புதுக்கவிதைகளில் ஒரு உரையாடலைக் காண முடியும். வாசகனும் படைப்பாளியும் இணைந்து பயணிக்கும் சுதந்திரத்தைப் புதுக்கவிதைகள் வழங்குகின்றன. வாசித்து முடித்த பின்பும் நீளும் உரையாடலின் சாத்தியம் தற்காலக் கவிதைகள்.
நம்மிடமுள்ள சில நூறு புதுக்கவிதைகள் தனித்து ஒளிரும் நிறத்தவை. பிச்சமூர்த்தியின் 'பெட்டிக்கடை நாரணன்' புதுக்கவிதையின் முதல் வெளிச்சம். ஏதுமற்ற மனிதன் பிழைக்க வழி தேடுகிறான். பெட்டிக்கடை ஒன்றைத் திறக்கிறான். இன்று கடன் இல்லை என்ற வாசகத்தோடு வியாபாரம் நடக்கிறது. தேனாகப் பேசி வாடிக்கையாளர்களை ஈர்க்கிறான். பெட்டிக்கடை நாரணனின் 20 ரூபாய் முதலீடு 200 ஆக மாறி உருமாலை நாரணன் ஆகிறான். மெல்ல வளர்ந்து பணம் சேர்த்து மளிகைக் கடை வைக்கிறான். மண்ணெண்ணெய்ப் பங்கீடு வருகிறது. அடுத்தவன் பணம் முயற்சி இல்லாமலே இவனிடம் சேரத் தொடங்குகிறது. கவிதையின் ஆரம்ப வரிகள் ஒருவன் இருத்தலுக்காகச் செய்கிற முயற்சிகள். அந்த எல்லை வரை யாரும் அவனைக் குற்றம் சொல்ல முடியாது. அதன் பிறகு என்ன நடக்கிறது?
எண்ணைக்குப் பின்னர்
அரிசிக்கும் பங்கீடு
தானாகத் தங்கம்
தடத்தில் கிடைத்தால்
ஓடென்றொதுக்க நான்
பட்டினத்தாரா?
இந்த மனம் ஜனித்த பின்பு சும்மா இருப்பானா? பணத்தைப் பின்தொடர்கிறான். இதன் பிறகு வருகிற வார்த்தைகள் ஒவ்வொன்றும் கவிதையாகிற இடத்தில் அதிர்கின்றன. இதிலிருக்கும் பகடியே கவிதையின் அழகியல். 'தானாகத் தங்கம் தடத்தில் கிடைத்தால் ஓடென்றொதுக்க நான் பட்டினத்தாரா?' என்ற கேள்வியை இன்றைய அரசியலோடு பொருத்திப் பார்க்கலாம்.
மீன்கொத்தி ஒன்று
உள்ளே இருந்ததால்
பங்கீட்டுக்கடை ஒன்று
பட்டென்று வைத்தேன்:
பணக்காரன் ஆனேன்.
உண்மைக்கும் வாழ்க்கைக்கும் உள்ள முரண்களை மனதில் போடுகிறார். பதில் ஏதும் பெரிதாகக் கிடைக்கவில்லை. சமூகம் அதன் போக்கில் நகர்கிறது. வாழ்க்கையின் நெருக் கடியை ஒவ்வொரு மனிதனும் தன் அளவில் சந்தித்தாக வேண்டும். ‘பெட்டிக்கடை நாரணன்’ உண்மையான அரசியல் கவிதை. வெளியிலிருக்கும் அரசியல் அல்ல. கவிதைக் குள் ஜனிக்கிற அரசியல். பெட்டிக்கடை நாரணன் மனதில் ஓடும் எண்ண ஓட்டத்தைக் கவனியுங்கள்....
பங்கீட்டுக் கடைகளால்
பணக்காரர் ஆனால்
பாவம் என்றேதேதோ
பேப்பரில் வந்தது
பாவமொன்றில்லாவிட்டால்
பாருண்டா?
பசியுண்டா?
மண்ணில் பிறப்பதற்கு
நெல் ஒப்பும்போது
களிமண்ணில் கலந்திருக்க
அரிசி மறுப்பதில்லை.
'பாவமொன்றில்லாவிட்டால் பாருண்டா? பசியுண்டா?'இந்தக் கேள்வி கவிதையை வாசித்து முடித்த பின்பும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மறைந்திருக்கும் பகடிக்குள் இருக்கும் கவிதை அழிக்க முடியாது நெஞ்சில் பதிகிறது. பெட்டிக்கடை நாரணன் இடத்தை இன்று பெரிய வணிக நிறுவனங்கள் பிடித்துக்கொண்டன. பெட்டிக் கடைகளை வணிக நிறுவனங்கள் விழுங்கத் தொடங்கிவிட்டன. இன்று 'பெட்டிக்கடை நாரணன்' கவிதையை மீண்டும் படிக்கும்போது பிச்சமூர்த்தியின் கவிதை ஆழம் வியக்க வைக்கிறது.
கவிதையின் இறுதி வரிகள்....
மூட்டையை பிரிக்கு முன்னர்
முந்நூறு பேரிருந்தால்
சலிப்பதெங்கே?
புடைப்பதெங்கே?
புண்ணியம் செய்யத்தான்
பொழுது எங்கே?
தற்கால வரலாறு பதிவு செய்யாதவற்றைக் கவிஞன் பதிவு செய்கிறான். 'பெட்டிக்கடை நாரணன்' கவிதை இந்த நூற்றாண்டின் கவிதை. ''புண்ணியம் செய்யத்தான் பொழுது எங்கே?'' என்ற கேள்வி நாம் கடந்து வந்த வாழ்க்கையின் சகல இடங்களையும் காட்டிவிடுகிறது. பகடி பெரிய வலியாய் மனதில் நிலைக்கிறது. இந்தக் கவிதையை புதுக்கவிதையை வாசிப்பதற்கான முதல் வெளிச்சமாகக் கொள்ளலாம்.