இலக்கியம்

பிறமொழி நூலகம்: நான்கு நூற்றாண்டு தென்னிந்திய வரலாறு

வீ.பா.கணேசன்

மாடர்ன் சவுத் இந்தியா
ராஜ்மோகன் காந்தி
அலெப் புக் கம்பெனி
தார்யாகஞ்ச்,
புதுடெல்லி-110 002.
விலை: ரூ.799

பதினாறாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கி 2018 வரையிலான காலகட்டத்தின் தென்னிந்திய வரலாற்றைச் சுருங்கக் கூறும் முயற்சியாக ராஜ்மோகன் காந்தியின் இந்நூல் அமைகிறது. 16-ம் நூற்றாண்டில் தக்காணப் பீடபூமியின் பீஜப்பூர், அகமத் நகர், கோல்கொண்டா, பிடார் சுல்தான்கள் ஒன்றிணைந்து, மத்திய காலப் பகுதியின் மிகப் பெரும் அரசான விஜயநகர ஆட்சிக்கு முடிவுகட்டினர்.

அதைத் தொடர்ந்து வலுகுன்றிய நாயக்கர்கள், சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் இவர்களின் பரஸ்பரப் பகைமையை ஐரோப்பிய வர்த்தக கம்பெனிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் அதிகார எல்லையை விரிவுபடுத்தின.
17-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ், பிரெஞ்சு நாட்டு கம்பெனிகள் மட்டுமே களத்தில் இருந்தன. அப்போது ஆட்சியில் இருந்த சிற்றரசர்களின் உதவியும் இவர்களின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாக இருந்தன.

அவ்வகையில், நாடு விடுதலை பெறும் வரை தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட சமூக மாற்றங்களைப் பதிவுசெய்வதாகவும் இந்நூல் அமைகிறது. இக்காலப் பகுதியில் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு மொழி பேசும் பகுதிகளிலும் குடகு, கொங்கணி, மராத்தி, ஒரியா மொழி பேசும் பகுதிகளிலும் பண்பாட்டுரீதியாக ஏற்பட்ட மாற்றங்களைத் தனித்த கவனம் கொள்ளத்தக்க வகையில் இந்நூல் கையாண்டுள்ளது.

இந்த மாற்றங்களில், மொழிகளுக்கிடையே பரஸ்பரப் போட்டி நிலவியபோதும் ஒவ்வொரு மொழியும் இதர மொழிகளுக்கு இணையான வகையில் பங்களித்துவந்துள்ளதையும் நூலாசிரியர் விரிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வகையில், இந்நூல் கடந்த நான்கு நூற்றாண்டு காலத்திய தென்னிந்திய அரசியல் வரலாற்றையும் பண்பாட்டு வரலாற்றையும் அதன் முக்கியத் தருணங்களையும் சுவைபடத் தருவதில் வெற்றிபெற்றுள்ளது.

SCROLL FOR NEXT