இன்றைய வாழ்க்கையில் முதியவர்களுக்கான இடம் சமூகத்திலும் குடும்பத்திலும் விளிம்பிலேயே உள்ளது. முதியவர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்களாக, சீக்கிரத்தில் இடத்தைக் காலிசெய்ய வலியுறுத்தப்படுபவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் முதியோர் நல மருத்துவர் வ.செ. நடராசன் எழுதியிருக்கும் இந்நூல் அவசியமானது. முதியவர்கள் மீதான கவனத்தை ஏற்படுத்துவதோடு முதியவர்கள் ஆகவிருக்கும் நம் எல்லாரும் திட்டமிட வேண்டிய விஷயங்களையும் சுட்டிக்காட்டுகிறது.
முதுமையில் மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் இருக்க பணத்தைச் சேமிப்பதன் அவசியம் குறித்து இந்த நூல் பேசுகிறது. முதுமையில் மனைவி மற்றும் கணவனின் இழப்பு ஏற்படுத்தும் நடைமுறைப் பிரச்சினைகளையும் பேசுகிறது. முதிய பெற்றோர்களின் முக்கியத்துவம் குறித்துப் பிள்ளைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் மதிப்பீடுகளையும் பற்றி ஆத்மார்த்தமாகவும் எதார்த்தமாகவும் இந்நூலில் எழுதப்பட்டுள்ளது. சிசுக்கொலை போன்று நம்மிடையே சத்தமற்று வீடுகளில் கொல்லப்படும் முதியவர்களின் கொலைகளைப் பற்றிய அதிர்ச்சி கரமான செய்தி களையும் சொல்கிறது. முதியோருக்கும் முதியோர் ஆகவிருப் போருக்கும் அவசியமானது இப்புத்தகம். குழந்தை நல மருத்துவர்களைப் போல முதியோர் நல மருத்துவ ர்களும் நமக்கு இப்போதைய அவசியத் தேவை என்பதை வலியுறுத்துகிறார் இந்த நூலின் ஆசிரியர் நடராசன்.
- வினுபவித்ரா
ஏன் இந்த இடைவெளி - முதியோர்களின் குடும்பப் பிரச்சினைகளும் தீர்வுகளும்
டாக்டர் வ.செ.நடராசன்
விலை: 90.00
வெளியீடு: வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு, தி.நகர்
சென்னை-17
தொலைபேசி: 044-24342810