எனது தகப்பனார் தஞ்சையில் ஒரு பிரபல புத்தக விற்பனையாளர். பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத் தகங்கள் மற்றும் அன்றைக்கு வெளிவந்த எல்லா மாதாந்தர, வார இதழ்களுக்கும் முகவராக இருந்தார். அதனால் படிக்க நிறைய புத்தகங்கள் கிடைத்தன. இதுதான் எனது வாசிப்பின் தொடக்கம்.
அப்போது ஆனந்த விகடனில் வந்த தேவன், லஷ்மி எழுதிய கதைகளையும், ‘கல்கி’யில் கல்கி எழுதிய கதைகளையும் விரும்பிப் படிப்பேன். இன்றும் நெஞ்சில் நீங்காது இனிமையாய் இருப்பது ‘தில்லானா மோகனாம்பாள்.’ அது போலவே ‘பொன்னியின் செல்வன்’ நாவலும்’, ‘சிவகாமியின் சபதம்’ நாவலும்.
பிற்காலத்தில், ஜெயகாந்தன் சிறுகதைகள் என்னைக் கவர்ந்தன. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படித்ததன் தாக்கம் என் மனதில் இன்றளவும் உண்டு. மழை பெய்யும் மாலைப் பொழுதில் பேருந்து நிறுத்தத்தில் தனியே நிற்கும் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ‘இவள் கங்காவாக ஆகிவிடக் கூடாதே’ என்ற எண்ணம் எழும். வரலாற்று நூல்கள், ஆர்.எஸ்.எஸ். கொள்கை சார்ந்த நூல்கள், இலக்கியம், பிற மொழி நூல்கள் என எல்லா வகை நூல்களையும் படிக்கிறேன்.
பாரதியின் வரிகளில் ஒன்றைத் தவறாமல் கடைப்பிடித்து வருகிறேன். ‘காலை எழுந்தவுடன் படிப்பு’, பின்பு படுக்கச் செல்லும் வரையிலும் படிப்பு. எனது கார் பயணத்திலும் பேருந்துப் பயணத் திலும் ரயில் பயணத்திலும் புத்தகம் படிக்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறது. இப்படிச் சேர்த்து சேர்த்தே இன்று ஆயிரக்கணக் கான புத்தகங்கள் 7 பீரோக்களில் சேர்ந்துள்ளன. இந்தப் புத்தகங் களுக்குச் சரியான இடம் ஒன்று கிடைத்தால் பொதுமக்கள் பயன்பெறும் விதத்தில் வைக்கவும் விரும்புகிறேன்.
சமீபத்தில் நான் வாசித்த நூல்களின் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை சில இருக்கின்றன. அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட்டுள்ள டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், டாக்டர் ய.சு.ராஜன் எழுதியுள்ள ‘2020 ஆண்டுக்கு அப்பால்’, டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் தொகுத்துள்ள ‘சிந்தனை ஒன்றுடையாள்’ஆகிய இரு நூல்களும், ஊடகவியலாளர் சிவலிங்கம் சதீஷ்குமார் எழுதிய ‘வெளிநாடுகளில் தமிழர்’ என்ற நூலும்தான் அவை.
- கேட்டு எழுதியவர்: மு.முருகேஷ்