தன் ஆசிரியரைப் போலவே ஆசிரியரின் தாசனாகத் தன்னை அறிவித்துக்கொண்டதற்காக அல்ல, அவரைப் போலவே தானும் ஆசிரியரின் பாதையிலிருந்து விலகி தனிப் பாதை வகுத்துக்கொண்டதற்காகவே சுரதா என்கிற சுப்புரத்தினதாசன் நினைவுகூரப்படுகிறார். அவரது நூற்றாண்டு இப்போது தொடங்கியிருக்கிறது. இலக்கிய வெளியில் மரபுக் கவிதை தனது செல்வாக்கை இழந்துநிற்கும் இன்றைய நிலையில், மரபுக் கவிஞர்கள் மட்டுமின்றி, நவீனக் கவிஞர்களும் சுரதாவிடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.
காவிரிக் கரையின் புதல்வராகவே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் சுரதா. கோபாலகிருஷ்ண பாரதியாரின் ஊரான நரிமணத்துக்கு அருகே உள்ள பழையனூரில் 1921-ல் பிறந்தவர். இயற்பெயர் ராஜகோபாலன். சுத்தானந்த பாரதியின் தாக்கம் பெற்றவராக, பள்ளி நாட்களிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கியவர். குத்தூசி குருசாமி பதிப்பித்த பாரதிதாசன் கவிதைகளின் முதல் தொகுப்பை, பழையனூரில் டீக்கடை நடத்திவந்த அழகப்பன் படிக்கக் கொடுக்க அன்றிலிருந்து சுத்தானந்த பாரதியை மறந்துவிட்டு பாரதிதாசனைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார். அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமானது திராவிட இயக்கத்தின் பிரதான மையம் என்பதால் இயல்பாகவே அவரும் திராவிட இயக்கச் சார்பாளராக இருந்தார். இராஜாமடம், ஒரத்தநாடு பள்ளிகளில் படித்ததும் அதற்கு ஒரு காரணமாக அமைந்தது. அவருடன் பயின்ற மற்ற மாணவர்களும் பின்னாட்களில் திராவிட இயக்கத்தின் முக்கிய ஆளுமைகளாக உருவெடுத்தனர்.
பாரதிதாசனின் தாசன்
புதுவைக்குச் சென்று பாரதிதாசனைச் சந்திக்க முடிவெடுத்த அவர், வழிச்செலவுக்குப் பணமின்றி, கோயில் ஒன்றில் எட்டு நாட்கள் வெள்ளையடித்து அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு புதுவை கிளம்பினார். 1943 முதற்கொண்டு பாரதிதாசனிடத்தில் இரண்டு ஆண்டுகள் உதவியாளராக, மாதம் இருபது ரூபாய் ஊதியத்துக்குப் பணிபுரிந்தார். கவிதைகளைப் படியெடுக்கும் அந்தப் பணியே சுரதாவின் பயிற்சிக் களமாகவும் அமைந்தது. பாரதியைப் பரப்பும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட திரிலோக சீதாராம் தனது ‘சிவாஜி’ இதழில் சுரதாவின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு அவரைக் கவனப்படுத்தினார். பாரதியைவிட பாரதிதாசனே அறிவும் திறனும் அதிகம் வாய்க்கப்பெற்றவர் என்பது சுரதாவின் கருத்து. சிந்துக்குத் தந்தை பாரதி என்ற தனது ஆசிரியரின் கருத்தை மறுத்து அண்ணாமலை ரெட்டியாரே அந்தப் பெருமைக்குரியவர் என்ற சுரதா, அதுபோல தேசியக் கவி என்ற சிறப்பும் ராமசாமிராஜுவுக்கு உரியது என்றார். சுரதாவைப் பின்பற்றி உருவான பாரதிதாசனின் பரம்பரையும் பாரதியில் ஆர்வம் காட்டாது பாரதிதாசனையே முன்மாதிரியாகக் கொண்டது.
அரசியலில் பெரியாரையும் கவிதையில் பாரதிதாசனையுமே சுரதா வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டார். ஆனாலும், தனது எழுத்தியக்கத்தில் உள்ளடக்கம், வடிவம் என எதிலும் அந்தத் தாக்கம் வந்துவிடாதவாறு கவனமாகவும் இருந்தார். பாரதிதாசனிடமிருந்து சுரதா விலகி நிற்கும் புள்ளியும் அதுவே. பாரதிதாசனின் ‘புரட்சிக் கவி’ நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடிப்பதற்காக சென்னை வந்த சுரதா, அங்கிருந்து புதுக்கோட்டை சென்று சில காலம் தங்கினார். புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘தாய்நாடு’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய அந்தக் காலத்தில் பி.யு.சின்னப்பாவின் அறிமுகம் கிடைத்தது. அவர் நடித்த ‘மங்கையர்க்கரசி’ திரைப்படத்துக்கு 1945-ல் திரைக்கதை, வசனம் எழுதினார். தமிழில் புத்தகமாக வெளியிடப்பட்ட முதல் திரைக்கதை அதுவே.
திரைப் பாடல்களும் இலக்கியமே
திரையுலகில் அறிமுகமான காலகட்டத்திலேயே படங்களுக்குத் தொடர்ந்து திரைக்கதை, வசனம் எழுதினார் என்றாலும் ‘ஜெனோவா’, ‘அமரகவி’, ‘புதுவாழ்வு’ உள்ளிட்ட மிகச் சில படங்களே வெளியாயின. பாரதிதாசனைப் போலவே அப்போது பிரபலமாகிக்கொண்டிருந்த திரைப்படக் கலை வடிவத்தை மிகவும் நேசித்தார் சுரதா. திரைப் பாடல்களையும் இலக்கிய வடிவங்களில் ஒன்றாகவே அவர் கருதினார். தகுதியானவர்களும் திறமையானவர்களும் திரைப்படப் பாடல்களை எழுதுகிறபட்சத்தில், அந்தப் பாடல்கள் இலக்கியத் தகுதியைப் பெறும் என்று அவரது கடைசி நாட்கள் வரையில் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். பி.யு.சின்னப்பாவின் படத்துக்கு வசனம் எழுதிய அதே காலகட்டத்தில் தியாகராஜ பாகவதரின் படத்துக்கும் வசனம், பாடல்களை எழுதினார். பாகவதரின் ‘அமரகவி’ படத்துக்காக அவர் எழுதிய ‘யானைத்தந்தம் போலே பிறைநிலா’ பாகவதரின் பாடல்களிலேயே மிகவும் வேறுபட்டுத் தெரிவது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ படத்துக்கு எழுதிய ‘அமுதும் தேனும் எதற்கு’ பாடல் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
திரைப்படம் மட்டுமல்லாது இதழியல் பணிகளிலும் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ‘இலக்கியம்’, ‘காவியம்’, ‘ஊர்வலம்’ என்று பல்வேறு கவிதை இதழ்களை நடத்தியவர். காமராசன், இன்குலாப், அப்துல் ரகுமான் உள்ளிட்ட தமிழின் பிரபலக் கவிஞர்கள் பலரும் இந்த ஏடுகளின் வழியே அறிமுகமானார்கள். கவிஞர் பெருமன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி இளம் கவிஞர்களை ஊக்குவித்தார். அவரது தலைமையில் நடந்த கவியரங்கங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கவிதைகளை வாசித்திருக்கிறார்கள். சுரதாவின் இந்த இடைவிடாத இயக்கமே தமிழில் இன்றளவும் மரபுக் கவிதை மரணிக்காமல் இருப்பதற்கான காரணம்.
தனது பெயரிலேயே பதிப்பகம் ஒன்றையும் தொடங்கி நடத்தினார் சுரதா. ‘அமுதும் தேனும்’, ‘தேன்மழை’ உள்ளிட்ட அவரது கவிதைத் தொகுப்புகள் மட்டுமின்றி, முக்கியமான சொற்பொழிவுகளையும் மேற்கோள்களையும் தொகுத்து வெளியிட்டார். ‘வெட்டவெளிச்சம்’ என்ற தலைப்பில் அவர் தொகுத்து வெளியிட்ட தகவல்கள், முகிலின் ‘அகம் புறம் அந்தப்புரம்’ புத்தகத்துக்கெல்லாம் முன்னோடி முயற்சி. தமிழ்ச் சொல்லாக்கம் குறித்த அவரது குறிப்புகளின் தொகுப்பு அகராதியியலாளர்களுக்கும் மொழியியலாளர்களுக்கும் நல்லதொரு ஆவணம். அவர் தொகுத்து வெளியிட்ட குறிப்புகளின் வழியே, அவருடைய பல்துறை ஆர்வத்தையும் பரந்துபட்ட வாசிப்பையும் புரிந்துகொள்ள முடியும். கவிஞன் பிறக்கிறான், கவிதையெழுத கலைமகளின் அருள்பார்வை கிட்ட வேண்டும் என்பதுபோன்ற நம்பிக்கைகளைக் கேலிசெய்த சுரதா, கடின உழைப்பும் தொடர்ந்த பயிற்சியும் கவிஞனை உருவாக்கும் என்றார். தேடித் தேடி வாசிக்காதவன் கவிதை எழுத முயலக் கூடாது என்பது அவரது கருத்து.
எது கவிதை?
திரைப் பாடல்களைப் போலவே புதுக்கவிதைகளையும் இலக்கிய வடிவங்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டார் சுரதா. ஆனால், மரபிலிருந்து விலகி நின்ற உரைவடிவத்தைக் கவிதை என்று ஏற்கத் தயங்கினார். கவிதைக்கு உள்ளடக்கம் மட்டுமின்றி வடிவமும் அவசியம் என்று வலிறுத்திய சுரதா, வடிவத்தைப் பின்பற்றுவது மட்டுமே கவிதையாகிவிடாது என்று மரபுக் கவிஞர்களையும் எச்சரித்தார். 3,000-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதிய சுரதா, அவையனைத்தும் கவிதையாகிவிடாது, கொஞ்சம் தேறும் என்று கறாரான சுயமதிப்பீட்டையும் வெளியிட்டார். மரபுக் கவிதைகளின் உள்ளடக்கம் சார்ந்து தொடர்ந்து கட்டுடைப்புகளைச் செய்தவர் அவர். பிரபல நடிகைகளைப் பற்றிய ‘சுவரும் சுண்ணாம்பும்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பு பரபரப்பை உண்டாக்கியது. இத்தகைய அதிர்ச்சி மதிப்பீடுகள் அவரது முதல் தொகுப்பிலிருந்தே தொடர்ந்தன. முதல் தொகுப்புக்கு அவர் வைத்த தலைப்பு ‘சாவின் முத்தம்’.
நாற்பதுகளின் மத்தியில் ஜெகசிற்பியன் தனது ‘சிரஞ்சீவி’ இதழில் சுரதாவை உவமைக்கவிஞர் என்று குறிப்பிட்டிருந்தார். அதுவே பின்பு அவரின் சிறப்புப் பெயராகவும் ஆனது. உவமையணியைச் சிறப்பாகக் கையாண்டதால் மட்டுமே உருவான பெயரல்ல அது. அதற்கு முந்தைய உவமைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதுச் சுவையை உருவாக்கியதாலும் கிடைத்த பெயர். ஓர் உதாரணத்துக்கு, வினாக்குறி படுத்ததுபோல இருக்கும் மீசை, கொட்டுகின்ற தேளின் கொடுக்குமீசை, மிளகாய்க் காம்புபோல மீசை, ஆட்டுக்குட்டி வால்போல மேலே தூக்கி வளர்த்துள்ள மீசை என்று மீசையைக் குறித்து மட்டுமே அவர் எழுதிய உவமைகளைச் சுட்டலாம். கவிதை எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு சுரதா சொன்ன பதில் இது: ‘முத்தத்தைப் போல சுவையாகவும் சுருக்கமாகவும் இருக்க வேண்டும்’. அவர் உவமைத் திறம் மறுக்க முடியாததுதானே!
எளிதில் திருப்தியடையாது எழுதியதைத் தொடர்ந்து திருத்துவது சுரதா பின்பற்றிய எழுத்துமுறை. கவிதைகள் எழுதுவதற்கு முன்னால் படிக்கவும் சொன்ன அவரது அறிவுரை எல்லோர்க்கும் எல்லாக் காலத்துக்கும் பொருத்தமானது.
- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
நவம்பர் 23: சுரதா நூற்றாண்டு தொடக்கம்
சுரதாவின் இடைவிடாத இயக்கமே தமிழில் இன்றளவும் மரபுக்கவிதை மரணிக்காமல் இருப்பதற்கான காரணம்! எளிதில் திருப்தியடையாது எழுதியதைத் தொடர்ந்து திருத்துவது சுரதா பின்பற்றிய எழுத்துமுறை. கவிதைகள் எழுதுவதற்கு முன்னால் படிக்கவும் சொன்ன அவரது அறிவுரை எல்லோர்க்கும் எல்லாக் காலத்துக்கும் பொருத்தமானது.