21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
யுவால் நோவா ஹராரி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
விலை: ரூ.450
தொடர்புக்கு: 98194 59857
யுவால் நோவா ஹராரியின் முதல் புத்தகமான ‘சேப்பியன்ஸ்’, மனித குல வரலாற்றை ஆராய்ந்தது. மனித குலம் எப்படி உருவானது, மொழி, மதம், பொருளாதாரம், அரசதிகாரம் எவ்வாறு மனித குலத்தின் போக்கைத் தீர்மானித்தன என மனித குலத்தின் பரிணாமம் மீது சாத்தியமிக்க பார்வையை அதில் அவர் முன்வைக்கிறார். இரண்டாவது புத்தகமான ‘ஹோமோ டியஸ்’, மனித குலத்தின் எதிர்காலம் பற்றியது. மனிதர்களின் அறிவு, அகவிழிப்புணர்வின் உச்சகட்ட நிலைமை என்னவாக இருக்கும் என்பதை அந்தப் புத்தகத்தில் பேசுகிறார். மூன்றாவது புத்தகமான ‘21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்’ (21 Lessons for the 21st Century), தற்போது மனித குலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள், அவற்றை எதிர்கொள்ள நாம் செய்ய வேண்டிய காரியங்கள் ஆகியவற்றைப் பேசுகிறது. மூன்று புத்தகங்களுமே விற்பனையிலும், அறிவுத்தள விவாதங்களிலும் உலகம் முழுவதும் செல்வாக்கு செலுத்தின.
தரவுகள், நடப்புகள் வழியாக அல்லாமல் கதைகளின் வழியாகவே மனித குலம் சிந்திக்கிறது என்கிறார் ஹராரி. ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு குழுவும், ஒவ்வொரு நாடும் தனது சொந்தக் கதைகளைக் கொண்டிருக்கிறது. அப்படியாக பாசிசம், கம்யூனிசம், தாராளவியம் என்ற மூன்று கதைகள்தான் கடந்த நூற்றாண்டின் வரலாற்றை எழுதியிருக்கின்றன. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து பாசிசமும், சோவியத் வீழ்ச்சியைத் தொடர்ந்து கம்யூனிசமும் வீழ்ந்தன என்கிறார் ஹராரி. 2008-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு தராளவியம் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
தற்போது நம்மிடம் எந்தப் புனைகதையும் இல்லை. எனில், நாம் எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்ற கேள்வியின் வழியாக இந்நூலைத் தொடங்குகிறார் ஹராரி. தற்போது உலகம் கண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி, அதன் வழியிலான சமூகம், அதன் அரசியல் போக்கு, தனிமனிதச் சுதந்திரம், வேலைவாய்ப்பு, குடியேற்றம், தீவிரவாதம், போர், உண்மை, கல்வி போன்றவற்றின் எதிர்கால நிலை எப்படி இருக்கும், அதில் நாம் செய்யக் கூடியது என்ன என்பன குறித்துப் பரந்துபட்ட பார்வையை முன்வைக்கிறார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், அதன் போக்கும்தான் இந்நூலின் அடிநாதம். முந்தைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் போன்றல்லாமல், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனிதனின் சிந்தனையை, உள்ளுணர்வைப் புரிந்துகொள்ளக் கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அதன் அடுத்தகட்டப் போக்கைத் தற்போதிருக்கும் ஜனநாயக வடிவத்தால் எதிர்கொள்ள முடியாது என்றும், ஜனநாயகம் முற்றிலும் புதிய பரிணாமம் எடுக்காதபட்சத்தில், மனிதர்கள் ‘டிஜிட்டல் சர்வாதிகார’ ஆட்சிகளின் கீழ் வாழ வேண்டிவரும் என்று சொல்லும் ஹராரி, தரவுகள் யார் வசமோ, எதிர்காலம் அவர்கள் வசமே என்று எச்சரிக்கை விடுக்கிறார்.
தேசியம் என்பது மனித உளவியலின் ஓர் இயல்பான, நிரந்தரமான பகுதி இல்லை; நாட்டுப்பற்று என்ற கதையின் வழியாகவே தேசியம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறும் ஹராரி, சமூகம் என்பது புதிய வரையறைக்கு உட்பட வேண்டிய அவசியத்தை ஃபேஸ்புக் பயன்பாடுகளின் வழியாக உணர்த்துகிறார். மொழி, இனம், நாடு என்ற செயற்கையான பகுப்புகளைத் தாண்டி, மனித மனம் தன்னை இணைத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அவ்வகையில் ஃபேஸ்புக் புதிய சமூகங்களைக் கட்டியெழுப்பும் பணியில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
நம்முடைய நவீன சர்வதேச உலகைக் கட்டமைத்திருக்கும் இணைப்புச் சங்கிலிகளெல்லாம் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்து அதிக சிக்கலானவையாக இருக்கின்றன. இத்தகைய காலகட்டத்தில், விழுமியங்கள் தொடர்பாக மக்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். ஒருவர் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாமல் அவருடைய வீட்டில் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால், சோஷலிஸ்ட்டுகளின் பார்வைப்படி, அவருடைய வசதியான வாழ்க்கையானது மூன்றாம் உலகில் உள்ள தொழிற்சாலைகளில் கசக்கிப் பிழியப்படும் குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பைச் சார்ந்துள்ளது. இந்த இடத்தில் ஒருவரது அறவுணர்வு திணறிப்போகிறது. எது சரி, எது தவறு என்ற முடிவுறா குழப்ப நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார்.
‘நம்முடைய நியாய உணர்வு சிறு வேட்டையாடிக் குழுக்களின் வாழ்வில் முளைத்த சமூக நெருக்கடிகளையும், நெறிமுறை சார்ந்த இக்கட்டான சூழ்நிலைகளையும் கையாள்வதற்காகப் பல கோடிக்கணக்கான ஆண்டுகாலப் பரிணாம வளர்ச்சியின் ஊடாகச் செதுக்கி வடிவமைக்கப்பட்டது. ஒட்டுமொத்தக் கண்டங்களின் குறுக்காக, பல கோடிக்கணக்கான மக்களுக்கு இடையேயான உறவுகளை நாம் புரிந்துகொள்ள முயலும்போது, நமது அறவொழுக்க உணர்வு திக்குமுக்காடிப் போகிறது. நியாயம் என்பது உருவமற்ற விழுமியங்களை மட்டுமல்லாமல், காரணத்துக்கும் அதன் விளைவுக்கும் இடையேயான திட்டவட்டமான உறவைப் பற்றிய புரிதலையும் கோருகிறது’ என்று கூறுவதன் வழியே, நாம் இன்று வாழும் உலகுக்கு ஏற்ப நாம் நியாயக் கண்ணோட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
எனில், இந்த யுகத்தை நாம் எப்படி எதிர்கொள்வது? நமது குழந்தைகளுக்கு எவற்றைக் கற்றுத்தருவது? முந்தைய யுகத்தில் தகவல்களைத் தெரிந்துவைத்திருப்பது அறிவாகப் பார்க்கப்பட்டது. இன்று நம்மைக் கடலெனச் சூழ்ந்திருக்கும் தகவல்களில் எதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவுதான் இந்த யுகத்தின் அறிவு. எனவே, நாம் கல்விக்கூடங்களில் தகவல்களைத் திணிப்பதற்குப் பதிலாகத் தகவல்களை அர்த்தப்படுத்துவதற்கான திறனை வளர்த்துக்கொள்ளச் செய்ய வேண்டும் என்கிறார் ஹராரி.ஹராரியின் தனித்துவமானது மிகச் சிக்கலான விஷயங்களை எளிய முறையில் கூறுவது. சூழ்ந்திருக்கும் தகவல்களைத் தெளித்தெடுத்து மனித குலப் போக்கின் மீது வெளிச்சம் பாய்ச்சுவது. அதன் வழியே, நம் சிந்தனையில் பெரும் பாய்ச்சல் நிகழ்த்துகிறார்.
இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் நாகலட்சுமி சண்முகத்தின் மொழிப் பயன்பாடு, இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் வாசிப்பதை விடவும் தமிழில் வாசிப்பதற்குச் சிறப்பான அனுபவமாக மாற்றுகிறது. இந்தப் புத்தகம் உட்பட ஹராரியின் ஏனைய இரண்டு புத்தகங்களையும் ‘மஞ்சுள் பதிப்பகம்’ தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறது. அறிவுத் தேடலுள்ள எவரும் தவறவிடக் கூடாத புத்தகங்கள் இவை.
- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in