான். ஆளரவமற்ற தீவில் தனது பரிவாரங்களுடன் குடியேறி, அந்தப் பக்கம் வரும் கப்பல்களைக் கவிழ்த்து, அதில் உயிருடன் மிஞ்சுபவர்களை வைத்து வேட்டை விளையாட்டை நடத்திவருவான். அப்படிப்பட்ட வெறியனுக்குச் சவால் விடுகிறாள், அவனால் வேட்டையாடப்படும் ஒரு டானின் மகள் பியோனா ப்ளானாகன். ஜாரோபின் தங்கையையும், அவளது மூன்று குழந்தைகளையும் அவனது தீவுக்கே கொண்டுவந்து விட்டுவிட்டு, அவள் ஒருபக்கம் மனித வேட்டையைத் தொடங்கியிருப்பாள். அவளுக்கென ஒரு விசுவாசப் படை அந்த வேட்டையில் துணை நிற்கும். தீவின் அடர்ந்த வனத்துக்கு நடுவே நடக்கும் இந்த மரண விளையாட்டில் வெல்வது யார் என்பதுதான் கதை. ரத்தம் தெறிக்கும் இந்த காமிக்ஸின் சித்திரங்கள் மிகச் செறிவானவை. சக மனிதர்களை வேட்டையாடும் மனிதர்களின் விஷமப் புன்னகை முதல், சிறுத்தைகளின் கண்களில் தெறிக்கும் பசி வெறி வரை அனைத்திலும் அவ்வளவு நுணுக்கம்.

நில்… கவனி… வேட்டையாடு!
கதை: சில்வெய்ன் ருன்பெர்க்
ஓவியம்: ஃப்ராங்கோயிஸ் மிவில்லி - டெஷென்ஸ்
தமிழில்: எஸ்.விஜயன்
ஜம்போ காமிக்ஸ்
அம்மன்கோவில்பட்டி, சிவகாசி-626 189.
தொடர்புக்கு: 9842319755
விலை: ரூ.125

SCROLL FOR NEXT