இலக்கியம்

இந்திரா காந்தியின் அறியப்படாத முகம்

முகம்மது ரியாஸ்

இந்திரா காந்தி: இயற்கையோடு இயைந்த வாழ்வு
ஜெய்ராம் ரமேஷ்
தமிழில்: முடவன் குட்டி முகம்மது அலி
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001.
தொடர்புக்கு: 96777 78863
விலை: ரூ.295

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான ஜெய்ராம் ரமேஷ் எழுதிய ‘இந்திரா காந்தி: இயற்கையோடு இயைந்த வாழ்வு’ புத்தகமானது சூழலியல் சார்ந்து இந்திரா காந்தியின் அக்கறையையும், காடுகள், வன விலங்குகள், பறவைகள் எனப் பல்லுயிர் சார்ந்த அவரது காதலையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது. ஒருவகையில் இந்தப் புத்தகம் இந்திரா காந்தி மீதான பொதுப்பார்வையையும் மாற்றி அமைக்கிறது. ஒரு இயற்கையியலாளராக அவரது வாழ்க்கைப் பயணம், அரசியல் பயணம் எவ்வாறு இருந்தது என்பதையே இந்நூலில் ஜெய்ராம் ரமேஷ் பதிவுசெய்கிறார். இந்திரா காந்தி எழுதிய கடிதங்கள், ஆற்றிய உரைகள், பிறரின் புத்தகங்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகள், அவரது அலுவலகக் குறிப்புகள் ஆகியவற்றின் தொகுப்பாக இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்திரா காந்தியின் நூறாவது பிறந்த நாளையொட்டி (2017) ஆங்கிலத்தில் வெளியான இந்நூலை, தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் முடவன் குட்டி முகம்மது அலி.

இந்திரா காந்தி ஒரு அரசியல் ஆளுமையாக மட்டுமே அறியப்படுகிறார். ஆனால், அரசியலுக்கும் மேலாக சூழலியல் மீதே அவர் அதிகம் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். ‘அரசியல் சுழிக்குள் சிக்கிக்கொண்ட ஓர் இயற்கையியலாளர் அவர்’ என்றே இந்திரா காந்தியை ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிடுகிறார். தாவரங்கள், மரங்கள், பறவைகள், விலங்குகள், மலைகள், வனங்கள் என இயற்கை மீது பெரும் பற்றுதலோடு இந்திரா காந்தியின் வளர்ச்சி அமைகிறது. இந்திரா காந்திக்கு நேரு எழுதிய கடிதங்களில் கணிசமானவை இயற்கை பற்றியவை. இந்திரா காந்தியின் பதிமூன்றாம் வயதில் ‘தேனீயின் வாழ்க்கை’ என்ற நூலை நேரு பரிசாக அளிக்கிறார். பறவைகள், எறும்புகள், வண்ணத்துப்பூச்சிகள், காட்டுயிர்கள் என சூழலியல் சார்ந்து அவரது வாசிப்புப் பயணம் அமைகிறது. மனித மைய உலகத்திலிருந்து விடுபட்டு, இயற்கையை நோக்கித் திரும்ப முயலும் ஒரு சிறுமியின் எத்தனம் இந்திரா காந்தியிடம் வெளிப்படுகிறது.

பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, சூழலியல் மீதான அவரது அக்கறைகள் சட்டங்களாக மாறின. சூழல் மாசுபாடு தொடர்பாக இன்று நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் இந்திரா காந்தியின் பதவிக் காலத்தில் உருவாக்கப்பட்டவைதான். கானுயிர்ப் பாதுகாப்பு, வனப் பராமரிப்புச் சட்டம் அவர் இயற்றிய சட்டங்களில் மிக முக்கியமானவை. இந்தியாவெங்கும் உள்ள பெரும்பாலான பூங்காக்கள், வன விலங்குகள் சரணாலயங்களின் இருப்பிலும், அவற்றின் பாதுகாப்பிலும் அவரது பங்களிப்பு முக்கியமானது. அரசியல் விவாதங்களின் ஒன்றிணைந்த பகுதியாகச் சூழலியல் உருவாக வேண்டும் என்பதையே இந்திரா காந்தியின் சூழலியல் சார்ந்த முயற்சிகள் காட்டுகின்றன. சூழலியலுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்குவது அவரது இலக்குகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. தற்போது உலக நாடுகளெல்லாம் சூழலியல் அழிவையும், காலநிலை மாற்றத்தையும் தீவிரமாக விவாதித்துவருகின்றன. தேர்தல் வாக்குறுதியாக இடம்பெறும் அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன், சூழலியல் பாதுகாப்பு குறித்துப் பெரிதாகப் புரிதல்கள் ஏற்பட்டிருந்திராத காலகட்டத்தில், குறிப்பாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில், இந்திரா காந்தி சூழலியல் பாதுகாப்பு குறித்து முன்மாதிரியாகச் செயல்பட்டுவந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

ஐநா சபை சார்பாக, 1972 ஜூன் மாதம் ஸ்டாக்ஹோமில் மனிதச் சுற்றுச்சூழல் குறித்த முதல் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த ஸ்வீடன் நாட்டுப் பிரதமரைத் தவிர்த்து அங்கு உரையாற்றிய ஒரே அரசுத் தலைவர் இந்திரா காந்தி மட்டுமே. 1976 ஆகஸ்ட்டில் நைரோபியில் நடந்த புதுப்பிக்கத்தக்க மற்றும் என்றும் குன்றாத வளங்கள் குறித்த முதல் ஐநா சபை மாநாட்டில் உரையாற்றிய ஐந்து தலைவர்களுள் இந்திரா காந்தியும் ஒருவர். இந்தியாவில் மட்டுமின்றி உலக அரங்கிலும் சுற்றுச்சூழல் விஷயங்களில் வழிகாட்டியாக இந்திரா காந்தி இருந்திருக்கிறார். உலக அளவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். பறவையியலாளர் சாலிம் அலியுடனான அவரது நட்பு வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கிறது.

இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு எழுதியவர்கள் அவருக்குள் இருந்த இயற்கையியலாளரைக் கண்டுகொள்ளவில்லை. அவரது வாழ்க்கை வரலாறு பற்றிய குறிப்புகள் பலவும் அவரது அரசியல் முகத்தை மட்டுமே மையப்படுத்தியிருக்கின்றன. இந்தச் சூழலில் ஜெய்ராம் ரமேஷின் இந்த நூல், இந்திரா காந்தியின் அறியப்படாத பரிமாணத்தைக் காட்டுகிறது.

- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

SCROLL FOR NEXT