இலக்கியம்

காமிக்ஸ் கார்னர்: புதையலைத் தேடி...

வெ.சந்திரமோகன்

புதைந்துபோன புதையல்
கதாசிரியர்: கிளாடியோ நிஸி
ஓவியர்: ஜோஸ் ஆர்ட்டிஸ்
தமிழில்: எஸ்.விஜயன்
லயன் காமிக்ஸ் வெளியீடு
பிரகாஷ் பப்ளிஷர்ஸ்
அம்மன்கோவில்பட்டி, சிவகாசி - 626189.
தொடர்புக்கு: 9842319755
விலை: ரூ.135

புதையல் எனும் வார்த்தை ஏற்படுத்தும் மயக்கம் அலாதியானது. பேராசை, மர்மம், சாகசம், துரோகம், வஞ்சகம், தியாகம் என ஏராளமான அம்சங்கள் நிறைந்தவை புதையல் குறித்த புனைவுகள். ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் படங்கள் முதல் காமிக்ஸ் வரை நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். அதிரடி ரேஞ்சர் டெக்ஸ் வில்லரும் அவரது சகா கிட் கார்சனும் தோன்றும் இந்தக் காமிக்ஸ் கதையும் அப்படித்தான்.

வங்கிகளில் கொள்ளையடித்த பணத்தை, மெக்சிகோவில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் மறைத்துவைத்திருக்கிறான் கொள்ளையன் லின்க் வாக்கர். ஒரு கொள்ளை முயற்சியின்போது அவனது கூட்டத்தின் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்துகிறார்கள். பலர் உயிரிழக்க இருவர் கைது செய்யப்படுகிறார்கள். மலை மீதிருந்து குதிரையுடன் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறான் வாக்கர். புதையல் பற்றிய ரகசியம் மட்டும் உயிர்ப்புடன் உலவுகிறது. இதற்கிடையே அந்தப் பணத்தை எடுத்து வங்கிகளிடம் கொடுக்க முன்வருகிறாள் அவனது மனைவி ஃப்ளோரா, அதில் 10% பங்கு வேண்டும் எனும் நிபந்தனையுடன்.

சுரங்கத்தில் புதையல் எங்கு இருக்கிறது என்பதைக் குறிக்கும் வரைபடம் அவள் கைவசம் இருக்கிறது. ஆனால், அந்தச் சுரங்கம் இருக்கும் இடம், சிறையில் இருக்கும் இரு கொள்ளையர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே, அவர்களில் ஒருவனை இந்தத் திட்டத்தில் பயன்படுத்த வங்கிகளும், ரேஞ்சர்களின் தலைமையகமும் முடிவெடுக்கிறார்கள். ஆபத்தான இந்தப் பயணத்தில் டெக்ஸ் வில்லரும், கிட் கார்சனும் துணை நிற்க வேண்டும் என்பதுதான் ஏற்பாடு. வறண்ட பாலை நிலத்தில் நீளும் பயணம் முழுவதும் அள்ளக் குறையாத சாகசம். எல்லாவற்றையும் தாண்டி ஃப்ளோரா வெளிப்படுத்தும் வீரமும் சாதுரியமும் இந்தக் காமிக்ஸைத் தனித்துக் காட்டுகின்றன. ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் எதிர்நாயகி சுப்புவை நினைவுபடுத்தும் பாத்திரம். படித்துப் பாருங்கள், ஒரு முழு நீள வெஸ்டர்ன் படத்தைப் பார்த்த உணர்வைப் பெறலாம்!

SCROLL FOR NEXT