இது ஆந்திராவில் கடந்த எழுபது ஆண்டுகளாக இயங்கிவரும் இடதுசாரி இயக்கத்தின் வரலாறும் தொண்ணூறு வயது தாண்டிய ஒரு புரட்சியாளரின் சுயசரிதையாகவும் அமைந்த நூல். இருபதாம் நூற்றாண்டின் தென்னிந்திய அரசியல் வரலாறு இதில் வெளிப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் தீவிரமாக இயங்கி, கொடூரமாக ஒடுக்கப்பட்ட நக்ஸல் இயக்கத்தையும் நினைவுபடுத்துவது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கிட்டத்தட்ட எல்லாத் திசைகளிலும் கொந்தளிப்பும் எதிர்ப்பும் இருந்தன. இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது அதை ‘மக்கள் யுத்த’மாகக் கருதிய இடதுசாரிகள் யுத்தம் முடிந்த கையோடு அவர்கள் ‘மக்கள் நல இயக்கம்’ என்று கருதிய பாதையில் சென்றனர். இதில் வன்முறையும் படுகொலைகளும் இருந்தன. இதில் வியப்பென்னவென்றால், இந்த இயக்கத்தில் தீவிரமாக இயங்கிவர்கள் படித்தவர்கள். சிலர் வசதி படைத்தவர்கள். இந்த சுயசரிதையின் நாயகி கோடேஸ்வரம்மா வசதி படைத்த ரெட்டி வம்சத்தைச் சார்ந்தவர். பால்ய விதவை. இவளுடைய பாலகக் கணவன் காசநோயில் இறக்கிறான். ஆயுள் முடியப்போகிறது என்று தெரிந்தவன் கோடேஸ்வரம்மா மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவித்ததோடு தன்னுடைய சொத்தில் ஒரு பகுதியையும் எழுதி வைக்கிறான். கோடேஸ்வரம்மா கொண்டபல்லி கோடேஸ்வரம்மா என்று ஆவது மறுமணத்தினால்.
கணவன் சீதாராமைய்யாவும் முற்போக்கு எண்ணங்கள் கொண்டவர். ரெட்டி சமூகத்திலேயே வேறு ஒரு பிரிவைச் சேந்தவர். இத்தகவல்கள் இந்தச் சுயசரிதையில் வரும்போது சாதி, சாதிக்குள் சாதி என்று எப்படி இந்தியச் சமூகம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நீடிக்கும் நாகரிகமாக அமைந்தது என்று வியக்கவைக்கிறது. கோடேஸ்வரம்மாவுக்கு முதலில் மகள். அதன் பிறகு மகன். அந்த நாளிலேயே இவர்களின் இடதுசாரிப் போக்கால் பலமுறை தலைமறைவாக வாழ வேண்டிவருகிறது.
ஒரு பெண் போராளி நோயுறுகிறாள். கட்சி ஆணைக்கு இணங்க சீதாராமையா அவளைத் தன் வீட்டில் கவனித்துக் காப்பாற்றுகிறார். வலிப்பு வந்து விழும் அவளைத் தன் இரு கைகளாலும் தூக்கிப் படுக்கையில் கிடத்த வேண்டியிருக்கிறது. சொந்தபந்தங்கள் வெவ்வேறு மாதிரிப் பேசுகின்றன. நோயாளிப் போராளியின் சொத்துக்கு ஆசைப்பட்டு அப்போராளியை அவர் வீட்டில் வைத்துக்கொண்டிருக்கிறார் என்றுகூடச் சிலர் கூறுகிறார்கள். இதெல்லாம் கோடேஸ்வரம்மாவை அந்த வீட்டை விட்டு வெளியேறச் செய்கின்றன. கோடேஸ்வரம்மா ஆந்திர மகிள சபையில் பணிபுரியச் சென்றுவிடுகிறார்.
ஒரு முறை விரிசல் நேர்ந்த பிறகு கணவன் மனைவி சேர்ந்து வாழவில்லை. மகளின் திருமணத்துக்குக்கூட கோடேஸ்வரம்மாவுக்குக் கணவனிடமிருந்து முறையான அழைப்பு இல்லை.
ஒரு நாவலுக்குரிய நிகழ்ச்சிகளுக்கும் மனப் போராடங் களுக்கும் மத்தியில் இடதுசாரித் தோழர்களின் தீவிரம், கொள்கை முதலியன சொந்த வாழ்க்கையில் முழுக்கப் பிரதிபலிக்கவில்லை. திரும்பத் திரும்ப சாதி, ஒரு விதவையை மணந்துகொண்டதைத் திரும்பத் திரும்ப ஒரு வாதமாகக் கூறுவது இதெல்லாம் நிகழும்போது வருத்தமாக இருக்கிறது.
தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் கசப்பையும் மீறி, கொள்கைப் பற்றிலிருந்து கோடேஸ்வரம்மா சிறிதும் சமரசம் செய்துகொள்வதில்லை. இன்றுவரை ஒரு போராளியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். மகன் காவல் துறையினரால் கொல்லப்படுகிறான். அவனும் அவன் சகோதரியும் யார் சிபாரிசும் இல்லாமல் மருத்துவம் படித்தவர்கள். மகளின் கணவனும் மருத்துவர். ஒரு நாள் காரணமே தெரியாமல் அவர் இறந்துவிடுகிறார். சில மாதங்கள் பொறுத்திருந்தாலும் துக்கம் தாங்காமல் மகள் தற்கொலை செய்துகொண்டுவிடுகிறாள். கோடேஸ்வரம்மாவின் இழப்புகளுக்கு முடிவே இல்லை.
கௌரி கிருபானந்தன் இந்த மொழிபெயர்ப்பை மிகவும் சிறப்பாகச் செய்திருக்கிறார். தமிழ்நாட்டிலும் சட்டத்துக்குப் புறம்பானது என்று நினைக்கப்படும் கொள்கைகளில் தீவிரப் பற்று கொண்ட வீராங்கனைகள் உண்டு. கோடேஸ்வரம்மா புனைகதை, கவிதை, பாடல் முதலியன இயற்றும் ஆற்றல் பெற்றவர். நல்ல பாடகர். தன்னுடைய படைப்புகளுக்குப் பரிசுகளும் வாங்கியிருக்கிறார். இவ்வளவு ஆற்றல்கள், வாழ்க்கையின் மீது புரிதல் கொண்ட அவர், தன்னைப் போன்றே கொள்கைப் பிடிப்பு கொண்ட சீதாராமையாவுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. மனித இயல்பின் எதிர்பாராத வெளிப்பாடுகளை இந்தச் சுயசரிதை எடுத்துக் கூறுகிறது.
இது நூலில் வந்த ஒரு தகவல் அன்றே மிகவும் பேசப் பட்டது. முதல் இந்தியப் பொதுத் தேர்தலின்போது ஆந்திரத் தையும் உள்ளடக்கிய சென்னை மாநிலத்தில் காங்கி ரஸுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாறாக, கம்யூனிஸ்டுகள் அரசே அமைக்கக் கூடிய அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள். பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்திப் பிரச்சாரம் செய்ய முடியாத ராவி நாராயண ரெட்டி ஜவாஹர்லால் நேரு பெற்ற வாக்குகளை விட அதிகமாகப் பெற்று வெற்றி பெறுகிறார்!
இந்த தொண்ணூறு வயது வீராங்கனையின் சுயசரிதை பிரமிக்க வைக்கிறது. எத்தனை இழப்புகள், ஏமாற்றங்கள்! ஆனால், தன் வாழ்க்கையைக் கசப்புணர்ச்சி, வெறுப்பு இல்லாமல் திரும்பிப் பார்க்கக்கூடிய ஓர் அசாதாரணப் பிறவியின் அசாதாரண சுயசரிதை இது.
-அசோகமித்திரன், தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர், ‘தண்ணீர்’, ‘அசோகமித்திரன் சிறுகதைகள்’ போன்ற நூல்களின் ஆசிரியர்.