இலக்கியம்

தூக்கு மேடைக் குறிப்புகள்

செய்திப்பிரிவு

ஆசிரியர் பற்றி:

ஐரோப்பாவில் 1993 வரை இருந்த செக் கோஸ்லோவாக்கியா நாட்டில் பிறந்தவர். பள்ளிப் பருவத்திலிருந்தே அரசியலிலும் கலை இலக்கியத்திலும் ஆர்வம் உள்ளவர். ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் செயல்பட்டார். ஹிட்லரின் தலைமை யில் ஜெர்மனி பக்கத்து நாடுகளை ஆக்கிரமித்த போது கைதுசெய்யப்பட்டார். சித்ரவதைக்கு ஆளாகி ஓராண்டுக்கு மேலாகச் சிறையில் வாடிய பிறகு 40-வது வயதில் தூக்கில் போடப்பட்டார்.

நூலின் பின்னணி

சோவியத் யூனியனின் உருவாக்கம் பல நாடுகளை சங்கடப்படுத்தியது. தாங்கள்தான் உலகின் சிறந்த இனம். தாங்களே உலகை ஆளப் பிறந்தவர்கள் எனும் ஜெர்மானியர்களின் அரசியல் கருத்து இரண்டாம் உலகப்போரை உருவாக்கியிருந்த காலம். இந்த இரண்டு கருத்துகளின் மோதலில் மனிதர்கள் அனுபவித்த மரண அவஸ்தைகளின் வெளிப்பாடே இந்த நூல்.

நூலைப் பற்றி:

எந்த நிமிடத்திலும் சாவு வரலாம் என்ற நிலை. அந்த நேரத்தில் சிறையில் கிடைத்த காகிதங்களை வைத்து எழுதிய குறிப்புகள் இரண்டு காவலர்களால் கடத்திச் சென்று பாதுகாக்கப்பட்டன. அதுவே ‘நோட்ஸ் ஃப்ரம் த கேலோஸ்’ என்ற பெயரில் 1947-ல் வெளியாகியது. அதன் தமிழாக்கமே இந்த நூல்.

அந்த நேரத்திலும் தன்னைச் சுற்றியிருந்த மனிதர்களின் கொடூரம், அன்பு, தோழமை, வஞ்சகம், துரோகத்தைப் பதிவு செய்துள்ளார். கொல்லப்பட்டுவிட்டதாக அவர் நம்பிய மனைவியின் மீதான காதலும் உள்ளது. இறுதி வெற்றி மக்களுக்கே என்பதில் அவருக்குக் கடைசிவரையில் துளியும் சந்தேகமில்லை. தூக்கில் தொங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகக்கூட நம்பிக்கையோடு அவர் விடைபெறும் காட்சி மிகவும் உணர்வுபூர்வமானது.

இந்த நூல் ஹிட்லரின் படைகளால் கொல்லப்படாமல் தப்பிய அவரது மனை வியால் வெளியானது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மனிதநேயத்தோடு வாழ்பவர்களுக்கு உத்வேகம் அளித்துக்கொண்டிருக்கிறது. ஜூலியஸ் பூசிக் இறந்து 70 ஆண்டுகளுக்கு மேலானாலும் இன்று நாம் அனுபவிக்கிற ஜனநாயக உரிமைகளின் மூலமாக அவர் நம்மோடு உரையாடிக்கொண்டுதான் இருக்கிறார்.

-த.நீதிராஜன்

தூக்குமேடைக் குறிப்பு
நூலாசிரியர்: ஜூலியஸ் பூசிக்:
தமிழில்: எம்.இஸ்மத் பாஷா
விலை:ரூ.75
வெளியீடு: தமிழ் புத்தகாலயம்
தி.நகர்,சென்னை-17.
தொடர்புக்கு: 044-28340495.

SCROLL FOR NEXT