இலக்கியம்

நூல்நோக்கு: வடஆர்க்காடு மனிதர்களின் கதைகள்

சுப்பிரமணி இரமேஷ்

சாவடி
கவிப்பித்தன்
நூல்வனம் வெளியீடு
ராமாபுரம், சென்னை-89.
தொடர்புக்கு:
91765 49991
விலை: 180

வட்டார எழுத்துகளுக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்தபோதுதான் நவீன இலக்கியம் ஜனநாயகப்படுத்தப்பட்டது. அந்தந்தப் பகுதி சார்ந்த மொழிகளில் புனைகதைகள் எழுதப்படும்போது, மொழியுடன் அந்த மண்ணின் பண்பாட்டு விழுமியங்களும் பரவலாக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்ப் புனைகதை வரலாற்றைப் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட பகுதியே வட்டார இலக்கியத்தில் அதிக அளவில் பங்களிக்கிறது. குறிப்பாக, தென் தமிழகத்தின் நெல்லை, கரிசல் பகுதிகளில் இருந்துதான் வட்டார இலக்கியம் அதிக அளவில் எழுதப்படுகிறது. ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித் துறை வெளியிடும் மாணவர்களின் தேர்ச்சி விகிதப் பட்டியலில் வடதமிழகம் பின்தங்கி இருப்பதைப் போல இலக்கியத்திலும் இதுதான் நிலை. குறிப்பாக திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற மாவட்டங்களில் இலக்கிய வறட்சி அதிகம்.

அவ்வகையில், வடஆர்க்காடு மாவட்டத்திலிருந்து தொடர்ந்து எழுதிவரும் கவிப்பித்தன், நம்பிக்கை தரும் படைப்பாளியாக இருக்கிறார். ‘மடவளி’ நாவல் வழியாகக் கவனம் ஈர்த்த கவிப்பித்தனின் புதிய சிறுகதைத் தொகுப்புதான் ‘சாவடி’. இந்தத் தொகுப்பின் 12 சிறுகதைகளும் வடஆர்க்காடு மக்களின் மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது தனிச் சிறப்பு. அடுத்து, இந்தப் புனைவுகளில் விரவிக் கிடக்கும் உவமைகள். இவை ஒவ்வொன்றும் அந்த மண்ணிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டவை. மேலும், இவை வெறும் உவமையாக மட்டும் தேங்கிவிடாமல், கதாபாத்திரங்களின் அகத்தைச் சொற்களில் ஏந்தும் படிமமாகவும் நிலைபெறுகின்றன. தங்கநாற்கர சாலைத் திட்டத்தினூடாக இந்தியாவின் நான்கு பெருநகரங்கள் இணைக்கப்பட்டன. இந்தத் திட்டம், பல கிராமங்களுக்கு நகரத்தின் தோற்றத்தை உருவாக்கிவிட்டன. இதன் மூலமாகக் கிடைத்த வசதிகள், சில போதாமைகளையும் ஏற்படுத்தின. மக்களுக்குள் ஒரு செயற்கையான அவசரத்தை இந்தத் திட்டம் உருவாக்கியது. வாகன விபத்துகள் அதிகரித்தன. இந்தப் புள்ளியை விரிவாக்கி ‘அகாலம்’ என்ற கதையாக எழுதியிருக்கிறார் கவிப்பித்தன். இவருடைய பெரும்பாலான கதைகளில் ‘ஹார்ன்’சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. நவீனத்துவம் அளித்த இந்த வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு இடையில் கேட்கும் ஹார்ன் சத்தம், அதன் குறைபாடாகத் தொடர்கிறது.

தொகுப்பின் குறிப்பிடத்தக்கச் சிறுகதை ‘பாட்டி மரம்’. கிராம வாழ்க்கைக்கு ஒரு முருங்கை மரம், சில வாழை மரங்கள், ஒரு பசு மாடு போதும் என்பார்கள். பெண்களுக்கான வருவாயாக இவை இப்போதும் இருக்கின்றன. சித்தர்கள், ‘பிரும்ம விருட்சம்’ என்றே முருங்கையை அழைக்கின்றனர். முருங்கை மரம் குறித்தும் அதன் பண்பாட்டு விழுமியங்கள் குறித்தும் விரிவாக எழுதப்பட்ட கதையாக ‘பாட்டி மர’த்தைச் சொல்லலாம். தோல்வியில் முடியும் கலப்புத் திருமணத்தை முன்வைத்து எழுதப்பட்ட ‘ஒளிந்துகொள்ளும் பூதங்கள்’ கதையும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது.

கவிப்பித்தன் நவீன வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாலும் அவரது மூளைக்குள் கிராம வாழ்க்கையின் நினைவுகளே சேகரமாகியுள்ளன. வேலூரின் வெயிலும் வியர்வையும் இவரது கதாபாத்திரங்கள் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. இவரது புனைவுகளில் தென்படும் வெகுளித்தன்மையானது புனைவுகளுக்கும் வாசகர்களுக்கும் இடையில் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.

- சுப்பிரமணி இரமேஷ்,
‘காலவெளிக் கதைஞர்கள்’ நூலின் தொகுப்பாசிரியர்.
தொடர்புக்கு: ramesh5480@gmail.com

SCROLL FOR NEXT