பெண்மையையும் குழந்தைமையையும் இயற்கையின் வெளிப்பாடுகளாய் பார்க்கும் ஓவியங்கள் காயத்ரி காமூசினுடையவை. சமீபத்தில் தனது ‘IT IS A GIRL” வரிசை ஓவியங்களை சென்னையில் காட்சிக்கு வைத்திருந்தார்.
தன் அறிவாலும் தொழில்நுட்பத்தாலும் இயற்கையைத் தன்வயமாக்கிய மனிதன் மீதான விமர்சனங்களாக இவரது ஓவியங்கள் இருக்கின்றன. அதேவேளையில் பிரமாண்டமான எளிமையையும் அழகையும் தக்கவைத்துக் கொண்டிருப்பவை இவரது ஓவியங்கள்.
1966-ல் ஸ்பெயின் நாட்டில் ரொஹாலஸ் நகரில் பிறந்த இமாகுலாதா காமூஸ், அந்நாட்டிலேயே ஓவியம் மற்றும் சுடுமண் சிற்பப் பயிற்சி பெற்றவர். 1992-ல் ஒரு கலைப்பயணமாக இந்தியாவிற்கு வந்தார். அவரை திருவண்ணாமலை ஈர்த்தது. கவிஞரும், இயற்கை விவசாயியுமான ஆனந் ஸ்கரியாவை சந்தித்தார். இருவரும் சேர்ந்து இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். ஒருகட்டத்தில் இரு குழந்தைகளோடு திருவண்ணாமலைக்கு வெளியே ஏரிக்கரையில் தாங்களே கட்டிய சிறுகுடில் ஒன்றில் வசிக்கிறார்.
ஓவியர் காயத்ரி காமூசின் ஓவியங்களில் இரண்டு நிலங்களின் நிறங்களும், அழகியலும் சேர்ந்தே இருக்கிறது. ஸ்பானிய வண்ணங்களின் பின்னணியில், நிலப்பரப்புகளின் பின்னணியில் இந்தியக் குழந்தைகள் துலங்குகின்றன. ஸ்பெயினின் நிலப்பரப்புகளும் இந்தியக் குழந்தைகளும் சேர்ந்து இவரது ஓவியங்களுக்கு ஒரு கனவுத்தன்மையைத் தருகின்றன.
இவரது ஓவியங்களில் குழந்தையின் கன்னத்தில் வைக்கப்பட்டிருக்கும் திருஷ்டிப் பொட்டின் வடிவில் புள்ளிகள் இடம்பெறுகின்றன. ஸ்பானிய நடன வடிவான பிளெமங்கோ நடனக்காரர்களின் உடைகளில் சிவப்புப் புள்ளிகள் நீங்காமல் இடம்பெற்றிருப்பவை என்கிறார் காயத்ரி. இவரது ஓவியங்கள் ஒருவகையில் ப்ரீடா காலோவின் ஓவியங்களை ஞாபகப்படுத்துபவை.
இவரது பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் அளவில் பெரிய ரிப்பன்களை தலையில் அணிந்திருப்பவர்கள். இழந்த இயற்கையை ஞாபகப்படுத்துபவர்களாக, சரி செய்துவிட்டதாக பாவிப்பவர்களாக இவரது ரிப்பன் அணிந்த குழந்தைகளும் பெண்களும் இருக்கிறார்கள் என்கிறார்.
ஒரு அமைதியான, நேசமுள்ள உலகத்துக்கான அழைப்புதான் காயத்ரி காமூசின் ஓவியங்கள்.