இலக்கியம்

காமிக்ஸ் கார்னர்: இருண்மை மண்டிய கானகத்தின் கதை

வெ.சந்திரமோகன்

மெல்லத் திறந்தது கதவு
தமிழில்: எஸ்.விஜயன்
முத்து காமிக்ஸ் வெளியீடு
அம்மன்கோவில்பட்டி, சிவகாசி - 626189.
தொடர்புக்கு:
98423 19755
விலை ரூ.100

காமிக்ஸ் புத்தகங்களில் சாகசம், கேளிக்கை போன்ற அம்சங்களுக்கு மட்டுமல்லாமல் மர்மத்துக்கும் தனி இடம் உண்டு. மங்கலான துர்க்கனவுகளையொத்த கதைப் பின்னல் கொண்ட கதைகள் காமிக்ஸ் உலகில் ஏராளம். பரவலாக அறியப்பட்ட எல்லா காமிக்ஸ் நாயகர்களும் இதுபோன்ற ஏதேனும் ஒரு கதையிலேனும் தோன்றியிருப்பார்கள். ‘மர்ம மனிதன்’ என்று அழைக்கப்படும் மார்ட்டின் இதற்கெனவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். அவர் தோன்றும் ‘மெல்லத் திறந்தது கதவு’ திகிலூட்டும் ஓர் அறிவியல் புனைகதை.

தன்னுள் நுழையும் மனிதர்களின் மனதில் கோரச் சித்திரங்களை உருவாக்கி மாயச்சுழலில் அமிழ்த்தும் கானகம் குறித்த பழங்கதை ஒன்றுடன் கதை தொடங்குகிறது. மனப்பிறழ்வு கொண்ட இளம் பெண் கிளாரிஸ் நிகழ்த்தும் நரபலி, கானகம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சி மாணவி அலீனாவை அச்சுறுத்தும் கோர உருவங்கள் என நீளும் இருள் நிறைந்த கதையில் வெளிச்சம் பாய்ச்சுவார் மார்ட்டின். அவரும் இந்த மாயச்சுழலில் சிக்கி, கடைசி நொடியில் காப்பாற்றப்படுவார். மரணம் குறித்த சுயபரிசோதனை, பெண்களையும் குழந்தைகளையும் சீண்டுபவர்களைத் தண்டிக்கத் தயங்காத கிரேக்கக் கடவுள் டயானா குறித்த குறிப்புகள், ரசவாதம் தொடர்பான பதிவுகள் என ஒன்றையொன்று பிணைத்திருக்கும் மெல்லிழைகளின் முடிச்சை, மெல்ல அவிழ்த்துக்கொண்டே செல்கிறது கதை.

திகைப்பூட்டும் சம்பவங்களின் பின்னணியை இறுதியில் அறிவியல்பூர்வமாக இந்தக் கதை விளக்கினாலும், தனிமனித வக்கிரம் ஏற்படுத்தும் ஆறாத வடுவின் விளைவுகளும் மிக நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. இயற்கை குறித்தும், சக மனிதர்கள் குறித்தும் கவலைப்படாத நிறுவனங்களின் அட்டூழியங்களும் கதையோட்டத்தினூடே சொல்லப் பட்டிருப்பது இதன் இன்னொரு சிறப்பு.

SCROLL FOR NEXT