இருமாதங்களாத் தூக்கமில்லாத துயரம். தூக்கத்துக்குக் கண் செருகும்போது ஏதோ ஒரு புற, அகச் சப்தம் எழுப்பிவிடும். கூடவே, வலது மூளை இருபது திரைப்பக்கங்கள் திறக்கப்பட்ட பழைய கணினி போல சூடாகி விடும். வியர்வை கழுத்தை நனைக்கும். தூக்கத் தொந்தரவு என்பதைவிட தூங்குவது எப்படி என்பது மறந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
மாலை சாய்ந்து இரவு வரும்போதே தூக்கம் குறித்த பதற்றம் தொற்றிக்கொள்ளும். வார்த்தைகள் நிற்காத வார்த்தைகள் ஓடிக்கொண்டேயிருக்கும். என்னை மீறி, என்னுடையதில்லாமல். எப்படி நிறுத்துவதென்று புரியாத யோசனையும் வார்த்தைக ளாகவே. காட்சிரூபமே கண்ணுக்கு எட்டாமல். செவிப்புலத்தின் சர்வாதிகாரத்தில் இருந்தேன். மருத்துவரின் எந்த மாத்திரையும் பயனளிக்கவில்லை.
சூடான பால், பாதத்தில் விளக்கெண்ணெய், வேலைக்காகவில்லை. பிராணாயாமமும் அமுக்கரா சூரணமும் கொஞ்சம் பயனளித்தன. ஆனால், கடைசியில் எனக்கு உதவியது தி. ஜானகிராமன் தான். செம்பருத்தியை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். முதல்நாள் கொஞ்சம் தூக்கம்வருவதுபோல் தெரிந்தவுடன், பகலில் ஒரு மணி, இரவில் தூங்கும்முன் ஒரு மணி, என்று மாத்திரைபோல. நிதானமாக மிக நிதானமாக. ஒருவரி விடாமல். சிலவரிகளில் தேர்போல நின்று. ஒன்றி. தி.ஜா மொழியைப் பற்றி ‘இரகசியம்’ ஒன்று கண்டுபிடித்தேன். அவர் வார்த்தைகளைக் காட்சிரூபமாக மாற்றுவதில் வல்லவர்.
வாசிக்கும்போதே மொழி காட்சியாக மாற ஆரம்பிக்கும் மனதில். இதனால்தான் போலும், என்னில் நிற்காதிருந்த வார்த்தைகள் நிற்க ஆரம்பித்தன. ஒருவழியாகத் தூக்கத்தின் வசப்பட்டேன், கனவின் வசப்பட்டேன். இலக்கியத்தின் குணமாக்கும் சக்தியை, இறையின் அருளை அனுபவித்த ஒருத்தியின் சாட்சியம் போல, இங்கே சாட்சியம் கூறுகிறேன்.
(கவிஞர் பெருந்தேவி தனது முகநூலில் எழுதிய அனுபவக்குறிப்பு)