இலக்கியம்

தமிழின் பிரபஞ்சத் தன்மையை நினைவூட்டியவர்

செய்திப்பிரிவு

மா.அரங்கநாதனின் எழுத்துகள் நமக்கு வழங்கும் தனித்த அனுபவம் எத்தகையது என்பதற்கு, அவரது சிறுகதைகளை வாசிக்கும்போது கிடைக்கக்கூடிய சுயபிரதிபலிப்பின் அனுபவத்தைச் சொல்லலாம். அத்தகைய தனித்துவம் அவரது சிறுகதைகளுக்கு எவ்வாறு வாய்த்தது? அவர் கொண்டிருந்த தமிழ் மரபின் மீதான உறுதியான புரிதலும் பார்வையுமே முழுக் காரணம் எனலாம். தமிழுக்கான சுயமரபுள்ள மெய்யியல் பார்வை என்பது, சங்ககாலம் தொட்டு இருந்துவந்திருக்கிறது என்று மா.அரங்கநாதன் நம்பினார். தனக்கென்று முன்னொரு மெய்யியல் கூறுகளில் இருந்துதான் சங்க இலக்கியம் பாடப்பட்டிருக்கும் என்று பேசிவந்தார். அதன் அடிப்படையில்தான் அவரது எழுத்தாக்கங்கள் வடிவம் கண்டன.

சங்க இலக்கியத்தின் உட்பொருளாக இம்மை வாழ்வின் தன்மைகள், அந்தக் கவிதைகளில் பயின்றுவரும் ஒருவித இன்மைப் பண்பு ஆகிய இரண்டையும் வாழ்க்கையோடு இனம்கண்டதன் பயனாகத்தான் அவரது கதைகள் விளைகின்றன. சங்க இலக்கியப் பாடல்களில் மறுமை, ஆன்மா போன்ற வார்த்தைகளின் பொருளைக் குறிப்பிடுவதற்கான எந்தச் சொல்லும் இல்லை. இம்மை வாழ்வின் கவித்துவமானது வாழ்க்கையோடு உறவுள்ள இன்மைப் பண்பின் பொருண்மையோடு அரங்கநாதனின் படைப்புகளில் சேர்கிறது. அவரது சிறுகதைகள் இந்தப் பண்பைச் சுற்றியே எழுதப்பட்டுள்ளன.

அதிகப் பக்க அளவில் அல்லாமல் எழுதப்பட்டவை மா.அரங்கநாதனின் சிறுகதைகள். அதன் பயனாக வியக்கத்தக்க சுருக்கத்தன்மையும் செறிவும் வடிவ நேர்த்தியும் அதன் பிரத்யேக எழுத்துமுறையாகப் பரிமளிக்கின்றன. கதையை நிகழ்த்தும் போக்கில் தனது அழுத்தமான உணர்வையும் கதையின் பொருண்மையையும் பிரதியில் பதித்துவிடும் ஆற்றலும் மிக்கவர். ஒரு சிறுகதையை வாசித்து முடித்துவிட்ட பின்னர், கதையைச் சொல்லி முடித்துவிட்டாரா அல்லது இன்னும் நீட்டிக்கப்போகிறாரா என முன்தீர்மானிக்க முடியாத புள்ளிக்குக் கதை சொல்வதை நகர்த்துகின்றன இவர் கதைகள். அதிலும் புதிர்மையான கட்டத்தில் கதை சொல்வதை நிறுத்திக்கொள்ளும் பாணி இவருடையது. கதையின் ஓட்டத்தில் மறைந்துவிடும் இணைப்புகள் கதையின் இறுதியில் இணைந்துகொள்வது நிகழும்.

முத்துக்கறுப்பன் யார்?

மா.அரங்கநாதனின் கதைமாந்தரான ‘முத்துக்கறுப்பன்’ எத்தகைய பண்பை உடையவன்? அவன் கதைகளில் உலவும் கதாபாத்திரமாக மட்டுமே செயல்படுகின்றானா அல்லது கதைக்குப் புறத்திலும் நடமாடுபவனாக இருக்கிறானா என எண்ணத் தோன்றும். மரபான கதை சொல்லும் முறையில் இயங்கும் கதாபாத்திரக் கோட்பாட்டைச் சேர்ந்தவன் அல்ல அவன். மா.அரங்கநாதனின் மெய்யியல் உலகின் குறியீடாக அவன் விளங்குகிறான். முத்துக்கறுப்பன் என்பவன், பல்வேறு அவைதீக நெறிகளின் இழைகளை வரித்துக்கொண்ட பன்மையுருவானவன். மா.அரங்கநாதன் தனது அனைத்துச் சிறுகதைகளிலும் முத்துக்கறுப்பனை ஒரே மாதிரியாகப் பாவிப்பதில்லை. அந்தந்தக் கதைகளின் போக்கில் அவ்வப்போது எழும் இம்மை வாழ்வின் நெருக்கடிகளுக்கிடையே செயலாற்றுபவனாக விளங்குகிறான். மேலும், அவைதீக நெறியில் நின்றபடி அந்த மனோபாவத்துடன், கதைசொல்லியின் சுயவிசாரணைப் புள்ளியாகவும் மாற்றிக்கொள்கிறான்.

முத்துக்கறுப்பன் நம் சுயமரபின் வடிவமாக இருந்தாலும் தான் சார்ந்த கலாச்சாரத்தின் வட்டத்துக்குள் மட்டுமே சஞ்சரிக்கக்கூடியவனாக இருப்பதில்லை. அவன் பிற கலாச்சாரங்களோடும் உரையாடுபவனாகவும் சில கதைகளில் தென்படுகிறான். ஒரு கலாச்சாரம் இன்னொரு கலாச்சாரத்தோடு ஏற்படுத்திக்கொள்ளும் பரிவர்த்தனையின் பயனாகக் கிடைக்கக்கூடிய புதியதொரு பார்வையையும் முத்துக்கறுப்பன் பிரதிபலிக்கிறான். உதாரணப்படுத்த வேண்டுமென்றால், ‘ஜேம்ஸ் டீனும் செண்பகராமன் புதூர்க்காரரும்’ என்ற சிறுகதையைச் சொல்லலாம். அதில் ஹாப்மன் என்ற அமெரிக்கரால் சிவசங்கரன் எனும் முத்துக்கறுப்பன் அறிமுகப்படுத்தப்படுகிறார்.

தமிழ்த்தன்மை

மா.அரங்கநாதனின் இந்தக் கதை அவருடைய மற்ற கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இருவேறு கலாச்சாரப் புலங்களிடையே கதை நிகழ்கிறது. இறுதியாக, ஜேம்ஸ் டீனைப் பற்றி முத்துக்கறுப்பன் இப்படிச் சொல்கிறார். ‘‘இந்த ஜேம்ஸ் டீன் வானவெளியில் மிதந்துகொண்டிருக்கும் மனிதன். இனி நடிக்க வேண்டியவன் கிடையாது” எனக் கதையைப் பிரபஞ்சத்தன்மைக்குள் லாகவமாக நகர்த்திவிடும் பக்குவம் மா.அரங்கநாதனுக்கு இயல்பாக வாய்த்தது.

இறுதியாக, மா.அரங்கநாதனின் சிறுகதைகளில் இழையோடும் தமிழ்த்தன்மை என்பது ஒருவகையான தமிழுக்கே உரிய அறிதல்முறையாகும். சுயமரபிலிருந்து கிளைத்தெழும் மெய்யியல் மற்றும் அவைதீக மரபின் நீட்சியாக அவர் சைவ சித்தாந்தத்தைக் கண்டார். அதைத் தன் சிறுகதைக் களன்களாகவும் உருமாற்றிக்கொண்டார். அதன் விளைவாகவே அவரது சிறுகதையின் முழுமைக்குள்ளிருந்து அதன் பகுதிகளையும் பகுதிகளிலிருந்து முழுமைக்குமான ஊடாட்டத்தைக் கதை சொல்லிச் செல்வதைத் தன் பாணியாக்கிக்கொண்டார்.

- எஸ்.சண்முகம், ‘ஈர்ப்பின் பெருமலர்’ உள்ளிட்ட கவிதை நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: s.shanmugam65@gmail.com

SCROLL FOR NEXT