இலக்கியம்

சஜ்யஜித் ராய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

செய்திப்பிரிவு

சத்யஜித் ராய் உருவாக்கிய பாத்திரங்களில் துப்பறிவாளர் ஃபெலுடாவும், அறிவியலாளர் ஷாங்குவும் மிகவும் புகழ்பெற்றவர்கள். ராயின் மகன் சந்தீப் ராய் இயக்கும் படமொன்றில் இந்த இரண்டு பாத்திரங்களும் ஒன்றாக இடம்பெறப் போகிறார்கள். ராயின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இப்படியொரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

சந்தீப் ராய் இதுவரை ஃபெலுடா பாத்திரத்தை வைத்து ஆறேழு படங்களும், பேராசிரியர் ஷாங்கு பாத்திரத்தை வைத்து ஒரு படத்தையும் (ப்ரொஃபஸர் ஷாங்கு அண்டு எல் தொரடோ) இயக்கியிருக்கிறார். “இன்று வரை நான் ஃபெலுடாவையும் ஷாங்குவையும் தனித் தனிக் கதைகளில் வைத்துதான் இயக்கியிருக்கிறேன். அந்த இரு பாத்திரங்களையும் ஒரே படத்தில் கொண்டுவருவது என்பது ஒரே நேரத்தில் சவால் மிகுந்ததும் பரவசமூட்டுவதுமாகும். இந்தப் படம் திரை ரசிகர்களிடையே நீண்ட காலம் நினைவில் நீங்காமல் இருக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் சந்தீப் ராய்.

இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை என்றும், கரோனா பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலைமை சீரானதும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சந்தீப் ராய் கூறியிருக்கிறார். இந்தப் படத்தை எஸ்.வி.எஃப். தயாரிக்கவிருக்கிறது, 2021 இறுதிக்குள் படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ”இந்தப் படம் வங்க மொழியில் எடுக்கப்படும். ஃபெலுடா, பேராசிரியர் ஷாங்கு ஆகிய பாத்திரங்களின் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்” என்றார் சந்தீப் ராய்.

வங்கத்தின் புகழ்பெற்ற துப்பறிவாளர் பாத்திரம் ஃபெலுடா. சிக்கலான குற்றங்களைச் செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் அவனது திறமை வங்காளிகளின் மனதைப் பல தசாப்தங்களாகக் கொள்ளை கொண்டுவருகிறது. பேராசிரியர் ஷாங்கு புதுப் புதுக் கருவிகளைக் கண்டுபிடிப்பவர். மனித குலத்தின் நன்மைக்காகத் தனது கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்த விரும்புபவர்.

ஃபெலுடாவும் பேராசிரியர் ஷாங்குவும் அவர்கள் தொடர்பான பாத்திரங்களும் வங்காளிகளின் நினைவுகளுடன் பின்னிப் பிணைந்தவை. இந்தப் புதிய படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியைத் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். அது அந்தப் படத்தில் இடம்பெறவிருக்கும் விஷயங்களைப் பற்றிய தெளிவான பார்வையைத் தருகிறது.

“ஃபெலுடாவையும் பேராசிரியர் ஷாங்குவையும் ஒரே படத்தில் பார்க்கவிருப்பது வங்கத் திரைப்பட ரசிகர்களுக்கு மகத்தான விஷயமாக இருக்கும். எனக்கு சந்தீப் ராயின் திரைப்பட உருவாக்கத்தின் மீது பெரும் நம்பிக்கை இருக்கிறது, தனது தந்தையின் படைப்புகளைக் கொண்டு அவரால் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்று நம்புகிறேன்” என்கிறார் எஸ்.வி.எஃப்.பின் இணை நிறுவனரும் இயக்குநருமான மஹேந்திர சோனி.

ஃபெலுடாவின் அதிரடியும் ஷாங்குவின் கண்டுபிடிப்புகளும் அவர்களது சாகசங்களும் ஒரே படத்தில் இடம்பெறவிருப்பது வங்க மக்களுக்குக் கிடைக்கும் அற்புதமான பரிசாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

© தி இந்து, தமிழில்: தம்பி

SCROLL FOR NEXT