இலக்கியம்

ஒரு நிமிடக் கதை: உதாரணம்

எம்.விக்னேஷ்

சுசீலா அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு ஆசிரியையாக சேர்ந்து இரண்டு மாதங் கள்தான் ஆகி இருந்தது. அதனால் எந்த மாணவரையும் பற்றி தனிப்பட்ட முறையில் அவளுக்கு தெரியாது.

அன்று வருகை பதிவு எடுத்துக் கொண்டிருந் தாள். “மாணிக்கம்,..” என்று கூப்பிட்டாள். பதில் இல்லை. அடுத்த பெயருக்கு செல்லும் போது, மாணவர்களிடையே சிரிப்பு சத்தம். “உஷ்.... என்ன சிரிப்பு” என்று சொல்லி நிமிர்ந்தால் வாசலில் மாணிக்கம் நின்று கொண்டிருந்தான்.

“எங்க வந்த மாணிக்கம்? உனக்கு தினமும் தாமதமா வர்றதே வேலையா போச்சு.”

“டீச்சர், இன்னைக்கு ஒரு நாள் மட்டும்” என்று கெஞ்சினான் மாணிக்கம்.

“எல்லாரும் பார்த்துக்கோங்க. இவனை மனசுல வச்சுக்கிட்டு எல்லோரும் வாழ்கையில முன்னேறணும் புரியுதா. இவன மாதிரி தாமதமா வந்தா வாழ்கையில எதுவும் சாதிக்க முடியாது... சரி சரி. உள்ளே போ” என்று சிடுசிடுத்தாள்.

மீண்டும் மாணவர்கள் மத்தியில் சிரிப்பலை.

அன்று கோவிலுக்கு சென்ற சுசீலா வாசலில் பூ வாங்கிக் கொண்டிருந்தாள்.

“டீச்சர்.. வாங்க” என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தால் மாணிக்கம் நின்று கொண்டிருந்தான்.

“அம்மா. நான் சொல்லுவேன்ல எங்க டீச்சர். இவங்கதான்” என்று பூக்காரப் பெண்மணியைக் காட்டினான்.

“டீச்சரம்மா என் பையன் நல்லா படிக் கிறானா.?” என்றவளிடம் அவன் தாமதமாக வருவதை பற்றி கூறலாம் என்று எண்ணுவதற் குள் அவளே, “இவங்க அப்பா இறந்ததுக்கு அப்புறம் நானே ஒண்டியா கடையை பார்க்க கஷ்டப்பட்டேன். இவன சொல்லுங்கம்மா.. எவ்ளோ சொல்லியும் கேக்காம காலையில சைக்கிள மிதிச்சு பூ வாங்கி கொடுத்துட்டு , கடைய தெறந்துட்டுதான் ஸ்கூல் போறான்.. படிப்பு என்னம்மா ஆவறது” என்றாள்.

சுசீலா முதன்முதலாக குருவுக்கு பாடம் சொல்லிய சீடனை அங்கு பார்த்தாள்.

மறுநாள் வகுப்புக்கு மாணிக்கம் தாமத மாக வந்த போது சுசீலா, “இவனை மனசுல வச்சுக்கிட்டு எல்லோரும் வாழ்கையில முன் னேறணும் புரியுதா?” என்றாள் வேறு அர்த் தத்தில் அவனை முன் உதாரணமாக்கினாள்.

SCROLL FOR NEXT