சாவர்க்கர் எழுதிய ‘எரிமலை’ தொடங்கி வில்லியம் டேல்ரிம்பிள் எழுதிய ‘கடைசி முகலாயன்’ வரை 1857 சிப்பாய்க் கலகத்தைப் பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பேசுகின்றன. இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வரலாற்றைச் சிப்பாய்க் கலகத்திலிருந்து தொடங்குவதுதான் இன்றும் வழக்கமாக இருந்துவருகிறது. அதற்கும் 50 ஆண்டுகளுக்கு முன்பே நடந்த வேலூர் புரட்சியைக் குறித்தோ, அதற்கும் முன்பே 1801-ல் தென்தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போர்களைக் குறித்தோ இந்திய வரலாற்றாசிரியர்கள் பொருட்படுத்துவதே இல்லை. ஏன், தமிழக வரலாற்றிலும்கூட இவை உரிய முக்கியத்துவம் பெறுவதில்லை.
சிப்பாய்க் கலகம் தோல்வியுற்று, இரண்டாம் பகதூர் ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டதை எழுதும் வரலாற்றாசிரியர்கள், தமிழகத்தில் கம்பெனி ஆட்சிக்கு எதிரான போரில் தோல்வியுற்று, பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட சிவகங்கை மன்னர் பெரிய உடையணரையும் 72 வீரர்களையும் பற்றிப் பேசுவதே இல்லை. ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டதற்காக இந்திய அளவில் நாடு கடத்தப்பட்ட முதல் மன்னர் அவர். பினாங்கிலிருந்து பின்பு சுமத்ராவுக்கு இடம்மாற்றப்பட்டார், அங்கு உடல்நலம் குன்றி தனது 34 வயதில் இறந்தார். பினாங்கில் தீவாந்திரத் தண்டனையை அனுபவித்தவர்களுள் சின்ன மருதுவின் 12 வயது மகன் துரைசாமியும் ஒருவர். நாடு கடத்தப்பட்டவர்களில் சாதி பேதமின்றி எல்லா சமூகத்தவர்களும் இருந்தார்கள் என்பது அன்று நிலவிய சமூக நல்லிணக்கத்தை எடுத்துச்சொல்கிறது.
காளையார்கோவில் போரைப் பற்றி ‘1801’ என்ற தலைப்பில் நாவல் எழுதிய மு.ராஜேந்திரன், அப்போரில் அடைந்த தோல்வியால் விளைந்த துயரங்களையும் தீவாந்திரத் தண்டனையையும் குறித்து ‘காலா பாணி’ என்ற தனது அடுத்த நாவலை எழுதியிருக்கிறார். இது முந்தைய நாவலின் தொடர்ச்சி என்றும் சொல்லலாம். எதிரியின் அணியைச் சேர்ந்தவர் என்றபோதும் வீரர் அல்லாத ஒருவரைச் சிறைப்படுத்துதல் கூடாது என்ற போர் நெறியிலிருந்து வழுவாதவர் சின்ன மருது. அந்த நெறியைச் சுட்டிக்காட்டி அவரிடமிருந்து கணவரை மீட்டு அழைத்துவந்த ஓர் ஆங்கிலப் பெண்ணின் நன்றியுணர்ச்சி, முதல் அத்தியாயத்திலேயே வஞ்சகங்களுக்கு அஞ்சாத போர் நடவடிக்கைகளில் மனித விழுமியங்கள் எதிர்கொள்ளும் சிக்கலைப் பற்றிப் பேசும் தீவிரமானதொரு உரையாடலுக்கு இந்த நாவலை இட்டுச்சென்றுவிடுகிறது.
ஏறக்குறைய இரண்டு மாதக் கடற்பயணத்தில் கப்பலிலேயே மூவர் உடல்நலிந்து இறந்தது, பினாங்கில் தரையிறங்கியபோது பத்து பேருக்கும் மேல் மனப்பிறழ்வுக்கு ஆளானது என்று தீவாந்திரத் தண்டனையின் கொடுமை இந்த நாவலில் விவரிக்கப்படுகிறது. கூடவே, திப்புசுல்தானின் கேரளப் படையெடுப்பு, தென்கிழக்காசியாவில் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல்கள், கம்பெனி அதிகாரிகளின் ஊழல்கள், கம்பெனி நிர்வாகத்தில் கிறிஸ்தவப் பாதிரியார்கள் செலுத்திய செல்வாக்கு, கிறிஸ்தவத்தின் சமயப் பிரிவுகளிடையே நிலவிய பிணக்குகள், பினாங்குத் தீவின் நம்பிக்கைகள், ஒரு போர்த் தாக்குதல் அந்தப் பருவத்தின் ஒட்டுமொத்த வெள்ளாமைக்கும் கேடாகிப்போவது என்று 200 ஆண்டுகளுக்கு முந்தைய கம்பெனி ஆட்சிக்காலம் காட்சிகளாக விரிகின்றன. தமிழகத்தின் இன்றைய தவிர்க்கவியலாத காலை உணவான இட்லி, இந்தோனேஷியாவின் கண்டுபிடிப்பு என்பது போன்ற வரலாற்றுச் சுவாரஸ்யங்களும் ஆங்காங்கே எதிர்ப்படுகின்றன.
போரின்போது அப்பாவி மக்கள் பலியாகக் கூடாது என்ற நெறியில் உறுதியோடு இருந்ததே பாஞ்சாலங்குறிச்சியிலும் காளையார்கோவிலிலும் தோல்வியடைந்ததற்குக் காரணம். கட்டபொம்மு சகோதரர்களுக்கு அடைக்கலம் அளித்ததற்காகத் தனது கூட்டாளிகளையும் உறவினர்களையும் தூக்குக் கயிற்றுக்குக் கொடுத்துவிட்டு, எங்கோ ஒரு தீவில் தன்னந்தனியாகச் சிறைவாசம் அனுபவித்த பெரிய உடையணரை நம் நாடும் வரலாறும் ஏன் பேச மறுக்கிறது என்ற கேள்வியே இந்த நாவலை வாசித்து முடித்ததும் எழுகிறது.
கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றையும் கே.ராஜய்யன், எஸ்.ஜெயசீல ஸ்டீபன் முதலிய வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களையும் ஆதாரங்களாகக் கொண்டு இந்த நாவலுக்கான அடித்தளங்களைக் கட்டமைத்திருக்கிறார் மு.ராஜேந்திரன். வேலு நாச்சியாரும் அவரது மருமகன் பெரிய உடையணரும் தலைமறைவாயிருந்த விருப்பாச்சிக் காடுகளிலிருந்து பினாங்கு, சுமத்ரா வரையில் இந்த வரலாற்றுச் சுவடுகளைப் பின்தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். ஆதாரங்களைத் திரட்டுவதற்காக இவ்வாறு உழைப்பைச் செலுத்தியிருப்பினும் நாவல் வடிவத்தில் இன்றைக்குச் சாத்தியமாகியிருக்கும் நவீன உத்திகளை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாமோ என்று எண்ணவும் தோன்றுகிறது. ஏனெனில், வாசகர்களுக்கான புனைவுச் சவால்கள் எதுவுமின்றி நாவல் முழுவதுமே எளிமையாகவும் நேரடியாகவும் விளக்கப்பட்டுவிடுகிறது.
வரலாற்றுப் புத்தகம் என்ற வகைமையில், ஆங்கிலத்தில் வெளிவந்து தேசிய அளவில் கவனம்பெற வேண்டிய உள்ளடக்கம் கொண்ட நூல் இது. எனினும், புனைவின் துணையோடு அதைத் தமிழில் உணர்வுபூர்வமாகக் கடத்த முயன்றிருப்பது தமிழருக்குத் தம் வரலாற்றை நினைவூட்டும் நோக்கமாகவே இருக்க வேண்டும். அது நிறைவேறட்டும்.
*************************************
காலா பாணி
மு.ராஜேந்திரன்
அகநி வெளியீடு
வந்தவாசி-604408
தொடர்புக்கு: 98426 37637
விலை: ரூ.650