இலக்கியம்

ஏ.ஜி.கே.: மறக்கப்பட்ட மக்கள் தலைவர்

புவி

ஏ.ஜி.கே. எனும் போராளி
தொகுப்பு: மு.சிவகுருநாதன்
பன்மை வெளியீடு
திருவாரூர்- 610004
தொடர்புக்கு:
98424 02010
விலை: ரூ.290

கீழத்தஞ்சையில் விவசாயத் தொழிலாளர்களைப் பண்ணையடிமைகளாக வைத்திருந்த நிலவுடையாளர்களுக்கு எதிராகப் போராடி, உழைக்கும் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தந்த முதன்மையான தலைவர்களில் ஒருவர் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன்(1932-2016). பெரியாரியத்தையும் மார்க்ஸியத்தையும் தனது வழிகாட்டும் கொள்கைகளாக ஏற்றுக்கொண்டவர். இரண்டுக்கும் இடையில் இணக்கம் கண்ட முன்னோடி. திராவிட, மார்க்ஸிய விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் வழியே மக்கள் போராட்டங்களை முன்னின்று ஒருங்கிணைத்தவர். கூடவே, தமிழ்த் தேசிய உணர்வையும் ஏற்றுக்கொண்டவர். 44 உயிர்களைக் குடித்த வெண்மணிக் கொடுமைக்குக் காரணம் கூலி உயர்வுப் போராட்டம் அல்ல; ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதைப் போராட்டம் என்று தொடர்ந்து வலியுறுத்திவந்தவர். விவசாயத் தொழிலாளர்களுக்காகப் போராடியதற்குப் பரிசாகத் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை சிறைச்சாலையில் செலவிட்டவர். தலைமறைவுக் காலத்தில் அவர் நிகழ்த்திய சாகசங்கள் இன்றும் கீழத்தஞ்சை கிராமங்களில் கதைகளாக உலா வருகின்றன.

ஏ.ஜி.கே. மறைவையொட்டி பல்வேறு இதழ்களில் வெளிவந்த இரங்கல் குறிப்புகள், ஏ.ஜி.கே. குறித்த பசு.கவுதமனின் நூலுக்கான விமர்சனக் குறிப்புகள் ஆகியவற்றுடன் புதிதாக எழுதப்பட்ட 17 கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தியாகு, சி.அறிவுறுவோன், பொதிகைச்சித்தர் உள்ளிட்ட அவருடன் நெருங்கிப் பழகிய ஆளுமைகளின் கட்டுரைகளோடு குடும்பத்தினரின் நினைவுப் பதிவுகளும் இத்தொகுப்பின் உள்ளடக்கம். பின்னிணைப்பில் வெண்மணிக் கொடுமையைக் கண்டித்து பெரியார் எழுதிய தலையங்கமும், தியாகுவின் ‘சுவருக்குள் சித்திரங்கள்’ நூலில் ஏ.ஜி.கே. பற்றிய இரண்டு அத்தியாயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சிறைப்பட்ட நிலையிலும் சக கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடியவர் ஏ.ஜி.கே. என்பதை தியாகு எழுதிய சிறைச்சாலை நினைவுகள் சொல்கின்றன. தியாகு சொல்லியிருப்பதைப் போல, ஒரு மார்க்ஸியருக்கு வாழ்க்கை என்பதே போராடக் கிடைத்த வாய்ப்புதான். அந்த வாய்ப்பை எப்படி வெற்றிகொள்வது என்பதற்கு ஏ.ஜி.கே. ஒரு முன்னுதாரணம்.

SCROLL FOR NEXT